Thursday, 2 July 2026

கேள்வி-பதில் (02.07.2026)

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "ராகுல் பிரதமராகும் போது, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, காவிரி நீர் பிரச்சனைக்குத் தீர்வு, மேகதாது அணை கட்டத் தடை, மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு, தமிழகத்திற்கு நிதிப் பகிர்வு ஆகிய ஐந்து அம்ச திட்டங்கள் நிறைவேற்றப் படும்" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: அந்த ஐந்தில் தமிழகத்திற்கு எது உண்மையான பிரச்சனை என்று அவருக்குத் தெரியவில்லை. தமிழகத்துக்கு எது பிரச்சனையானாலும் தீர்வு பற்றித் தமிழக காங்கிரஸ் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, "ராகுல் காந்தி பிரதமராகும் போது" என்பதைத் தீர்வு தினமாகச் சொல்லிவிட்டார் மாணிக்கம் தாகூர். கெட்டிக்காரர்.

 

 

2. கேள்வி: "அவர்களுக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், கொள்ளையடித்த பணத்தைத் தந்துவிட்டு என்னைப்பற்றி விமர்சிக்கட்டும்" என்று ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு கூறி இருக்கிறாரே?

 

பதில்: மனசாட்சி உள்ளவர்கள் முதலில் மலையளவுக்கு, அதுவும் சந்ததி சந்ததியாக, கொள்ளையடிக்க மாட்டார்கள். இன்னொன்று: பழம் தின்று கொட்டை போட்டவர்களிடமிருந்து, கோட்டை கட்டியவர்களிடமிருந்து, கிழமானாலும் பழம் திரும்ப வராது.

 

 

3. கேள்வி: "திமுக ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் தான் நடந்தது. இதையெல்லாம் நான் ஏன் முன்பே பேசவில்லை என்றால், கூட்டணியில் இருந்துகொண்டே நான் திமுக-வை எதிர்த்து எப்படிப் பேசுவது? அப்படிப் பேசினால் அயோக்கியத்தனமாக இருக்கும்" என்று மதிமுக தலைவர் வைகோ ஆவேசமாக விளக்கம் சொல்லி இருக்கிறார். அவர் பேசியது சரியா?

 

பதில்: கூட்டணிக்குத் தலைமை தாங்கி ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ஜமாய்ப்பது அப்போதே வைகோவுக்குத் தெரிந்திருக்கிறது. தெரிந்தும் அதை எதிர்க்கவில்லை என்கிறார் வைகோ. சுத்த அசடு கூட இப்படியா பேசும்?

 

கூட்டணியில் இருந்தபோது அரசு நிர்வாகத்தில் நடந்த ஊழலை வைகோ பகிரங்கமாக எதிர்க்க முடியவில்லை என்றால் தனியாகவாவது, தான் இருந்த கூட்டணிக் கட்சியின் தலைமையிடம் 'அநியாயம் நடக்கிறது. இது தகாது, இது கூடாது' என்று வைகோ சொன்னாரா? அதுபற்றி அவர் ஒன்றும் விளக்கவில்லை.

 

இன்னொன்று: ஐந்தாண்டுகளாகக் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் செய்தவர்களை உள்ளடக்கிய ஒரு கட்சி 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது, ஏன் அந்தக் கட்சியுடன் திரும்பவும் கூட்டணி வைத்தார் வைகோ? ஏன் அவர்கள் நிபந்தனையை ஏற்று, தனது கட்சி வேட்பாளர்களை அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வைத்தார் வைகோ?

 

தன்னுடைய நேர்மையைப் பற்றி, யோக்கியதை குறித்து, என்ன ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறோம் என்று தெரியாமலே பேசி இருக்கிறார் வைகோ.

 

 

4. கேள்வி: சென்ற திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரரை, இப்போதைய தவெக அரசின் போலீஸ் தேடுகிறது. அவர் அகப்படுவாரா?

 

பதில்: முந்தைய திமுக ஆட்சியில், ஒரு சட்ட நிர்பந்தத்தினால் மாநில போலீஸ் அவரைத் தேடு தேடு என்று தேடியபோது, அவரோ அவரது குடும்பத்தவரோ, அல்லது செந்தில் பாலாஜியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு ஏற்றபடி போலீஸ் அவரைப் பிடிக்கவே முடியவில்லை. தவெக ஆட்சியில் போலீஸ் அவரைத் தேடும்போது அவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மற்ற விஷயங்கள் வழக்கின் தன்மையைப் பொறுத்தது, அவை நீதிமன்றத்தின் கையில்.

 


5. கேள்வி: "தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் ..... சிலர் நரி போல் காத்திருக்கின்றனர்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அரசியலில் எதிர்க் கட்சியினர் நரி போல்தான் காத்திருப்பார்கள் - ஆளும் கட்சியை சங்கடப் படுத்த, பழித்துப் பேச, முடிந்தால் ஆட்சியை வீழ்த்த. அப்படித்தான் விஜய்யும் முன்பு காத்திருந்தார். எதிர்க் கட்சியினரின் நகர்வுகளை, அவர்களின் போராட்டங்களை, விமர்சனங்களை ஆளும் கட்சியினர் கண்கொத்திப் பாம்பாக கவனிக்க வேண்டும். மாற்றி மாற்றி இரு தரப்பினரும் முதுகில் போடுவதைத் தேமே என்று வாங்கிப் பசுமாடு மாதிரி சகித்துப் போவது மக்கள்.


பகுதி 109 // 02.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 


No comments:

Post a Comment