Sunday, 23 August 2026

கேள்வி-பதில் (23.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழக முதல்வர் விஜய், வருங்காலப் பிரதமர்" என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு பேசினார்?

 

பதில்: ஒன்று, விஜய் முதலமைச்சராக இருப்பது அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குப் பிடிக்காமல் இருக்கலாம் - இதைப்பற்றி ஜெகதீஸ்வரியிடம் விஜய் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அல்லது, ராகுல் காந்தி பிரதமராக வருவது ஜெகதீஸ்வரிக்குப் பிடிக்காமல் இருக்கலாம் - இதைப்பற்றி விஜய்யிடம் ராகுல் காந்தி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டும் இல்லாமல், ஜெகதீஸ்வரி 'விஜய் மேனியா'வால் பாதிக்கப்பட்டிருக்கலாம் - இதைப்பற்றி ஜெகதீஸ்வரி ஒரு மனநல மருத்துவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 

இன்னொன்று. ஹிந்தி நடிகர் ஷாருக் கானுக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் பெரிதாக ஓட்டு வாங்கமுடியாது. ஒரு நடிகராக விஜய் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.  ஆனால் வட இந்திய எம். பி. தொகுதி வேட்பாளர்கள் விஜய் பெயரைச் சொல்லி ஜெயித்து அவரைப்  பிரதமராகத் தேர்வு செய்யும் அளவுக்கு - அதில் ஒண்ணரை சதவிகிதம் கூட - விஜய்க்கு வட இந்தியாவில் பிரபல்யம் இல்லை. இதெல்லாம் போக, தன் கட்சியின் பெயரில் ஒரு தென் மாநிலத்தின் பெயரைச் சேர்த்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அகில இந்திய அளவில் மெஜாரிட்டி எம். பி-க்களைத் திரட்டி நாட்டின் பிரதமர் ஆவதை மக்கள் பார்க்கவேண்டும் என்றால்: 'ஜனநாயகன்-2' என்ற புதிய சினிமாவில் விஜய் அந்தக் காட்சியை நடிக்க வேண்டும்.

 

 

2. கேள்வி: "2031-ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி உறுதியாக அமையும்" என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கிறாரே?

 

பதில்: '2031 சட்டசபைத் தேர்தலில், தவெக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், அண்ணாமலை தொடங்கப்போகும் புதிய கட்சி ஆகிய அனைத்துக் கட்சிகளையும், அவை 2031-ல் அங்கம் வகிக்கப் போகும் தேர்தல் கூட்டணிகளையும் பாமக தனியாகவோ கூட்டணியாகவோ வென்று, நான் முதலமைச்சர் ஆகி ஆட்சி செய்வேன்' என்கிறார் அன்புமணி ராமதாஸ். அன்புமணியின் பேச்சை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. சீமானும் திருமாவளவனும் தங்கள் கட்சிகள் குறித்து இதே போல் பேசினால் அதற்கு என்ன பெரிய மதிப்போ, அதற்கு ஒரு குந்துமணி கூடக் குறையாத பெரும் மதிப்பு அன்புமணியின் பேச்சுக்கும் உண்டு.

 

 

3. கேள்வி: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியைப் பாராட்டிய விசிக தலைவர் திருமாவளவன், "எந்தத் துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை, 100 நாள் ஆட்சியில் தவெக சம்பாதித்துச் சாதித்துள்ளது" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு அரசுத் துறையில் ஊழியர்கள் பல மட்டத்தில், பல இடங்களில், செயல்படுகின்றனர். பொத்தாம் பொதுவாக "விஜய் ஆட்சியின் எந்தத் துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை" என்று ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் சொன்னால், அவர் தெரிந்தே பாதி உண்மை, பாதி பொய்யைக் கலந்து பேசுகிறார், சுயலாபத்திற்காக விஜய்க்கு ஐஸ் வைக்கிறார் என்று அர்த்தம்.

 

அங்கும் இங்கும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாமூல் வசூலிக்கும் நபர்கள், திருமாவளவன் பேச்சைக் கேட்கும் போது என்ன நினைப்பார்கள்? 'நாம் வாங்குவது யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து வாங்குவோம், நிறைய வாங்குவோம்' என்று நினைக்க மாட்டார்களா?

 

 

4. கேள்வி: அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு செலவில் தலா ஒரு காரும், அந்தக் காருக்கான டிரைவர் செலவு மற்றும் பராமரிப்புத் தொகையாக மாதா மாதம் 75,000 ரூபாயும், வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிக்க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி "ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய்யே கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுக-வைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ-க்கள் அரசு வழங்கும் கார்களைப் பெற மாட்டோம்" என்று சட்டசபையில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: போலியான காரணத்திற்காக, எம்.எல்.ஏ-க்களுக்கு 'கார் ஆஃபர்' கொடுத்தார் விஜய். போலியான காரணத்திற்காக, திமுக சார்பாக அதை ஏற்க மறுத்தார் உதயநிதி. இருவரும் அவர்களுக்கு மட்டுமே புரியும் ஆட்டத்தை ஆடுகிறார்கள்.

 


5. கேள்வி: "ராகுல் காந்தியைப் பிரதமராக்க இந்தியாவே தயாராக இருக்கிறது; தமிழகமும் தயாராக இருக்கிறது" என்று காங்கிரஸ் தமிழகத் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசி இருக்கிறாரே?

 

பதில்: மாணிக்கம் தாகூரைக் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக ஆக்கியவர் ராகுல் காந்தி. அதற்காக ராகுல் காந்திக்கு அவர் அவ்வப்போது விதவிதமாக நன்றி சொல்வார். ஒன்றும் நடந்துவிடாது. கலக்கம் வேண்டாம்.


பகுதி 127 // 23.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment