Sunday, 7 June 2026

அண்ணாமலையின் புதிய அரசியல் கட்சி. பிளஸ் என்ன, மைனஸ் என்ன?

  

-- ஆர். வி. ஆர்

 

பாஜக-வில் இருந்த அண்ணாமலை, குறுகிய காலத்தில் பேர் பெற்றதற்கு என்ன காரணம்?

 

ஒன்று, அவர் தீர்க்கமாகத் திமுக-வை எதிர்த்தார். அதற்காகப் புள்ளிவிவரங்கள் சொன்னார். மிக லாஜிகலாகப் பேசினார். திமுக பதில் சொல்ல முடியாதவாறு, பொதுமக்கள் நம்பும்படி, அவர் அக்கட்சிக்கு  எதிராகப்  பிரசாரம் செய்தார்.

 

அதிமுக என்பது, சின்ன சைஸ் திமுக - ஹிந்து மதத்தை இளக்காரம் செய்யாத கட்சி அதிமுக என்றாலும். ஆகையால் அண்ணாமலை அதிமுக-வையும் எதிர்த்திருக்கிறார். பின்னர் மத்திய பாஜக 2026 சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணி அமைத்ததால், கட்சிக்குக் கட்டுப்பட்டு, கூட்டணியை மதித்து, அவர் அதிமுக-வை விமர்சிக்கவில்லை.

 

மூன்று, அண்ணாமலையின் அரசியல் பணியில் அசாதாரண உத்வேகமும் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டன. அவருடைய தலைமைப் பண்புகளும் பொதுமக்கள் பலரை அவர்பால் ஈர்த்தன.

 

அண்ணாமலையின் பிரபல்யத்திற்கு இந்த மூன்று காரணங்கள் போக, இன்னொரு அதி முக்கியக் காரணம் உண்டு. என்னவென்றால்: அகில இந்தியாவிலும், பாஜக-வைத் தவிர அனுபவம் மிக்க வேறு எந்தக் கட்சியும் தனது தலைவர்கள் எவருக்கும் உறவினர் அல்லாத ஒரு இளைஞரைக் கட்சியில் சேர்த்து ஒரே வருடத்திற்குள் அவரை ஒரு மாநிலத் தலைவராக ஆக்கி இருக்காது. உயர்ந்த பார்வை கொண்ட, தமிழகத்தின் மீது அக்கறை உள்ள, பாஜக தலைவர் மோடி அதற்குச் சம்மதித்தார் என்பது அந்த மிக முக்கியக் காரணம். அதை யாரும் மறக்கலாகாது.


தற்போது அண்ணாமலை பாஜக-விலிருந்து ராஜினாமா செய்து, ஒரு தனி இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதுபற்றி, ஜூன் 5ம் தேதி சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் அவர் பேசினார். அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி, தமிழகத்தில் நடக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.

 

அண்ணாமலை ஏன் பாஜக-வை விட்டு வெளியேறினார்? அவர் பாஜக-வில் இருந்தபோது, திமுக மற்றும் அதிமுக-வை அவர் விரும்புகிற சுதந்திரத்துடன் எதிர்த்து, பாஜக-வைத் தமிழகத்தில் ஒரு ஆளும் கட்சியாக, தனித்தோ அல்லது ஒரு கூட்டணிக் கட்சியாகவோ, அவர் அமர்த்த முடியவில்லை - அல்லது கணிசமான  எண்ணிக்கையில் பாஜக-வுக்கு எம்.எல்.ஏ சீட்டுகளை வென்று கொடுக்க முடியவில்லை - என்பதுதானே அதற்கான பிரதானக் காரணமாக இருக்க முடியும்?

 

பாஜக-வைத் தனது கொள்கை எதிரி என்று அறிவித்து 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட - இப்போது மற்ற சில கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கிற - தமிழக வெற்றிக் கழகமும் அண்ணாமலை பொதுவாக எதிர்க்க வேண்டிய ஒரு கட்சியாகத்தான் இருக்க முடியும். தவெக தமிழகத்கை எங்கு நன்றாக நிர்வாகம் செக்கிறதோ, அதற்காக அக்கட்சியைப் பாராட்டலாம். அது வேறு விஷயம்.

 

2026 சட்டசபைத் தேர்தலில், முன்னணிக்  கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் பெரிய அடி வாங்கின.  அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக-வுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காரணம்: விஜய் தலைமையில் தனிக் கட்சியாக வந்த தவெக என்னும் சூறாவளி, முன்பு ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக-வை, அவற்றின் கூட்டணிக் கட்சிகளோடு துவம்சம் செய்துவிட்டது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது: கட்சிக்குள் தேவையான சுதந்திரம் அண்ணாமலைக்குக் கிடைக்கவில்லை என்பதால் இந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை என்று ஆகாது.

 

தமிழகத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது – அநேகமாக 2031ல் தான் – களம் இப்படி இருக்கலாம். திமுக, எஞ்சிய அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அமைக்கும் கூட்டணிகள் முக்கிய அணிகளாகவும், அடுத்து அண்ணாமலையின் கட்சியும், பாஜக-வும் அவற்றின் கூட்டணிகளுடன் போட்டியாளர்களாக இருக்கலாம். மேற்சொன்ன ஐந்து கட்சிகளில் சில, அந்தத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இருக்காது என்று இப்போது சொல்வதற்கில்லை. ஆனால், அண்ணாமலையின் கட்சி மற்றும் பாஜக தங்களுக்குள் அப்போது ஒரு சுமூகக் கூட்டணியை அமைக்கவில்லை என்றால், அண்ணாமலை பாஜக-வை எதிர்க்கிறார் என்று ஆகும். அதனால் அவர் மோடியையும் அமித் ஷாவையும் எதிர்க்கிறார் என்றும் ஆகும். என்ன ஆனாலும் அண்ணாமலையின் கட்சியும் பாஜக-வும் தமிழகத்தில் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியல் செய்கின்றன, அவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றன, என்பது வருத்தமான காட்சி.

 

ஜூன் 5ல்  பேசிய அண்ணாமலை, "எப்படித் திமுக-வை, அண்ணா திமுக-வை, தவெக-வை, அண்ணன் சீமானை, அண்ணன் அன்புமணியை, பிரேமலதா அம்மாவை, ஐயா வைகோவை, ஜி.கே.வாசன் அவர்களை, பாரிவேந்தர் அவர்களை, ஏ.சி.சண்முகம் அவர்களை, ஜான் பாண்டியன் அவர்களை, எப்படி எல்லாத் தலைவர்களையும் பார்க்கிறோமோ, அப்படித்தான் நான் பாஜக-வையும் பார்ப்பேன். அந்தக் கட்சி மீது எனக்கு வன்மம் கிடையாது. அவர்களுடைய கொள்கையை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். நமது இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்துவோம். தரம் பார்த்து மக்கள் நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாம் மக்கள் முன் நிற்க வேண்டும்" என்று சொன்னார்.

 

பாஜக மீது வன்மம் கிடையாது என்று சொன்ன அண்ணாமலை, 'என்னைப் பொறுத்தவரை இனி பாஜக பத்தோடு பதினொன்று' என்றும் வெளிப்படுத்தி இருக்கிறார். உண்மையில், அண்ணாமலை குறிப்பிட்ட பல கட்சிகளின் தலைவர்களுக்கும் அரசியல் நன்னடத்தைக்கும், அவர்களுக்கும்  அரசியல் நேர்மைக்கும், அதிக தூரம் உண்டு. அந்தக் கட்சிகளையும் பாஜக-வையும் ஒரே மாதிரிப் பார்ப்பாரா அண்ணாமலை? அண்ணன் சீமான், ஐயா வைகோ மாதிரித்தான் அண்ணன் அமித் ஷா, ஐயா மோடியா?

 

'தேசத்திற்குப் பெரும் சேவை செய்த பாஜக-வை ஒரு வடநாட்டுக் கட்சி என்ற வகையில் அன்னியப்படுத்தி, தமிழ்நாட்டில் திமுக விஷ அரசியல் செய்கிறது, மக்களைத் திசை திருப்ப முனைகிறது. அதை எளிதில் முறியடிப்பதற்காக நான் பாஜக-விலிருந்து விலகி ஒரு தமிழனாக தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன், அந்தக் கட்சியின் மூலம் மக்களைக் கவர்ந்து திமுக எதிர்ப்பு ஓட்டுகளைப் பெற்று அக்கட்சியை நலிவுறச் செய்வேன்.  இதே ரீதியில், திமுக சாயலில் தென்படும் தவெக-வையும் நான் எதிர்க்க வேண்டி இருக்கும்.  இந்தப் பெரும் பணிக்காகத் தமிழகத் தேர்தல்களில் பாஜக-வுடன் தொகுதி ஒப்பந்தங்கள் செய்து கொள்வேன் - அதற்குத் தேவையான விரிவான கூட்டணியை அமைப்பேன், என் கட்சி வெல்லட்டும், பாஜக-வும் வெல்லட்டும், எங்களின் பிற கூட்டணிக் கட்சிகளும் பலன் பெறட்டும். முடிவில் நமது பெரிய இலக்கான திமுக, அதை ஒட்டிய தவெக, வரும் தேர்தல்களில் வீழட்டும்' என்ற கண்ணோட்டத்தில் அண்ணாமலை தொலைநோக்குத் திட்டம் அமைத்து அரசியல் செய்தால், அவர் பாஜக-விலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியது ஒரு பெரு நன்மைக்காக இருக்கும். அதற்கு மாறாக, திமுக, அதிமுக, தவெக மாதிரி பாஜக-வையும் ஒரு போட்டிக் கட்சியாகக் கருதி அண்ணாமலையின் கட்சி பாஜக-வை விமர்சிக்கும், அண்ணாமலையின் புதிய கட்சியின் செயல்பாடும் அவ்விதம் இருக்கும் என்றால் அது நல்லதல்ல, வருத்தம் அளிப்பதாகும்.

 

உலகம் போற்றும் பிரதமர் மோடி பாஜக-விற்குக் கிடைத்தது ஒரு பேரதிர்ஷ்டம். அண்ணாமலை தமிழக பாஜக-விற்குக் கிடைத்ததும் ஒரு அதிர்ஷ்டம். ஆனால் அண்ணாமலை  பாஜக-வில் தங்காதது மட்டுமல்லபாஜக-வையும் பிற கட்சிகள் போல்தான் டீல் பண்ணுவேன் என்கிற அளவில் இப்போது பேசிவிட்டார் – இது பாஜக-வின் துரதிர்ஷ்டம்.

 

தமிழக பாஜக-விற்குப் பல திசைகளில் இருந்தும் துடிப்புள்ள அர்ப்பணிப்புள்ள இளம் தலைவர்கள் கிடைக்கட்டும், அவர்கள் மோடி, அமித் ஷா மாதிரி எதற்கும் அசையாமல், எதையும் சந்தித்து, கட்சியில் நிலைத்து சேவை புரியட்டும் என்று தமிழகத்தின் நன்மைக்காக நாம் நினைத்துக் கொள்ளலாம்.

 

இதுவல்லாமல், தமிழக நலனில் நல்லதாக நாம் வேறென்ன நினைக்க முடியும்? பாஜக இந்தியக் கலாசாரத்தை எப்படி உயர்த்திப் பிடித்து, இந்தியாவின் தோன்றுதொட்ட ஹிந்து மத அடையாளத்தைக் காப்பாற்றி, இந்திய அரசை அற்புதமாக வழிநடத்துகிறதோ, அதே மாதிரி தமிழகத்தைப் போற்றி, தமிழக அரசையும் வெகு சிறப்பாக நடத்தட்டும், அதற்கான வாய்ப்பு வரட்டும், அதற்குத் தேவையான மக்கள் தலைவர்களும் பாஜக-வில் தொடர்ந்து உருவாகட்டும், அவர்கள் அக்கட்சியில் நிலைக்கட்டும், என்று நாம் நினைப்பதா? அல்லது, அந்த நற்காரியங்களை, பாஜக-வின் மாநிலத் தலைவராக இருந்த ஒருவர் கட்சியை விட்டு வெளியேறிச் செய்து காட்ட முற்படட்டும், அகில இந்தியாவில் வலிமையான திறமையான தேசப் பற்றுள்ள பாஜக தமிழகத்தில் நலிவுற்று சப்பைக் கட்சியாக இருக்கட்டும் என்று நாம் நினைப்பதா?

 

* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

No comments:

Post a Comment