|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு
இடமில்லாமல் இயங்குகிற அரசு ஜோசப் விஜய்யின் அரசு" என்று மதிமுக தலைவர்
வைகோ பேசி இருக்கிறார். வைகோவைப் பாராட்டலாமா? பதில்: ஒரு
அரசு நிர்வாகத்தில் கமிஷன், கரப்ஷன்
இருக்கிறதா இல்லையா என்பது வைகோவுக்குத் தெரிந்துவிடும் என்று அவர்
உணர்த்துகிறார். அதன்படி, தற்போதைய விஜய் ஆட்சியில் கமிஷன், கரப்ஷன் இல்லை என்கிறார் அவர். சரி, போகட்டும். சென்ற திமுக அரசில் - வைகோ கட்சி ஆதரித்த அந்த அரசில் - கமிஷன், கரப்ஷன் இருந்ததில்லை என்றால், "ஸ்டாலின் ஆட்சி மாதிரியே விஜய் ஆட்சியிலும் கமிஷன், கரப்ஷன் இல்லை" என்று வைகோ கூறி இருக்க வேண்டும்.
அவர் அப்படிச் சொல்லவில்லை. என்ன இருந்தாலும்,
'சென்ற திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன் இல்லை என்று நான் சர்டிபிகேட் தரமுடியாது' என்று வைகோ சொல்வதாக அர்த்தம். அதோடு, 'ஒரு அரசு நிர்வாகத்தில் கமிஷன், கரப்ஷன் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குப்
பொருட்டல்ல. நான் ஒரு அரசை ஆதரிப்பதால், அதை
அமைத்த கட்சியைப் பாராட்டுவதால், மதிமுக-வுக்கு
அந்த நேரத்தில் பலன் உண்டா என்பதுதான் என் கணக்கு' என்றும் வைகோ தெரிவிப்பதாக அர்த்தம். இதில் அவரைப்
பாராட்ட என்ன இருக்கிறது? |
|
2. கேள்வி: 'அதிமுக எம்.எல்.ஏ-க்களின் பதவி விலகல் குதிரை பேரமா' என்ற
கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், "அதிமுக
எம்.எல்.ஏ-க்கள் தங்கள் எம்.எல்.ஏ-க்கள் பதவியில் இருந்து விலகுகிறார்கள்; அவர்கள் அந்தக்
கட்சியில் இல்லை; தேர்தல்
நடந்தால் அவர்கள் நிற்பார்களா, ஒருவேளை நின்றால் எந்தக் கட்சி சார்பில் நிற்பார்கள்
என்றெல்லாம் தெரியாது. ஆகையால் அதை எப்படிக் குதிரை பேரம் என்று சொல்ல முடியும்?" என்று
கேட்கிறார். அவர் கேள்வி சரியா? பதில்: காங்கிரஸை விடமுடியாத ப. சிதம்பரம், வெட்கத்தை விட்டுத்தான் காங்கிரஸ் சார்பில், கூட்டணிக் கட்சிகள் சார்பில், அடிக்கடி அபத்தமாகப் பேசவேண்டும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் பதவி
விலகுவதால் சட்டசபையில் உள்ள மொத்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை குறையும். அந்தக்
குறைந்த எண்ணிக்கையில், முன்பு விஜய் அரசுக்குச் சபையில் இருந்த மெஜாரிட்டி சக்தி இப்போது தானாக
அதிகரிக்கும்; அதன் விளைவாக, சபையில் மெஜாரிட்டியை எட்டுவதற்காக விஜய் அரசுக்கு ஆரம்பத்தில்
தேவைப்பட்ட கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் தயவு ஒவ்வொன்றாகக் குறையும்.
பிறகு, காலியான தொகுதிகளில் வரும் இடைத் தேர்தலில்
விஜய் கட்சி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் பதவி
விலகல் இறுதியில் விஜய் கட்சிக்குச் சட்டசபையில் நிரந்தரமாகப் பலம் சேர்க்கும்.
இப்படியான அதிக பலம் தவெக-வுக்குக் கிடைக்கும் என்று தெரியாமல், அல்லது அதற்கான பிரதிபலன் தங்களுக்கு
வேண்டவே வேண்டாம், இனிமேல் தாங்கள் விவசாயம் செய்து பிழைக்கலாம் என்றெண்ணி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை
ராஜினாமா செய்திருப்பார்களா? குதிரைகள் நேராகக் குதிரைகளாகவே விற்பனை
ஆவது ஒருவகைப் பேரம். முதலில் அவற்றைக் கழுதைகள் ஆக்கிப் பாதி பேரத்தை முடித்து, பின்னர் அவற்றைப் பல விதமான குதிரைகளாக
மாற்றி மீதியை முடிப்பது இன்னொரு வகைப் பேரம். சிதம்பரம் அனைத்தையும்
உணர்ந்திருப்பார், ஆனால் அழுகல் வாதம் பேசுவார். |
|
3. கேள்வி:
"சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்து எந்த அணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத
நிலையில், நாங்கள்
அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து ஒரு அரசை நிறுவுவதற்காக அக்கட்சியுடன் பேசவில்லை.
அப்படியே பேசியிருந்தாலும் அது உலக மகா தப்பா? அதிமுக பகையாளி இல்லை, எங்கள்
பங்காளிதான்" என்று இப்போது திமுக-வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி
சொல்கிறாரே? பதில்: திமுக-வுடன்
கூட்டணி வைத்துத் தேர்தலில் தவெக-வை எதிர்த்துவிட்டு, தேர்தலுக்குப் பின் புதிய ஆட்சி அமைக்க ஓடிப் போய்
தவெக பக்கம் நின்றது காங்கிரஸ் கட்சி. அதே எண்ணத்தில் எதிரணியை நோக்கி மெதுவாக
நடந்து தவெக-வுடன் கைகோர்த்தன விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள். இந்த
மூன்று கட்சிகள் செய்ததை விட, அதைத் தவெக
மகிழ்ந்து ஏற்றதை விட, திமுக மற்றும் அதிமுக தமக்குள் ஏதோ
கூட்டணி வைத்து அரசமைப்பது பற்றி முன்பு பேசி இருந்தாலும் அது தவறல்ல. ஆட்சி
அமைப்பதற்காக அரசியலில் வழக்கமாக நடக்கக் கூடியதைத் தான் ஆர்.எஸ்.பாரதி சொல்லி
இருக்கிறார். |
|
4. கேள்வி: வங்க தேசத்தில் ஹிந்துக்கள் போராட்டங்கள், பேரணிகள் என்று
இப்போது நடத்துகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? பதில்: பெரிய அண்டை நாடான இந்தியாவில் மோடி
சக்திமிக்க பிரதமராக இருக்கிறார் என்பது ஒரு காரணம். சமீபத்திய தேர்தல் மூலம், இந்தியாவின் மேற்கு வங்கத்தில் மம்தா
பானர்ஜியின் ஆட்சி வீழ்த்தப்பட்டு அங்கு பாஜக நல்ல மெஜாரிட்டியுடன் ஆட்சி
அமைத்திருக்கிறது என்பது ஒரு காரணம். அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மைக் காலமாக
மோடியை வெகுவாகப் பாராட்டி வருகிறார், இந்தியாவைப் போற்றுகிறார், வங்க தேசத் தலைமையை ஆகா ஓகோ என்று
புகழவில்லை, என்பதும் ஒரு காரணம். என்ன இருந்தாலும், நீண்ட காலத்தில் பாகிஸ்தானிலும் வங்க
தேசத்திலும் ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். |
|
5. கேள்வி: "ஜி-7 உச்சி மாநாட்டில், என்னுடன் புகைப்படம்
எடுத்துக் கொள்ளுமாறு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்னிடம்
கெஞ்சினார்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொல்ல, அதற்கு
மறுப்புத் தெரிவித்த இத்தாலி பிரதமர், "அமெரிக்க அதிபர் கூறுவது முழுக்க முழுக்கப் பொய். நானோ
அல்லது இத்தாலியோ யாரிடமும் எப்போதும் கெஞ்சவேண்டிய அவசியமில்லை" என்று ஒரு
வீடியோ செய்தி வெளியிட்டிருக்கிறார். டிரம்ப் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? பதில்: பிரதமர்
ஜார்ஜியா மெலோனி வசீகரமான பெண். அதிபர் டிரம்போ அசடு, அகராதி, பித்துக்குளி
என மூன்றுமானவர். தன்னோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள மெலோனி தன்னிடம் கெஞ்சினார்
என்று கதை கட்டினால், யுவன் யுவதிகளிடம் தனக்கு கெத்து கூடும்
என்று டிரம்ப் நினைத்திருப்பார். அதனால் தள்ளாடிவிட்டார். |
|
பகுதி 105 // 21.06.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment