|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "திமுக-விலிருந்து குடும்பத்துடன் ஸ்டாலினும், அதிமுக-விலிருந்து
பழனிசாமியும் விலகினால்தான் அந்தக் கட்சிகளுக்கு நல்லது நடக்கும்" என தவெக
அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருக்கிறாரே? பதில்: மாநிலக்
கட்சிகள் பெரும்பாலும் ஒரு தலைமைக் குடும்பத்தின், அல்லது தலைமையைப் பிடித்து வைத்திருக்கும் ஒருவரின், நலனுக்காக ஒரு பண்ணை போல் நடத்தப் படுகின்றன.
பண்ணையும் பண்ணையாரும் அங்கு உடலும் உயிரும் போலப் பின்னி இருப்பவை - எளிதில்
அவற்றைப் பிரிக்க முடியாது. |
|
2. கேள்வி: விஜய் என்ற தனி மனிதரை மையமாக வைத்து, அவரைச் சுற்றி
இயங்கும் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். அவர் தலைமையில் தன்னலமற்ற சிறந்த
ஆட்சி சாத்தியமா? பதில்: தவெக-வும் விஜய் என்ற தனி மனிதர் மையமாக, 99% பிரதானமாக, இருக்கும் கட்சிதான். அவர் கட்சி சட்டென்று
முதல்முறையாக ஆட்சிக்கு வந்தாலும், அரசு நிர்வாகத்தின் மேல்மட்டத்திலும்
அடிமட்டத்திலும் முன்பே வளர்ந்திருந்த லஞ்சத்திற்கு எதிராக விஜய் இதுவரை
எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை, யாரும் எதிர்பாராதவை. இதில் அவர் தொடர்ந்து
தன்னை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவர் கவனிக்கப் படுவார். இன்னொன்று: அரசு நிர்வாகத்தில் ஒரு
முதல்வர் தன்னளவில் அநேகமாகச் சரியாகச் செயல்படுவது ஒன்று; அதைவிட மிகவும் கடினமானது, சரியில்லாத மனிதர்கள் கட்சியிலும் அரசு
நிர்வாகத்திலும் அடைக்கலமாகத் தன்னருகில் வந்து சேர்ந்து முக்கியப் பணிகளில்
ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது. இந்த இரண்டாவது விஷயத்தில் விஜய்க்குப் பாஸ்
மார்க் இப்போது இல்லை. |
|
3. கேள்வி: அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள்
அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த்
வரவேற்பு அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "தவெக-வில்
இணைந்தவர்களை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம், அவர்களுக்கு உரிய பதவிகள்
மற்றும் மரியாதை கண்டிப்பாகக் கிடைக்கும்" என்று உறுதி அளித்திருக்கிறாரே? பதில்: "நாலுகால்
பாய்ச்சலில் எம்மிடம் வாருங்கள். உங்களுக்கு உரித்தான கொள்ளு நிச்சயம்"
என்று பலருக்கும் புரியுமாறு அவர் உணர்த்துகிறார். |
|
4. கேள்வி: திமுக-வின் அனிதா ராதாகிருஷ்ணனைப் போலீசார் கைது
செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் வழியில், "காவல்துறை
அதிகாரிகள் என்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாகத் தவெக-வில்
சேருமாறு கட்டாயப்படுத்தினர். நான் மறுத்துவிட்டேன்" என்று அவர்
நிருபர்களிடம் சொல்லி இருக்கிறாரே? பதில்: அப்படி நடந்திருந்தால், யாரோ தவெக-விற்கு வேண்டாதவர் அதை அனிதா
ராதாகிருஷ்ணனிடம் முயற்சித்திருக்க வேண்டும். அந்த மனிதருக்கும் தவெக-விற்கும்
என்ன பகையோ? |
|
5. கேள்வி: "அதிமுக-விலிருந்து துரோகிகள் வெளியேறுவதால், தொண்டர்கள்
பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்" என்று அக்கட்சியின் பொதுச்செயலர்
பழனிசாமி கூறி இருக்கிறாரே? பதில்: பட்டாசு
கொளுத்தும் எண்ணிக்கையிலாவது கட்சியினர் நம் தலைமையின் கீழ் அதிமுக-வில் எஞ்சி
இருக்கிறார்களே என்ற நிம்மதி பழனிசாமிக்கு இருக்கும். |
|
பகுதி 110 // 04.07.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment