|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், இரட்டை
அர்த்தத்தில் கீழ்த்தரமாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்து, தான் இரட்டை
அர்த்தத்தில் பேசவில்லை என்கிறார் அவர். அவரது மறுப்பு ஏற்கக் கூடியதா? பதில்: அவர் பேச்சில் இரட்டை அர்த்தம் இருந்ததாகச் சொல்வது சரியல்ல. இருந்தது, கெட்ட அர்த்தம் மட்டும்தான். |
|
2. கேள்வி: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம்
தொனிக்கப் பேசியதாக எழும் குற்றச்சாட்டு குறித்து அவர் தந்தை மு.க. ஸ்டாலின்
விடுத்துள்ள அறிக்கையில், "உதயநிதி தவறுதலாகப் பேசும் நபரல்ல. அப்படியே
பேசினாலும், உடனடியாக
மன்னிப்புக் கேட்கும் இயல்புடையவர்"
என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? பதில்: உதயநிதி என்ன பேசினார் என்பது ஊருக்கே தெரிந்துவிட்டது. அவர் பேச்சில்
இரட்டை அர்த்தம் இல்லை என்று மு.க. ஸ்டாலின் நினைத்தால், "உதயநிதி அப்படிப் பேசவில்லை" என்று
மறுப்பதோடு நிறுத்தி இருப்பார். மாறாக, 'உதயநிதி தவறாகப் பேசினாலும் மன்னிப்புக்
கேட்பார், நானும் அவரை மன்னிப்புக் கேட்கச் செய்வேன். இதற்கெல்லாம் அவகாசம்
கொடுக்காமல் அவரை அவசரம் அவசரமாகக் கைது செய்திருக்க வேண்டாம்' என்று தொனிப்பது போல் மு.க. ஸ்டாலின் ஏன்
பேசுகிறார்? "என் மகன் குதிருக்குள் இல்லை" என்கிறாரே! |
|
3. கேள்வி: உதயநிதியின் சர்ச்சைக்குரிய தஞ்சாவூர்ப் பேச்சு, அதற்காக அவர்
கைது, இரண்டையும்
குறித்து கருத்துச் சொன்ன நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், "தமிழகத்தில்
அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் என்ற அடிப்படையை
மறந்து, இருவரும் பகைமை
பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு
செயல்படுவதும், அரசியல்
பழிவாங்கலில் ஈடுபடுவதும் தான் ஆட்சி நிர்வாகமா, மக்களுக்கான அரசியலா என்ற
கேள்வி எழுகிறது" என்று கூறி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? பதில்: இந்த விவகாரம் பற்றிச் சீமான் வாயைத் திறக்காமல் இருந்தால் உதயநிதியின்
பேச்சுக்காக அவரைச் சீமான் கண்டிக்கிறாரா, அல்லது
உதயநிதி பேசியது தவறல்ல என்ற எண்ணத்துடன் அவர் கைது செய்யப்பட்டதை மட்டும்
சீமான் ஆட்சேபிக்கிறாரா, அல்லது இரண்டுமே அதிகப்படியானவை என்று அவர் நினைக்கிறாரா, என்பது நமக்குத் தெரியாது. சீமான் வாய் திறந்து நீட்டி முழக்கி ஏதோ சொன்னாலும், அவர் தன் வாயைத் திறக்காத எபெக்ட்டைக் கொடுக்கிறார்.
சீமான் என்ன அர்த்தம் வைத்து ஜாங்கிரிப் பேச்சு பேசினார், என்ன காரணத்திற்காக யாருக்கும் புரியாதபடி பேசினார், என்பது அவருக்கு மட்டும் தெரியும். |
|
4. கேள்வி: தஞ்சாவூர்க் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை
அர்த்தத்தில் தவறாகப் பேசினார், ஆபாசத் தொனியில் பேசினார், என்றே இருந்தாலும், அதுபற்றிப்
பொதுவெளியில் பரவலாகப் பேசுவது நல்லதா? பதில்: ஒருகாலத்தில் அரசியல் மேடைகளில் ஆபாசப்
பேச்சுகள் ஒலித்த போது, அதுபற்றித் தெரிந்து மனதளவில் ஆட்சேபித்தவர்கள் கூட அதை வெளியில்
சொல்லிக் கண்டிப்பது நாகரிகமாக இருக்காது என்று மௌனமாக இருந்தார்கள். இது ஆபாசப்
பேச்சாளர்களை, அவர்களை வளர்த்துவிடும் அரசியல் கட்சியை, ஊக்குவித்தது. சமூக ஊடகங்கள், அவற்றில் வீடியோ என்றில்லாத அந்த நாளில், ஒரு ஆபாசப் பேச்சு பெரிதாகப் பரவாது.
பத்திரிகையிலும் அது பற்றிய செய்தி வராது. மேடையில் ஆபாசமாக விமர்சிக்கப்பட்ட
நபருக்கு அது அநேகமாகத் தெரியவரும். திமுக-வில் அனைவரும் தூக்கிக் கொண்டாடும்
உதயநிதியே இரட்டை அர்த்தத்தில் ஆபாசப் பேச்சு என்ற பழிக்கு ஆளாகும் போது, விஜய் அரசு அவரைக் கைது செய்தது. அதனால்
உதயநிதியின் பேச்சை சமூக ஊடகங்கள் வழியாகத் தமிழகம் நன்கறியும்படி செய்து அவர்
பேச்சு எப்படியானது என்று அனைத்து மக்களும் முடிவு செய்யட்டும் என்று
ஆக்கிவிட்டது இந்த அரசு. இரட்டை அர்த்தப் பேச்சுகளின் மீதான
வழக்குகள் அநேகமாக சட்டப்படி நிற்காது. உதயநிதியின் மீதான வழக்கு என்னவானாலும், திமுக-வின் வண்டவாளம் தற்போது அதிக
வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது - இதைத் திமுக ரசிக்காது. இனி மேடைகளில்
வெளிப்படும் ஆபாசப் பேச்சுகள் ஓரளவு குறைய வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில், உதயநிதி கைதானதும் அவர் என்ன பேசினார்
என்று மக்கள் பரவலாக அறிந்துகொண்டதும், அதை உதயநிதி புரிந்துகொண்டதும், நல்லது. |
|
5. கேள்வி: உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சு பற்றி மக்கள்
நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பொதுவெளியில் கருத்து சொல்லவில்லையே? பதில்: கமல்
எப்படிக் கருத்து தெரிவிப்பார் என்று நீங்களே ஊகிக்கலாம். 'ஒருவரின் பேச்சுக்கு என்ன அர்த்தம்
என்று அவரைக் கேட்பது சரியா, அவர் பேச்சைக்
கேட்டவர்களைக் கேட்பது சரியா? இதை நான்
கேட்பதாக நீங்கள் நினைத்தால், நான் கூறுவதை
நீங்கள் சரியாகக் கேட்கவில்லை என்று பொருள். இக்கேள்வியைக் கேட்பது உண்மையிலேயே
இச்சமூகத்தின் மனசாட்சி. அதை நாம் அனைவரும் காதுகொடுத்துக் கேட்டாக வேண்டும்.' |
|
பகுதி 120 // 07.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment