|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "தமிழகத்திற்கு விரைவில் எப்போது வேண்டுமானாலும்
தேர்தல் வரலாம்; ஒரு மாதம்
அல்லது ஆறு மாதம் கழித்து வரலாம்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி
இருக்கிறார். எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறார்? பதில்: ஒரே
அடிப்படைதான். தான் 'மக்கள் மனதில்' இருப்பதாகச் சொன்னால் மட்டும் பிரயோஜனம் இல்லை; தான் மறுபடியும் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும், அல்லது தன் மகனாவது அங்கு உட்கார வேண்டும் என்ற ஆசை
ஸ்டாலினுக்கு இருக்கிறது. அது சீக்கிரம் நடப்பதற்கு, முதலில் இப்போதைய விஜய் அரசு மெஜாரிட்டியை இழந்து
கவிழவேண்டும்; இரண்டாவதாக சட்டசபைத் தேர்தல்
வரவேண்டும்; மூன்றாவதாக - இதுதான் ஸ்டாலினுக்கு
முக்கியம் - அந்தத் தேர்தலில் திமுக அல்லது திமுக கூட்டணி ஜெயித்து ஸ்டாலினோ
உதயநிதியோ முதல்வராக வேண்டும். இதில் முதல் விஷயம் நடந்தாலும், அடுத்து வரும் தேர்தலில் விஜய் பலமான கூட்டணியுடன்
மெஜாரிட்டி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம். இது ஸ்டாலினுக்கும்
தெரியும். வெறும் மீடியா செய்திக்காக ஸ்டாலின் வெளியிட்ட 'மீண்டும் தேர்தல்' ஆசை
நிறைவேறாமல் இருக்க அவரே விரும்புவார். |
|
2. கேள்வி: திமுக கூட்டணியை விட்டுத் தவெக பக்கம் நெருங்கி
வரும்போது பேசிய மதிமுக தலைவர் வைகோ, "ஒபாமா ஒருமுறை அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றபோது, கையில் பேப்பர்
ஏதும் வைத்திருக்காமல் தனக்கான பதவிப் பிரமாணத்தை மனப்பாடமாகச் சொன்னார், ஆனால் அதில்
தவறு ஏற்பட்டதால் மறுநாள் இன்னொரு முறை அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மாறாக, நமது
முதலமைச்சர் விஜய் தனது பதவிப் பிரமாணத்தை மனப்பாடமாக மேடையில் பிழையின்றி
சொன்னதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். 'ஒபாமா தடுமாறிய இடத்தில்
நீங்கள் வென்றீர்கள்' என்று விஜய்யிடமே சொன்னேன்" என்று விஜய்யை
சிலாகித்தாரே? பதில்: விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றபின் வைகோ
அமெரிக்கா போய் வரவில்லை. போய் வந்திருந்தால், "நான் அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்தித்தபோது, 'மிஸ்டர் வைகோ, உங்கள் முதலமைச்சர் விஜய், பிழையில்லாமல் மனப்பாடமாகத் தனது பதவிப்
பிரமாணத்தைச் சொன்னதை டிவி-யில் பார்த்து மெய்சிலிர்த்தேன். ஹி இஸ் சிம்ப்ளி
மார்வெலஸ்!" என்று என் கையைப் பிடித்து ஒபாமா கூறினார். அதைக் கேட்டு ஒரு
தமிழனாகப் பெருமிதம் அடைந்தேன்" என்று வைகோ பேசி இருக்கலாம். |
|
3. கேள்வி: சென்ற திமுக ஆட்சியின்போது எந்தத் துறை வேலைக்காக
லஞ்சம் கேட்டனர், எவ்வளவு
கேட்டனர், எவ்வளவு
கொடுக்கப் பட்டது என்று சிலர் இன்றைய ஆட்சியின்போது எப்படித் தைரியமாகப்
பொதுவெளியில் தெரிவிக்கின்றனர்? பதில்: இன்றைய
புதிய ஆட்சியின் அதிகாரிகளும் மேலே உள்ளவர்களும் தங்களிடம் அதுபோன்ற வேலைக்கு
லஞ்சம் கேட்கமாட்டார்கள், அதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த
உத்தரவாதத்தை நம்பலாம் என்ற எண்ணம் அரசை அணுகவேண்டிய பலரிடம் இன்றுவரை
இருக்கிறது. அதுதான் காரணம். திமுக-வும் அதிமுக-வும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்தார்களே, அப்போது ஒரு ஆட்சி நடக்கும் காலத்தில் லஞ்சம்
கொடுத்தவர்கள், அது பற்றி அடுத்த ஆட்சி வந்த பின்னும்
தைரியமாக வெளியில் சொல்லவில்லையே, அது
ஏன் என்று கேட்கிறீர்களா? யோசித்தால் புரியும். |
|
4. கேள்வி: திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகி, இனி தவெக
தலைமையிலான புதிய ஆட்சியை ஆதரிக்கும் என்று வைகோ அறிவித்திருக்கிறார். ஆனால்
மதிமுக-வின் கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் - உதய சூரியன் சின்னத்தில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் - மதிமுக தற்போது கேட்டுக் கொண்டாலும் தனது
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாமல், “கட்சி, சாதி, மதம் கடந்து வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி
மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், வைகோ மீதோ, என் மீதோ
களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள
வேண்டாம் என்று வைகோவிடம் தெரிவித்தேன்” என்று சொல்கிறாரே? பதில்: பட்டும் படாமல் பூசி மெழுகி நீண்ட
சொற்களில் நழுவிப் பேசும் கலையை வைகோவிடம் கற்ற ஒருவர், அந்தக் கலையை வைகோவிடமே பிரயோகிக்கிறார். |
|
5. கேள்வி: "மக்கள் திலகம் பொருளாளராக இருந்த இயக்கம் திமுக; 'எனக்குத் தலைவர்
கலைஞர்' என்று கூறியவர்
எம்.ஜி.ஆர்; திமுக-வில்
இருந்தபோது உதய சூரியன் சின்னத்தில் தான் முதலில் போட்டியிட்டு வென்றவர்
எம்.ஜி.ஆர்" என்று திமுக-வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் முன்னர் இருந்த
நெருங்கிய பிணைப்பை, இப்போது திமுக
தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுச் சொல்கிறாரே? பதில்: கருணாநிதிக்கும்
எம்.ஜி. ஆருக்கும் இடையே இருந்த தீராத போட்டியால், மனக்கசப்பால், திமுக-விலிருந்து
எம்.ஜி.ஆர் வெளியேற்றப் பட்டார். அதனால்
அதிமுக என்ற தனிக்கட்சியை எம்.ஜி.ஆர் வழி நடத்தினார். எம்.ஜி.ஆருக்கு
அடுத்து அதிமுக-வின் சக்தி வாய்ந்த தலைவரான ஜெயலலிதா, கருணாநிதியுடனான பகையை அப்படியே வைத்துக் கொண்டார்.
மூவரும் இப்போது இல்லை. தற்போது திமுக மற்றும் அதிமுக-வின் லகான்களைப் பிடித்திருக்கும்
ஸ்டாலினுக்கும் பழனிசாமிக்கும் ஜென்மப் பகை கிடையாது. 'பங்கு விளையாட்டில் ஜெயிப்பது நீயா நானா' என்ற போட்டிதான் அவர்களுக்குள் நிலவுகிறது.
அவர்களுக்கு நடுவில் திடீரென்று ஜோசப் விஜய் என்ற இன்னொரு கட்சித் தலைவர்
முளைத்து ஆட்சியைக் கைப்பற்றியதால், அந்த
இருவரின் பங்கு விளையாட்டிற்கு மைதானமே இல்லை என்றாகிவிட்டது. ஆகையால் அந்த இரு
கட்சிகளும் நெருங்கி வரலாம், கூட்டாக அல்லது
இரண்டும் ஒரே கட்சியாகி விஜய்யை வென்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஸ்டாலின்
நினைக்கிறார். அதற்காக எம்.ஜி.ஆர் சுழி போட்டுப் பேச ஆரம்பிக்கிறார். அதுதான்
விஷயம். |
|
பகுதி 108 // 29.06.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment