|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: சென்ற திமுக ஆட்சியில், டாஸ்மாக் மூலம் பணம் ஒரு கட்சிக்குச் சென்றதாக
முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், "பயன்
பெற்றது எந்தக் கட்சி எனத் தெரிவிக்கத் தயாரா? தைரியம்
இருந்தால் அது எந்தக் கட்சி என்று சொல்லுங்கள்" என்று சட்டசபையில்
திமுக-வின் உதயநிதி சவால் விட்டுக் கேட்டிருக்கிறார். அவர் கேள்வி நியாயம் தானா? பதில்: திமுக ஆட்சியிலிருந்த சமயத்தில், டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும்போது
வேறு சில கட்சிகள் நடுவில் புகுந்து, அப்போதைய
அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தங்கள்
கட்சிக்காக நிதி வசூல் செய்திருக்கலாம்; அதுபற்றி அப்பாவி
திமுக-வுக்கு ஒன்றும் தெரியாமல் போயிருக்கலாம்; ஆகையால்
எந்தக் கட்சி அல்லது கட்சிகள் டாஸ்மாக் கொள்முதல் மூலம் முன்பு அவ்வாறு பணம்
பெற்றதாக இன்றைய ஆட்சி அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டைச் சொல்கிறது என்று உதயநிதி
திறந்த மனதுடன் அறிந்துகொள்ள விரும்புகிறார். புரிகிறது. நன்றாகப் புரிகிறது. |
|
2. கேள்வி: சென்ற திமுக ஆட்சியின் போது நிகழ்ந்த சில லஞ்ச ஊழல்களை, அரசுக்கு ஏற்பட்ட
வருவாய் இழப்பை, தற்போதைய விஜய் அரசு பட்டியலிட்டு
வெளியிடுகிறது. அப்போது லஞ்சம் கொடுத்தவர்கள், கொடுக்க
நிர்பந்திக்கப்பட்டவர்கள், இப்போது பொதுவில் அந்த
அனுபவங்களை வெளியே சொல்கிறார்கள். இவை சொல்லும் சேதி என்ன? பதில்: விஜய்
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவராக இருக்கலாம். முன்னர் பெரிய அரசியல்
அனுபவம் இல்லாதவரும் கூட. ஆனாலும்
அவருடைய அரசு, திமுக ஆட்சியில் நடந்த லஞ்ச ஊழலை, முறைகேடுகளை, இவ்வளவு வெளிப்படையாகப் புள்ளி
விவரத்துடன் வெளியிடும்; அத்துடன் விஜய் தனது ஆட்சியில்
எவரும் உணரக் கூடிய வெளிப்படைத் தன்மையைச் சில துறைகளில் உடனடியாகக்
கொண்டுவருவார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அதற்காக விஜய்க்கு
ஒரு சபாஷ் உண்டு. இது பரவலாக நீடித்து நிலைக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும் -
ஆனாலும் லஞ்ச ஊழலுக்கு எதிரான ஆரம்பம் வெரி குட். |
|
3. கேள்வி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசி இருக்கிறார்:
"அண்ணாதுரை ஒருமுறை சொன்னார்: 'தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி
இருக்கிறேன்; எனக்கு வாழ்க்கையில் இது போதும்; நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு என்ற பெயர்
இருக்கும்வரை என் பெயர் இருக்கும்'. அதைப் போல், மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும் வரை, இந்த
ஸ்டாலின்தான் முதல்வர்." அவர் பேசியது சரியா? பதில்: மாதம் தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாநில அரசு
இலவசமாக வழங்கும் தொகையை, 'மகளிர் உரிமைத்தொகை' என்ற கவர்ச்சியான பெயரை
முந்தைய திமுக அரசு கொடுத்தது. பெருவாரியான குடும்பத்
தலைவிகள் கௌரவமாகத் தங்களை, தங்கள் குடும்பத்தை, சார்ந்து வாழ மக்களுக்குப்
பொருளாதார ரீதியில் வழிவகை செய்யத் திராணியற்ற திமுக ஆட்சியின் இயலாமையைப் பறை
சாற்றுவது, மகளிர் உரிமைத்தொகை திட்டம். அந்தப் பணத்தைப்
பெண்கள் மகிழ்வாகப் பெற்றுக் கொள்கிறார்கள், அதற்கான தேவை
அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் திமுக தனது ஆட்சியின் பல அவலங்களை, பல முறைகேடுகளை, மூடி மறைக்கும் பளபள ஜிகினாவாக
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பெருமையாகச் சொல்கிறது. "மகளிர்
உரிமைத்தொகை திட்டத்திற்கு அவசியம் இல்லாமல், எங்கள்
ஆட்சியில் அனைத்து குடும்பத் தலைவிகளும் பொருளாதார ரீதியில் கௌரவமாக
வாழ்கிறார்கள். ஆகையால் மகளிர் உரிமைத் திட்டத்தை ரத்து செய்கிறேன்" என்று
ஒரு முதலமைச்சர் பேச முடிந்தால், அது அவருக்கும்
தமிழகத்துக்கும் பெருமை. |
|
4. கேள்வி: "முந்தைய திமுக ஆட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்
படாமலும் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப் படாமலும் இருந்த நிலையில் மின்
வாரியத்தின் செலவு மட்டும் அதிகரித்தது எப்படி?" என்று தவெக அரசின்
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வினா எழுப்புகிறாரே? பதில்: 'வினா எழுப்பும் அமைச்சரே முடிந்தால் ஆதாரத்துடன்
விடையையும் கண்டுபிடிக்கட்டும்' என்று அந்த விடையைப்
பாதுகாப்பவர்கள் நினைக்கலாம். இன்னொன்று: இந்த வினா, சென்ற
திமுக ஆட்சியின் மின்சாரத்துறை அமைச்சரை, அப்போதைய
முதலமைச்சரை, அன்றே உறுத்தாதது ஏன்? |
|
5. கேள்வி: "சட்டமன்றத்தில் நான் இல்லை என்றாலும் மக்கள் மனதில்
பதிந்திருக்கிறேன்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி இருக்கிறாரே? பதில்: தேர்தலில்
போட்டியிடும் எந்த வேட்பாளர் தங்கள் மனதில் இருக்கிறாரோ, அவரை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்று
நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஸ்டாலினோ, மக்கள் மனதில்
இருக்கும் அந்த வேட்பாளர் சட்டமன்றத்திற்குப் போகவே கூடாது என்பதற்காக அவரை
மக்கள் குறி வைத்துத் தோற்கடிப்பார்கள் என்று சொல்கிறார். அவர் பேசுவது அவருக்கே
புரிந்தால் சரி. |
|
பகுதி 107 // 26.06.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment