|
கேள்வி-பதில் |
|
கேள்வி: அண்ணாமலை பாஜக-விலிருந்து விடுபட்டுத் தனியாக ஒரு
இயக்கம், அல்லது புதிதாக
ஒரு அரசியல் கட்சி, தொடங்கலாம் என்ற
பேச்சு பரவலாக வெளிவந்தவுடன், அவருக்கான ஆதரவும் பொதுவெளியில், சமூக
வலைத்தளங்களில், பெருகுகிறது.
நாம் என்ன புரிந்து கொள்ளலாம்? பதில்: 'அண்ணாமலையே ஒரு அரசியல் இயக்கம்; அது தமிழகத்தில் வளர வேண்டும்; அதன் தொடர்ச்சியாக, தறிகெட்டிருக்கும்
தமிழக அரசியல் நேராக வேண்டும்' என்று
விரும்புவோர் பலர் உண்டு. இப்போதைக்குப் பாஜக-வை விட்டு அண்ணாமலை தனியாக ஒரு
இயக்கத்தை வழிநடத்தினால், பாஜக-வின் கட்டாயங்களும்
கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர் மேலும் சுதந்திரமாகச் செயல்பட முடியும், மேலும் சிறப்பான அதிரடியான தாக்கத்தைத் தமிழக
அரசியலில் ஏற்படுத்த முடியும் என்று அண்ணாமலை நினைக்கலாம், அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் அதே எண்ணம் இருக்கலாம்.
ஆகையால் அண்ணாமலை என்ற தலைவருக்குத் தனியாக ஆதரவு அதிகரிக்கிறது - அல்லது
பெரிதும் வெளிப்படுகிறது. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம், அண்ணாமலை ஒரு அசாதாரண கிரியேட்டிவ் அரசியல் சக்தி, தனித்துவம் மிக்க மக்கள் தலைவர். சுதந்திரப் போராட்ட காலத்தில், நாடுழுவதும்
சுதந்திர உணர்வை ஊக்குவித்து, ஒருங்கிணைத்து, அதை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக வலுவாக இயங்க
வைத்தவர் மஹாத்மா காந்தி. அது மாதிரி, 1967-லிருந்து தமிழ்நாட்டு அரசியலில் பெருகி வளர்ந்திருக்கும் ஊழல் மற்றும்
நாசகார அரசியல் சக்திகளுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் அந்த அரசியல்
சக்திகளை வலுவிழக்கச் செய்யும் உன்னதப் பணியை அண்ணாமலை நினைத்துப் பார்க்கிறார்.
அவரைப் போன்ற ஒரு மாமனிதரின் தலைமை இல்லாமல் அந்தப் பணிக்குச் சரியான தொடக்கமும்
ஏற்றமும் கிடைக்காது என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். ஆகையால் அத்தகைய
அண்ணாமலையின் பணிக்கு, அது தொடங்குவதற்கு முன்பே ஆதரவு கூடி
எழுகிறது. அந்நிய ஆட்சியாளர்களை எதிர்த்து நமது தலைவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை
விட, சுதந்திர இந்தியாவில் அரசாங்கங்களை நடத்திய, நடத்துகின்ற, பல
அரசியல் சக்திகளை எதிர்ப்பதும், அவற்றை அடக்கி
வைப்பதும், தேர்தலில் வெல்வதும் கடினம்.
அந்நியர்கள் என்பதால் வெள்ளைக்கார ஆட்சியாளர்களை இந்திய மக்களின் எதிரிகள் என்று
அடையாளப்படுத்துவதில் நமது தலைவர்களுக்குச் சிக்கல் இல்லை. ஆனால்
சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஆட்சி செய்த, செய்கின்ற, பல
அரசியல் தலைவர்கள் - நம் மக்கள் மத்தியிலிருந்தே எழுந்த இந்திய அரசியல்
தலைவர்கள் - திட்டமிட்டு மக்களைச் சுரண்டிப் பிழைக்கும்போது, அந்தத் தலைவர்கள் நாட்டின் நாசகாரச் சக்திகள் என்று
நமது எளிய மக்களுக்கு யாரும் அடையாளப் படுத்துவது எளிதல்ல. ஆகையால் அத்தகைய
அரசியல் சக்திகள் வளர்ந்தன, பெருகின, கொழுத்தன. இப்போது அண்ணாமலை தனது பேச்சினால், அத்தகைய நாசகார அரசியல் சக்திகளை மக்களுக்குப்
பொதுவெளியில் அடையாளப் படுத்தலாம் - அதற்கான வாய்ப்பு அதிகம். இதை அண்ணாமலை
ஷார்ப்பாக உணர்ந்திருப்பார், அவரது
ஆதரவாளர்களும் அப்படியே நினைக்கலாம். இன்னொன்று. தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கு ஒரு தனித்துவம் உண்டு.
ஆரியம்-திராவிடம், வடக்கு-தெற்கு, பிற்பாடு ஒன்றிய அரசு - திராவிட மாடல் அரசு
என்றெல்லாம் பேசிப் பேசி பாஜக வடநாட்டுக் கட்சி, அது
தமிழக மண்ணுக்கு ஒவ்வாத கட்சி, தமிழர்களுக்கு எதிரான கட்சி, என்பது மாதிரியான ஒரு எண்ணத்தைத் தமிழக மக்கள் பலரின்
மனதில் விதைத்து விட்டது திமுக. அவ்வாறு அப்பட்டமாகப் பேசாமல், ஆனால் அத்தகைய மக்கள் நினைப்பால் பயனடைய விரும்பும்
கட்சிகள் தான் அதிமுக மற்றும் தவெக. சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக
கூட்டணியில் சேர்ந்திருந்த பல கட்சிகளின் எண்ணமும் அதுதான். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைக்காவிட்டால், திமுக தன்னை நசுக்கிவிடும், அந்த ஆபத்தைத் தவிர்க்கவேண்டும், என்று எண்ணிய அதிமுக, அப்போது
பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது. மற்றபடி அதிமுக-வும் அதே திமுக-தான் - வலுவற்ற, வாய்ப்புகள் குறைந்த திமுக. இந்தக் காரணங்களுக்காக அண்ணாமலை பாஜக-வின் பிரதிநிதியாக இல்லாமல், தனியாக ஒரு அரசியல் இயக்கம் நடத்தி திராவிட சிந்தனைப்
போக்கு உள்ள கட்சிகளை எதிர்த்தால், தமிழகத்தில்
அவருக்கு ஒரு அனுகூலம் உண்டு. அப்போது, அண்ணாமலை
தமிழர்களுக்கு எதிரான ஒரு வடநாட்டுக் கட்சியின் பிரதிநிதி, ஆகையால் அவரும் தமிழர்களின் விரோதி, என்று அவருக்கு எதிராகத் தமிழ்நாட்டில் யாரும் அரசியல்
பிரசாரம் செய்யமுடியாது - ஈ.வெ.ரா-வை
விமர்சித்ததற்காகச் சீமானை யாரும் எதிர்க்க முடியாமல் போன மாதிரி. ஆகையால்
தனிக்கட்சி அண்ணாமலைக்குத் திராவிடத் தமிழகத்தில் சக்தி அதிகரிக்கலாம். தனிக் கட்சியாக அண்ணாமலை பயணம் செய்தால், பெரிய
எதிரியை முதலில் வீழ்த்துவதற்காகச் சிறிய எதிரிகளுடன் அவர் முதலில் தேர்தல்
கூட்டணி வைக்கலாம். அத்துடன், பாஜக-வுடனும்
அவர் ஒரு புரிதல் வைத்திருப்பார். பிறந்த நாள் வாழ்த்துப் பெறுவதற்காக மட்டும்
அவர் இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்திருக்க மாட்டார். கூட்டணி
விஷயங்கள் அண்ணாமலையின் தனிப் பயணத்திற்கு இப்போது அவசரமல்ல. இவற்றில் தெளிவு
பின்னர் வரும். அரசியல் களத்தில் அண்ணாமலை தனக்கு ஒரு மிகப் பெரிய மாற்றத்தை எதிர்
நோக்குகிறார். தமிழக அரசியலும் மெள்ள மெள்ள அதன் பலனைக் கண்டால் நல்லது. இந்த
மாநிலத்திற்கு வேறு நம்பிக்கை தான் ஏது? |
|
பகுதி 101 // 04.06.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment