|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: தமிழகத்தின் ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்கும் ஒரு கார் அரசு
செலவில் வழங்கப்படும்; அத்துடன் டிரைவர் சம்பளம் மற்றும் கார்
பராமரிப்புக்காக, அரசு அவருக்கு
மாதம் 75,000 ரூபாய்
கொடுக்கும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறாரே? பதில்: அடிப்படைத்
தேவைகளான சுத்தமான குடிநீர், நிறைவான உணவு, சீரான மின்சாரம், தரமான
சாலைகள், சாலைப் போக்குவரத்து வசதிகள், பரவலான வேலை வாய்ப்பு ஆகியவை பெரும்பாலான சாதாரண
மக்களுக்கு இன்னும் கிட்டவில்லை. அதிகமானோருக்கு சுகாதாரமான இருப்பிடமும் இல்லை.
இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு வழங்கப்போகும் கார் + மாதம் ரூபாய் 75,000, சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அந்த அறிவிப்பை வெளியிட்டவுடன், எம்.எல்.ஏ-க்கள் வாயெல்லாம் பல்லாகத் தங்கள் மகிழ்வை
வெளிப்படுத்தினர். அது அவர்கள் செய்யப் போகும் அதிகமான மக்கள் பணியை நினைத்து
அல்ல. தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சி தங்களை நன்றாகக் கவனிக்கிறதோ, அதற்கு மக்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்ற ஒரு
எண்ணம் தமிழகத்தில் இருக்கிறது. எந்த முதல்வர் தங்களை அரசு செலவில் மூச்சு
முட்டக் கவனிக்கிறாரோ, சட்டசபையில் அவருக்குத் திடீரெனத்
தேவையாகும் ஆதரவைப் பல கட்சி எம்.எல்.ஏ-க்கள் என்னவானாலும் நன்றியோடு அளிக்க
முன்வருவார்கள் என்ற புதிய நினைப்பும் நம் மாநிலத்தில் எழுந்திருக்கிறது. |
|
2. கேள்வி: மக்கள் பணியாற்றும் உள்ளாட்சி கவுன்சிலர்கள் மற்றும்
வார்டு மெம்பர்களுக்கு இலவச பிரைவேட் ஆட்டோ மற்றும் மாதம் 20,000 பராமரிப்புத்
தொகை வேண்டாமா? அதில்லாமல்
அவர்கள் எப்படிப் பணி செய்வார்கள்? பதில்: விஜய் அரசுக்குச் சட்டசபையில் ஆட்டம்
வந்தால், கவுன்சிலர்களும் வார்டு மெம்பர்களும் சட்டசபைக்கு வந்து விஜய்க்கு ஆதரவாக
வாக்களித்து, அப்போதைய நிலையில் தேவையாக இருக்கக் கூடிய ஒன்றிரண்டு அதிக வாக்குகள்
விஜய் அரசுக்குச் சாதகமாகக் கிடைக்கும்படி செய்யமுடியாது. பிறகு அவர்கள் என்ன
பெரிய மக்கள் பணி செய்யமுடியும்? |
|
3. கேள்வி: அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு செலவில் கார்
என்று முதல்வர் விஜய் அறிவித்தவுடன், "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்; அவர் யாருக்காகக் கொடுத்தார்; ஒருவருக்கா
கொடுத்தார்; இல்லை, ஊருக்காகக்
கொடுத்தார்" என எம்.ஜி.ஆர் நடித்த 'படகோட்டி' படத்தின் பாடலை, குடியாத்தம்
தொகுதி எம்.எல்.ஏ சிந்து பாடிக் காண்பித்து முதல்வருக்கு நன்றி
தெரிவித்திருக்கிறாரே? பதில்: ஊரில்
உள்ள ஒவ்வொரு மனிதருக்கும், அல்லது ஒவ்வொரு
குடும்பத்திற்கும், விஜய் அரசு இலவச கார் மற்றும் மாதம் 75,000 ரூபாயை வழங்கவில்லை. அந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கப்
போவது, தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும். மொத்த ஊரும்
எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான் என்று அந்த எம்.எல்.ஏ மெய்மறந்து நினைக்கிறார். |
|
4. கேள்வி: விஜய் பிரதமராகக் கூட ஆகலாம் என்ற பேச்சு எழுகிறது.
அவர் லோக் சபா எம்.பி-யாகத் தேர்வாகிப் பிரதமரானால், ஒவ்வொரு லோக் சபா
எம்.பி-க்கும் அரசு செலவில் ஒரு கார் மற்றும் பராமரிப்புத் தொகை வழங்குவாரா? பதில்: பிரதமர் நிலையில், விஜய் பாரபட்சம் காட்டமாட்டார் என
நம்பலாம். ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு
லோக் சபா தொகுதி. ஆகையால் ஒவ்வொரு லோக் சபா எம்.பி-க்கும் அவர் ஆறு கார்கள்
வழங்கலாம். அந்த அறிவிப்பை அவர் லோக் சபாவில் வெளியிட்டவுடன் புளகாங்கிதம்
அடைந்த ஒரு தவெக எம்.பி., விஜய்யைப் பாராட்டி இப்படி ஒரு பாடல் பாடலாம். "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்; அவர் எத்தனை கார்கள் கொடுத்தார்; ஒரு காரா கொடுத்தார்; இல்லை, ஆறு கார்கள் கொடுத்தார்." |
|
5. கேள்வி: "முதல்வர் விஜய்க்கு சினிமாவுல மட்டும்தான்
நடிக்கத் தெரியும். அதைத் தாண்டி, வெளியில் வந்து அவருக்கு நடிக்கத் தெரியாது"
என்று அமைச்சர் ஆனந்த் சட்டசபையில் பேசி இருக்கிறாரே? பதில்: அமைச்சர்
ஆனந்த் வெளியில் நன்றாக நடிக்கிறார். |
|
பகுதி 126 // 21.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment