Thursday, 27 August 2026

கேள்வி-பதில் (27.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "சபையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுப்பேன். சபை விதியை நான் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள்" என்று அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளாரே?

 

பதில்: சபாநாயகர் இதுபோன்ற எச்சரிக்கையைப் பலமுறை விடுத்துள்ளார். ஊரில் சிலர் பட்டப்பகலில், எங்கும் கேமராக்கள் இருந்தாலும், ரவுடித்தனம் மற்றும் வழிப்பறி செய்கிறார்கள் என்றால் போலீஸ்காரர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா அல்லது அவர்களை நோக்கி, "நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து ரவுடித்தனம், வழிப்பறி செய்தால் நடவடிக்கை எடுப்பேன். நான் சட்டப்படி செயல்படும் கட்டாயத்தை உருவாக்காதீர்கள்!" என்று அடிக்கடி எச்சரிக்கை விடுப்பாரா?

 

பல மாநில சட்டசபைகளில், லோக் சபாவில் கூட, இதே நிலைமை என்பது சபாநாயகர் பிரபாகருக்கு ஆறுதல்.

 

 

2. கேள்வி: "தமிழகத்தைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் பிரச்சனை உணர்வு பூர்வமானது. முஸ்லிம்களுக்குப் பாதுகாவலனாக இருந்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கட்சி திமுக-தான்" என்று சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ,  எ.வ. வேலு பேசியிருக்கிறாரே?

 

பதில்: திமுக-வின் பார்வையில் இரண்டு விஷயங்களைச் சுற்றி வளைத்துத் தெளிவுபடுத்தி இருக்கிறார் எ.வ. வேலு.

 

ஒன்று: தமிழகத்தைப் பொறுத்தவரை, ஹிந்துக்களின் மத நம்பிக்கைகள் இழிவு செய்யப்பட்டால், அந்த நம்பிக்கைகளுக்குப் பாதகம் வந்தால் - அது ஒரு அரசியல் கட்சியிடமிருந்து வந்தாலும் -  தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வு ஹிந்துக்களுக்குக் கிடையாது. ஆகையால் உணர்வு பூர்வமான பிரச்சனை என்பது ஹிந்துக்களுக்கு இல்லை; எனவே திமுக அவர்களுக்குப் பாதுகாவலனாக இருக்க அவசியமில்லை.

 

இரண்டு: திமுக முஸ்லிம்களைப் பாதுகாப்பது, உணர்வற்ற அப்பிராணி ஹிந்துக்களிடமிருந்து - சாதாரண முஸ்லிம் மக்களுக்கு அதுபோன்ற விசேஷப் பாதுகாப்பு தேவையில்லை, அவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும்.

 

விஷயம் என்னவென்றால்: ஒரு சாராருக்குத் திமுக செயற்கையாகப் பயம் காட்டி, அவர்களுக்குப் பாதுகாவலனாக இருந்து அந்த பயத்தைப் போக்குவதும் திமுக-தான் எனக் காலம் காலமாக தகிடுதத்தம் செய்வதில் திமுக, கில்லி.

 

 

3. கேள்வி: சட்டசபையில் ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஏதோ சொல்ல, அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கீர்த்தனா, "காசு கொடுத்தால் எதையும் எழுதும் ஒரு பத்திரிகையில் வந்த தவறான செய்தியை அவர் கூறுகிறார்" என்று பேசியிருக்கிறாரே?

 

பதில்: சில பத்திரிகைக்காரர்கள் அவ்வாறு நடந்துகொள்ளலாம். அமைச்சர் பதவியில் அமர்த்தி சம்பளம் மற்றும் சலுகைகள் கொடுத்தால் சில மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கட்சித் தலைவரைத் திருப்தி செய்ய எதையும் பேசலாம். இது தரப்பினரும் நம் ஜனநாயகத்தின் தூண்கள்.

 

சரியான வேலை மற்றும் சம்பளம் கிடைக்காமல், பலவகையில் காசும் கிடைக்காமல், அந்த இரு ஜனநாயகத் தூண்களையும் தாங்கியபடி அடியில் அழுந்திக் கிடப்பது அப்பாவி மக்கள்.

 

 

4. கேள்வி: "மூன்று நான்கு நாட்களாக ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மாலை ஆறரை மணிவரை சட்டசபையில் சண்டை மட்டும் போடுகிறார்கள். எப்பப் பாரு சண்டை, சண்டை, சண்டை. மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதில்லை. இது மனதிற்கு வேதனையாக இருக்கிறது" என்று சட்டசபையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா பேசி இருக்கிறாரே?

 

பதில்: பிரேமலதா பேச்சில் சாரம் உள்ளது.

 

முதலமைச்சர் விஜய் நினைத்தால், இந்தச் சண்டையைச் சில தவெக உறுப்பினர்கள் - குறிப்பாக ஒன்றிரண்டு அமைச்சர்கள் - ஆரம்பிக்காமல் அல்லது ஊதி ஊதிப் பெரிதாக்காமல் சபை மேலும் கண்ணியமாக நடக்கச் செய்யமுடியும். விஜய் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.  இந்தச் சண்டையை, ஆளும்கட்சி என்பதால் தவெக-வின் கை அநேகமாக ஓங்கியே இருக்கும் இந்தச் சண்டையை, முதலமைச்சர் விஜய் மௌனமாக ரசிக்கிறார். அதைப் புரிந்துகொண்டு சில தவெக உறுப்பினர்கள், குறிப்பாக ஒன்றிரண்டு அமைச்சர்கள்,   முதலமைச்சரிடம் நல்ல பேர் வாங்கும் நினைப்பில் சண்டையை வளர்க்கிறார்கள்.

 

சில சினிமாக்களில் உண்மையான வில்லனைப் பார்வையாளர்கள் ஊகிக்க முடியாதவாறு அவரது நடை, உடை, பாவனைகள் இருக்கும். சில விஷயங்களில் விஜய் அப்படியானவராக இருக்கிறார்.

 


5. கேள்வி: "அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்கு வெள்ளையடித்துக் கொண்டனர். தமிழ்நாடு தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது" என்று திமுக தலைவர் ஆ. ராசா பேசியிருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்களில் வெள்ளையடித்தவர்கள், வெள்ளையடிக்காதவர்கள் என அனைவரிடமும் கொள்ளையடித்தவர்கள் யார்? அவர்கள் எந்தக் கட்டிடம் தோன்றிய பிறகு குடும்பம் குடும்பமாக, ஒன்று மட்டும் சூப்பர் குடும்பமாக, அசுர வளர்ச்சி கண்டார்கள்?


பகுதி 128 // 27.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment