Thursday, 25 June 2026

கேள்வி-பதில் (24.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "2026 தேர்தலுக்குப் பின், அதிமுக-வின் நிலை கவலைக்குரியதாக மாறும் என, தேர்தலுக்கு முன்பே பலமுறை சுட்டிக் காட்டினேன். நான் கூறியது இன்று நடந்துவிட்டது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறுகிறாரே?

 

பதில்: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக-வில் மக்களை வசீகரிக்கும் தலைவர் யாரும் இல்லை; 'எங்க பாட்டன் சொத்து' என்பதாக இரட்டை இலை சின்னத்தை மட்டும் நம்பி நடத்தப்படும் கட்சி அது; மக்கள் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் ஒருவரும் இல்லாத அக்கட்சி மெள்ள மெள்ளத் தேயும்; தேர்தல்களுக்காகக் கூடியவரை கூட்டணி சேர்த்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கலாம் - என்பதை அறிந்து சொல்ல அபாரமான அரசியல் ஆராய்ச்சியாளர் தேவையில்லை. யாரும் சொல்லலாம். திருமாவளவனும் சொல்லலாம்.

 

 

2. கேள்வி: "மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய்க்குத் தெளிவில்லை என்று கூறுவதை விட, எதிர்க் கட்சித் தலைவர்களுக்குத் தான் தெளிவில்லை என்று கூறவேண்டும்" என மதிமுக பொதுச்செயலர் வைகோ சொல்கிறாரே?

 

பதில்:  திமுக கூட்டணியை விட்டுத் தவெக பக்கம் மதிமுக சாய்கிற நிலையில், தெளிவு பற்றி வைகோ பேசுகிறார். வைகோ எதிலோ மிகத் தெளிவாக இருக்கிறார்.

 

 

3. கேள்வி: விஜய் நடித்த, முகம் சுளிக்கவைக்கும் வார்த்தைகள் கொண்ட, ஒரு சினிமாப் பாடல் மதுரை அருகிலுள்ள ஒரு அரசுப் பள்ளி வளாகத்திலுள்ள மேடையில் ஒலிபரப்பப் பட்டது. அந்த மேடையில் நின்றிருந்த மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனும் சேர்ந்து அந்தப் பாடலுக்கு ஜிங் ஜிங் டான்ஸ் ஆடி இருக்கிறாரே?

 

பதில்: தனது சினிமா பிரபல்யத்தால் மக்களின் வாக்குகளை அதிகம் ஈர்த்தவர் விஜய். அவர் முதலமைச்சர் ஆனபின் தனது சினிமா பர்சனாலிடியை விட்டுவிட்டுத் தன்னை ஒரு மக்கள் பிரதிநிதியாக, மக்கள் சேவகராக, மட்டும் முன்னிறுத்துவது, தனது அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் அவ்விதம் தன்னை முன்னிறுத்துவதை அவர் உறுதி செய்வது, நல்லது. அது சிறுவர்களின், இளைஞர்களின், எதிர்காலத்திற்கு அவசியம்.

 

பள்ளி மாணவர்களுக்கு அதீத ஒழுக்கமும் உயரிய நேர்மையும் நல்ல கட்டுப்பாடும் போதிக்கப் படவேண்டும். இவ்வாறு போதிக்கப்படும் அளவுகளில் பின்னர் அவர்களிடம் பாதியாவது தங்கலாம். அவர்களுக்குப் போதிக்கப்படும் அளவுகளே, அவர்களின் கண் முன் காண்பிக்கப்படும் உதாரணங்களே, துளியளவாக இருந்தால் அவர்களிடம் என்னதான் தங்கும்?

 

 

4. கேள்வி: இந்தமுறை மருத்துவ சேர்க்கைகளுக்காக நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் முன்னரே கசிந்தது என்பதால் நாடெங்கும் மறுதேர்வு நடத்தப்பட்டது. மறுதேர்வுக்கான வினாத்தாள்களை இடம் மாற்ற ராணுவம் பயன்படுத்தப் பட்டது. தேர்வு மையங்களுக்குள் நுழையும் மாணவர்களுக்கும் தீவிர பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன. அதிகப்படியான இந்த நடவடிக்கைகளை 'வீ த லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை குறை சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: நீட் தேர்வு தேவை இல்லை, என்கிறது திமுக. நீட் தேர்வு மையங்களில் நுழையும் மாணவர்களுக்கு இத்தனை பாதுகாப்பு சோதனைகள் தேவை இல்லை, என்கிறார் அண்ணாமலை. இரண்டுமே மாணவர்கள் நலனிற்காக சொல்லப்படுவதல்ல. பாஜக-வைக் கண்டனம் செய்யவேண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை மனம் குளிர்விக்க வேண்டும் என்பது திமுக-வின் திட்டம். பாஜக-வை அவ்வப்போது குறை சொல்லாமல் விடக்கூடாது என்பது அண்ணாமலையின் எண்ணமோ?

 


5. கேள்வி: சமீபத்திய ஜி-7 உச்சி மாநாட்டின்போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள தன்னைக் கெஞ்சினார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்ல, அது உண்மையல்ல என்று அந்தப் பெண்மணி மறுத்தவுடன் டிரம்ப் மறுபடியும் தான் பேசியது உண்மை என்று சாதிக்கிறாரே?

 

பதில்: மக்கு ட்ரம்பிற்கு ஒன்று புரியவில்லை, அல்லது அது பற்றி அவர் கவலைப்பட வில்லை.

 

டிரம்ப் மெனக்கெட்டு தனக்காகச் சேர்த்த மதிப்பும் மரியாதையும் உலகுக்கு உணர்த்துவது என்னவென்றால்: அவர் மெலோனியைச் சிறுமைப்படுத்திச் சொன்னதை இத்தாலியில், அமெரிக்காவில், உலகின் மற்ற நாடுகளில், எந்தப் பெண்ணும் நம்பமாட்டாள். எந்த ஆணும் கூட நம்பமாட்டான்.


பகுதி 106 // 24.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment