|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: தேமுதிக-வின் பொதுச் செயலர் பிரேமலதா, "நான்
நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து எனக்குத் துணை முதலமைச்சர் பதவி
கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சியல்ல தேமுதிக" என்று
பேசி இருக்கிறார். அவர் பேசியது சரியா? பதில்: பிரேமலதா
சிறிது இவ்வாறு மாற்றிப் பேசி இருந்தால் அது சரியாக இருக்கும். "விஜய்
நினைத்திருந்தால் அவரே வீடு தேடி வந்து எனக்குத் துணை முதல்வர் பதவி
கொடுத்திருப்பார். ஆனால் இப்படியெல்லாம் கருணை காட்டும் கட்சியல்ல தவெக" |
|
2. கேள்வி: "தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்திக்
காட்டுவதுதான் முதல்வர் விஜய்யின் லட்சியப் பயணமாக உள்ளது" என்று அமைச்சர்
செங்கோட்டையன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே? பதில்: எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும்
அவர்களின் குடும்பத்தினர் மட்டத்தில் ஊழல் நடந்தால் அதற்கு நிரூபணம் கிடைப்பது
அரிது. கமுக்கமாக நடைபெறும் அத்தகைய ஊழல்கள் பற்றி, அனுபவம் மிக்க அரசியல் பார்வையாளர்கள் அறிய
முடியும். அவர்களுக்கு, இந்த விஷயத்தில் விஜய் அரசு பற்றி போகப் போகத் தெரியவரும் - ஊழல்
நடக்கிறதா இல்லையா என்று. நாம் பொறுத்திருந்து உண்மை எது எனப் புரிந்து
கொள்ளலாம். அமைச்சர்களின் அவசர நன்னடத்தைப் பிரகடனங்கள் மட்டும் நமக்கு உதவாது. |
|
3. கேள்வி: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி
தெரிவிக்கச் சென்ற முதல்வர் விஜய்யின் பேச்சு எப்படி இருந்தது? பதில்: மு.க.
ஸ்டாலினை இன்னமும் வில்லனாகப் பாவித்து வசனங்கள் பேசினார். சினிமாச் சிரிப்புகள்
உதிர்த்தார். நடுவில் சில அழுத்தமான பேச்சும் உண்டு. இனி எதிர்க் கட்சிகளுக்குத்தான் ஆட்சி குறித்த மேடைப் பேச்சுகள் மற்றும்
விமர்சனங்கள் முக்கியம். விஜய்க்கு, பேச்சைவிட
அரசின் செயல்பாடுதான் கணக்கு. அதில்தான் அவர் அதிக மார்க்குகள் பெற வேண்டும், அதைத்தான் நாம் அதிகம் கவனிக்க வேண்டும். |
|
4. கேள்வி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்
தலைவர் காதர் மொகிதீன், "அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் தமது பதவிகளை
ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைகின்றனர். இது குதிரைப் பேரம்
இல்லை" என்று கூறி இருக்கிறாரே? பதில்: திமுக கூட்டணியில் இணைந்து சட்டசபைத்
தேர்தலில் தவெக-வைத் தீவிரமாக எதிர்த்த கட்சி, முஸ்லிம் லீக். அந்தத் தவெக, மெஜாரிட்டிக்குச் சற்றுக் குறைவான
எண்ணிக்கையில் வென்றபோது காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாதிரி, முஸ்லிம் லீக் கட்சியும் தனது இரண்டு
எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தவெக-வுக்கு, அது ஆட்சி அமைப்பதற்கு, அளித்தது.
அந்த இருவரில் ஒருவர் விஜய் அமைச்சரவையில் அங்கம். மற்றபடி குதிரைப்
பேரத்தில் எந்த எந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடக்கம், இன்னும் எந்த எந்த எம்.எல்.ஏ-க்கள்
ஆர்வத்துடன் வெயிட்டிங் என்பது நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்தது இது: ஒரு குதிரைக்
குழுவின் குதிரைகளுக்கு, அவற்றின் நிர்வாகிகளுக்கு, அக்குழுவின் எல்லாக் குதிரைகளின்
வண்டவாளமும் தெரியும். ஆனால் அக்குழுவின் எந்தக் குதிரையும், எந்த நிர்வாகியும், குழுவின் எந்தக் குதிரையையும் காட்டிக்
கொடுக்காமல் பேசுவது வழக்கம். காதர் மொகிதீன் இப்போது ஏதோ பேசுகிறார். |
|
5. கேள்வி: அதிமுக பெற்று வந்த எம்.ஜி.ஆர் ஓட்டுகள் விஜய்க்கு
மாற வாய்ப்புண்டா? வாய்ப்பு
உண்டென்றால், தமிழகத்தில்
அண்ணாமலையின் எதிர்காலம் என்ன? பதில்: எம்.ஜி.ஆர்
ஓட்டுகள் என்பவை, அவர் நடித்த திரைப்படங்களின்
தாக்கத்தால் அவரது விசிறிகளும் அபிமானிகளும் அவருக்கு - அவர் கட்சியான
அதிமுக-வுக்கு - அளித்தவை. கருணாநிதியை
எதிர்த்தவர்களின் ஓட்டுகளும் அங்கு பெருமளவு சேர்ந்தன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்
பின் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாகப்
பார்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் ஓட்டுகள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வுக்குக்
கிடைத்தன. ஜெயலலிதா மறைந்த பின், எம்.ஜி.ஆரின்
பிரதிநிதி என்று யாரும் கிடையாது. இருந்தாலும், எம்.ஜி.ஆர்
ஓட்டுகள் பெரிதும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக
வேட்பாளர்களுக்குக் கிடைத்து வருகின்றன. விஜய் நடித்த திரைப்படங்களின் ஈர்ப்பால், அவருடைய
விசிறிகளும் அபிமானிகளும் அவர் கட்சியான தவெக-வுக்கு ஓட்டளிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் ஓட்டு வைத்திருப்பவர்களில் பலர் தற்போது விஜய்யால் ஈர்க்கப்பட்டுத்
தங்களின் வாக்குகளை சிறிது சிறிதாக விஜய்க்கு மாற்றி அவர் கட்சிக்குப் போடலாம்.
இது தமிழ்நாடு, இது சாத்தியம். அண்ணாமலையின் அரசியல் ஈர்ப்பு என்பது, சினிமாவின்
பொய்த்தன்மை மற்றும் கவர்ச்சியில் தொடங்கவில்லை. மனசாட்சி வழிநடத்த,
மக்கள் நலம் சார்ந்த, தேசப்பற்றும் மதியூகமும் நிறைந்த கடுமையான அரசியல்
பணியை அவர் செய்துவருகிறார். அது எம்.ஜி.ஆர் மற்றும் விஜய் வழி அல்ல.
தமிழகத்தில் பெரிதாகக் கால் ஊன்றாத பாஜக-வில் சேர்ந்து, இளம் வயதில் அவர் தனக்கென்று சேர்த்திருக்கும் மக்கள்
சக்தி - தற்போது அது மிகப் பெரிதில்லை என்றாலும் - நினைத்துப் பார்க்க முடியாதது, வியக்கத் தக்கது. எம்.ஜி.ஆர் பாணியில், சினிமாவில்
உயர்ந்து அதன் தொடர்ச்சியாக விஜய் அரசியலில் மேலும் வளரலாம் - அத்தகைய மேல்
வளர்ச்சி சற்று எளிது. தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கும் அண்ணாமலை, அரசியலில் மேலும் மேலும் வளர்ந்து தனக்கான மக்கள்
சக்தியைப் பெருக்கலாம் - அத்தகைய மேல் வளர்ச்சி மிகக் கடினம். ஆனால் அண்ணாமலை
அதை உணர்ந்து மனதளவில் அதற்குத் தயாரானவர் போல் தெரிகிறது. தேசநலனில் நாம் அவரை
வாழ்த்தி, மற்றதைப் பொறுத்திருந்து பார்க்க
வேண்டும். |
|
பகுதி 100 // 02.06.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
Tuesday, 2 June 2026
கேள்வி-பதில் (02.06.2026)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment