Friday, 14 August 2026

கேள்வி-பதில் (12.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "இந்தியப் பிரதமர் மோடி மனதளவில் வலுவானவர், உறுதி மிக்கவர். அது எனக்குத் தெரியும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு வீடியோ பேட்டியில் கூறி இருக்கிறார். எந்த அனுபவத்தில் டிரம்ப் இதைச் சொல்கிறார்?

 

பதில்: "கற்பாறை வலுவானது, உறுதியானது" என்று தனது மண்டைக் காயத்தைத் தடவியபடி ஒருவர் சொன்னால் அதில் உண்மை இருக்கும்.

 

 

2. கேள்வி: திரைத்துறையில் கமல் ஹாசன் தற்போது 67 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இந்த நேரத்தில் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள்?

 

பதில்:  மனிதர்கள் தம் வாழ்க்கையில் சிறப்பதற்குக் கமல் ஒரு விதத்தில் படிப்பினையாக இருக்கிறார். அதாவது, "ஒரு துறையில் நீங்கள் சொதப்பினால் (உதாரணம்: அரசியல்) நீங்கள் வேறு காரியத்தில் பரிமளிக்கலாம் (உதாரணம்: நடிப்பு). உங்களுக்கு ஏற்றது எதுவென்று அறிந்து அதில் உங்கள் பிரதான கவனத்தைச் செலுத்துங்கள்" என்று அனைவருக்குமான நற்சிந்தனையைக் கமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அது நல்ல விஷயம்.

 

 

3. கேள்வி: "தென்னிந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டில் இருந்து, இந்தியாவின் பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்" என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் பேசி இருக்கிறாரே? இது சாத்தியமா?

 

பதில்: அதன் சாத்தியம் பற்றி ஆதவ் அர்ஜுனா கவலைப்பட்டிருக்க மாட்டார். அவர் பேசியது, மிக அருகில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்யின் காதில் விழுந்தால் போதும் என்று மட்டும் ஆசைப்பட்டிருப்பார். அவர் ஆசை நிறைவேறி விட்டது. விஷயம் முடிந்தது.

 

 

4. கேள்வி: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை வாசிக்கும்போது பல தமிழ்ச் சொற்களை அவர் சரியாக உச்சரிக்கவில்லை என்று ஒரு எம்.எல்.ஏ சுட்டிக் காட்டியபோது, அமைச்சர் கோபப்பட்டு ஏதேதோ பேசினாரே - அடுத்த வாரம் தனது தவறான தமிழ் உச்சரிப்பை அவர் ஒப்புக் கொண்டாலும்?

 

பதில்: தமிழகத்தில் தமிழை நன்றாக உச்சரித்து - அதாவது தமிழை அடித்து உதைக்காமல், அல்லது தமிழின் கையை முறுக்காமல் அல்லது காதையாவது திருகாமல் - பேசுகிற தமிழர்களின் சராசரி வயது சுமார் 55-க்கு மேல் இருக்கும். இதற்கு பாதிக் காரணம், திமுக தலைமை பல பத்தாண்டுகளாக மக்களிடையே நேரடியாகவும் மறைமுகமாகவும்  வளர்த்துவிட்ட பொறுப்பில்லாத்தனம்.

 

பொறுப்பில்லாத்தனம் உள்ள ஒருவர் தாய்மொழியைச் சரியாகக் கற்றல், சரியாகப் பேசுதல் உட்பட எந்த சீரியஸ் விஷயத்திலும் அதற்குத் தேவையான நாட்டமும் அக்கறையும் செலுத்த மாட்டார். அப்படியான ஒரு தமிழர், தன் தாய்மொழியைச் சரியாகப் படிக்கவில்லை, பேசவில்லை என்றால் அதை ஒரு தவறாக, ஒரு இழுக்காக உணரமாட்டார். மரிய வில்சனின் பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், தமிழகத்தில் தமிழ் பரவலாகப் படும் பாடு வெளிச்சத்துக்கு வந்தது.

 

இந்தி தெரியாது போடா!

தமிழும் ததிங்கிணத் தோம்டா!

 


5. கேள்வி: மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபை ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது வரவேற்கத் தக்கதா?

 

பதில்: நீட் தேர்வை ரத்து செய்து அதற்குப் பதிலாகத் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடந்தால், அத்துடன் இன்டர்வியூ எனும் கண்துடைப்பைச் சேர்த்து இன்டர்வியூ மார்க்கையும் மருத்துவச் சேர்க்கைக்கு ஒரு தகுதியாக எடுத்துக் கொண்டால், டொனேஷன் கறக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளின் வளம் பெருகும், புதிய மருத்துவர்களின் தரம் கீழிறங்கும், பொதுமக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவை கிடைக்கும் சாத்தியம் மேலும் தள்ளிப் போகும்.

 

போலீஸ் துறையை இழுத்து மூடிவிட்டு, போலீஸ்காரர்களுக்குப் பதிலாக லுங்கி கட்டிய வாட்ச்மேன்களை ரோந்துப் பணிக்கு அமர்த்தினால் போதும் எனச் சட்டம் போட்டு, அதன் மூலம் கிராமப்புற, ஏழை எளிய, பின்தங்கிய மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசாங்கம் ரீல் சுற்றினால், அதை ரவுடிகளும் ஜேப்படிக்காரர்களும் குதூகலமாக வரவேற்பார்கள். அந்த வகையிலான கோரிக்கை தான் சட்டசபைத் தீர்மானம்.


பகுதி 122 // 12.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment