|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப், விசிக தலைவர் திருமாவளவன் -
இருவர் பேசும் முறையை ஒப்பிடுக. பதில்: இன்று
சொன்னதற்கு அப்பட்டமாக நேர் மாறாக அடுத்த நாள் பேசுபவர் டிரம்ப். இன்று
பேசியதற்கு நியாயம் சொல்ல வந்து, அடுத்த
நாள் விதவிதமாக மாறுதலாகப் பேசுபவர் திருமாவளவன். |
|
2. கேள்வி: "அதிமுக என்ற கப்பலை தவெக மூழ்க விடாது"
என்று சொல்கிறார் தவெக தலைவர் ஆதவ் அர்ஜுனா. அதற்கு என்ன அர்த்தம்? பதில்: ஒரு புதிய கப்பலின் ஓனர், நடுக்கடலில் தத்தளிக்கும் வேறொருவரின் பழைய
கப்பலின் மாலுமிகள் பலரையும் தன்னிடம் வேலைக்குச் சேர்த்து, அந்தப் பழைய கப்பலை இழுத்துக் கரையோரத்தில்
கடாச நினைத்தால், "நாங்கள் பழைய கப்பலை மூழ்கவிட மாட்டோம்" என்று புதிய கப்பலின்
மேனேஜர் ஒருவர் தம்பட்டம் அடிக்கலாம். |
|
3. கேள்வி:
"ரஜினிகாந்த் எந்தக் கட்சியிலும் இல்லை. அவர் எந்தக் கட்சிக்கும்
வரமாட்டார் என்று நான் நினைக்கிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் நயினார்
நாகேந்திரன் கூறி இருக்கிறாரே? பதில்: 'அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு, அவர் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சிக்கு, ரஜினிகாந்த் தனது ஆதரவைத் தரமாட்டார் என்று நான்
நம்புகிறேன்' என்று நயினார் சொல்ல விரும்புகிறார் -
நாம் அவ்வாறும் பொருள் கொள்ளவேண்டும். பாஜக-வின் நலனுக்காக என்றெண்ணி நயினார்
அவ்விதம் பேசுகிறார். தவறல்ல. பாஜக-விலிருந்து அண்ணாமலை ராஜினாமா செய்துவிட்டு, அது பற்றியும் அவர் தொடங்கவிருக்கும் இயக்கம்
பற்றியும் அவர் பேசுகிற வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை, "2020ல் நான் பாஜக-வில் சேருவதற்கு முதல்
நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது
இயக்கத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார். பாஜக-வில் சேரப்போவதாக நான் ஏற்கனவே
வாக்குறுதி கொடுத்துவிட்டதால் அதை உடைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து என்னை
மன்னிக்கச் சொன்னேன். பிறகு அவரைப் பார்த்தும் மன்னிப்புக் கேட்டேன் ....
இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் மீது பெருமதிப்பும் மரியாதையும்
வைத்திருக்கிறேன்" என்றெல்லாம் ரஜினிகாந்துடன் தனக்குள்ள உறவு பற்றி
விரிவாகப் பேசினார். மோடியுடன் அண்ணாமலைக்கு இருந்த உறவை விட, ரஜினிகாந்துடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு பற்றி அந்த
வீடியோவில் சற்று அதிகம் பேசினார் அண்ணாமலை. ரஜினி குறித்த அந்த வார்த்தைகள்
மூலம், அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு, அவர் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு, ரஜினிகாந்த் ரசிகர்களை, அபிமானிகளை, அண்ணாமலை ஈர்க்க முனைவதாகவும் நாம் எடுத்துக்
கொள்ளவேண்டும். தனது இயக்கத்தின், தனது
கட்சியின், நலனில் அண்ணாமலை அவ்விதம் பேசினார்.
அதுவும் தவறல்ல. தலைவர்கள் பேசுவதைச் சரியாகப் புரிந்துகொண்டு மொத்தத்தில் எது சரி, எது நியாயம், எது
நாட்டுக்கு நல்லது என்று தீர்மானிப்பது நம் கையில் இருக்கிறது. |
|
4. கேள்வி: "பிரதமர் மோடி அமைதியானவர், 'கூல்' மனிதர், அசத்தலானவர்.
நான் அவரைப் போல் அல்ல" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி7 உச்சி
மாநாட்டுக்கு இடையே நமது பிரதமரைப் பாராட்டி இருக்கிறாரே? பதில்: அதிபர் டிரம்பின் நல்வார்த்தைகள், கடும் சொற்கள் - இரண்டுமே அவருக்கு வெறும்
ஆயுதங்கள். அவர் இனிய சொற்கள் மூலம் அடுத்தவருக்கு ஐஸ் வைத்துக் காரியம் சாதிக்க
விரும்புவார், அல்லது கடும் சொற்கள் பேசி எதிராளிக்குப் பயம் காட்டித் தன் வழிக்குக்
கொண்டுவர முனைவார். அவருடைய இரண்டு ஆயுதங்களும் இப்போது முக்கால் மொண்ணை. முன்பு
மோடி மற்றும் இந்தியா குறித்துக் கடும் வார்த்தைகள் சொல்லியும் அவை பலன்
தராததால், இப்போது மோடியிடம் ஐஸ் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறார் டிரம்ப். |
|
5. கேள்வி: "திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளின்
அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ஆண்டு தோறும் ஆயிரம் பள்ளிகளிடம் தலா 5 லட்ச ரூபாய், ஒரு தடையில்லாச்
சான்றிதழ் வழங்க பள்ளிகளிடமிருந்து 25 லட்ச ரூபாய், லஞ்சமாக வசூலிக்கப்
பட்டது" என்று தனியார் பள்ளிகளின் ஒரு கூட்டமைப்பு புகார் சொல்கிறது.
லஞ்சம் கொடுத்தவர்கள் சார்பாக, சென்ற ஆட்சியில் இவ்வாறு நடந்தது என்று ஒரு அமைப்பு
வெளிப்படையாக எந்த தைரியத்தில் சொல்ல முடிகிறது? பதில்: தமிழகத்தில்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில், அந்த தைரியத்தில். |
|
பகுதி 104 // 18.06.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment