|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: சென்ற சட்டசபைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின்
தோற்றதற்காக, அவரது
ஆதரவாளர்கள் சிலர் - குறிப்பாகப் பெண்கள் - அழுகிற காட்சியை டிவி-யில் இன்றும்
காட்டுகிறார்களே? பதில்: நமது
ஜனநாயகம் செயல்படுவதைப் பார்த்து சில திமுக ஆதரவாளர்கள் அழுகிறார்கள்; முன்னர் நமது ஜனநாயகத்தை அழ வைத்தது திமுக. |
|
2. கேள்வி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவேண்டும்
என்ற நோக்கில், அக்கட்சி தேசிய
ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதன் தலைவர் ஜி.கே. வாசன்
அறிவித்துள்ளார். இவ்விதம் தமாகா அதிக வாக்காளர்களை ஈர்த்து தன்னை வலுப்படுத்த
முடியுமா? பதில்: தமிழ் மாநில காங்கிரஸை வலுப்படுத்துவது, அக்கட்சி அதிக தொண்டர்களையும் அதிக
வாக்காளர்களையும் ஈர்ப்பது, நடக்காது. காரணம், இன்றைய தமாகா பெரும்பாலும் ஜி.கே. மூப்பனார் நினைவகம் என்பதாக
இருக்கிறது. நினைவகங்களில் ஆள்வரத்து அதிகம் இருக்காது. |
|
3. கேள்வி: 1977 லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றது. இந்திரா
காந்தியும் தனது ரேபரேலி தொகுதியில் தோற்றார். ஆனால் மூன்று வருடம் கழித்து
நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது, இந்திரா மீண்டும் பிரதமர் ஆனார். தமிழகத்தில் திமுக
தற்போது ஆட்சியை இழந்து ஸ்டாலினும் கொளத்தூரில் தோற்றாலும், அவர் கட்சி
அடுத்த தேர்தலில் ஜெயித்து அவர் மறுபடியும் முதலமைச்சர் ஆக முடியாதா? பதில்: அது
மிகக் கடினம். 1977ல் காங்கிரஸும் இந்திரா காந்தியும்
தோற்றதற்குக் காரணம், எமர்ஜென்சியால் மக்கள் அவர் மீது கோபம்
வைத்திருந்தனர் - எதிர்க் கட்சிகளின் மீது மக்கள் கொண்டிருந்த பற்றல்ல. பின்னர்
அந்தக் கோபம் கரைந்தது. இப்போது சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்றதற்கு முக்கிய
காரணம், மக்களுக்கு விஜய் மீதுள்ள ஈர்ப்பால்.
விஜய் தவிர்த்து, புதுக்கட்சி தொடங்கவிருக்கும்
அண்ணாமலையும் ஒரு புதிய சக்தியாக உருவாகிறார். இன்னொன்று: இது கூட்டணி அரசியல்
காலம் - ஆனால் திமுக-வின் கூட்டணிக் கட்சிகளும் திமுக-வைக் கைகழுவுகின்றன. இந்திரா காந்தி நிலையில் ஸ்டாலின் இல்லை. இந்திரா காந்தியின் அரசியல்
வசீகரமும் ஸ்டாலினிடம் கிடையாது. |
|
4. கேள்வி: "அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தமிழக முதல்வராக
விஜய் இருப்பார்" என்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூறி இருக்கிறாரே? பதில்: 'அடுத்த இருபது ஆண்டுகள் தானும் ஒரு அமைச்சராக இருக்கலாமே' என்ற நப்பாசையை ஆனந்த் மறைக்க முடியவில்லை. |
|
5. கேள்வி: "தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக
வெற்றிக் கழகம் ஆட்சி சூப்பராக உள்ளது. பாலியல் குற்றங்கள் எல்லா
ஆட்சியிலும்தான் நடக்கின்றன. இந்த குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு மிகக் கடும்
தண்டனை விதிக்க, மத்திய அரசு
புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறி
இருக்கிறாரே? பதில்: திமுக கூட்டணிக்கு டாடா சொல்லிவிட்டு, தவெக-வுடன் நெருக்கம் கொள்ள மதிமுக ஆர்வமாக
இருக்கிறது. அதைப் பொதுவெளியில் குட்டிக்கரணம் போட்டு விஜய்க்குத்
தெரிவிக்கிறார் வைகோ. "பாலியல் குற்றங்கள் எல்லா ஆட்சியிலும்
நடக்கின்றன" என்பது, வைகோவின் ஸ்டைலான குட்டிக்கரணம். |
|
பகுதி 103 // 15.06.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment