|
கேள்வி-பதில் |
|
கேள்வி: திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர்
மேடையில் ஆபாசமாகப் பேசிய குற்றச்சாட்டில் இன்று கைதாகி இருக்கிறார். அவர் கைது
சரியா? பதில்: சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப்
பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, பொதுவெளியில் நன்கு அறியப்பட்ட ஒரு பெண்ணை
மையப்படுத்தி, முதலமைச்சர் விஜய்யையும் தொடர்புபடுத்தி, கொச்சையாக, ஆபாசம்
தொனிக்கும் வகையில் ஒரு கமென்ட் அடித்தார். அது ஆபாசமானது என்பதில்
சந்தேகமில்லை. வெளியில் யாரும் சொல்லிக் காட்டுவதற்கே கூச்சப் படும் அளவுக்கான அந்த
கமென்ட், உதயநிதியின் வாயிலிருந்து வெகு இயல்பாக
வந்தது. அநேகமாக, திமுக தவிர வேறு எந்தக் கட்சியினரிடமும்
உதயநிதி பேசிய ஆபாசப் பேச்சை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அதுவும்
தமிழகத்தைப் பல வருடங்கள் ஆட்சி செய்த ஒரு கட்சியின் இரண்டாம் மேல்நிலைத் தலைவர்
- முதல் மேல்நிலைத் தலைவருக்கு இணையாகக் கட்சிக்குள் மதிக்கப் படுகிற அவர் -
மேடையில் ஆபாசமாகப் பேசுவது, ஒரு பெண்
தொடர்பாகவும் அப்படிப் பேசுவது, வன்மையாகக்
கண்டிக்கத் தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர்
பெ. சண்முகம் அதற்கான கண்டனத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறார். ஆபாசப் பேச்சு - வெளிப்படையாகவோ, இலைமறை
காய் மறையாகவோ - திமுக-வினரிடம் மிகுந்து காணப்படுவதற்குக் காரணம் திமுக-வின்
தலைமை. தமிழறிந்த கலைஞர் கருணாநிதி அதில் ஈடுபட்டார். ஒரு தலைவரே அந்தக் காரியத்தைச் செய்தால், அவ்வாறு பேசலாமா என்று மனதில் நினைத்திருக்கும் பலரும்
அதனால் உடனே ஈர்க்கப் படுவார்கள். அத்தகையவர்கள் தலைவருக்கும் பிடித்துப் போகும், அவர்கள்தான் கட்சிக்குள் நிர்வாகப் பொறுப்புகளுக்கும்
தலைமைப் பதவிகளுக்கும் நியமிக்கப் படுவார்கள். இது திமுக-வில் நிகழ்ந்து
வருகிறது. ஒரு தலைவரின் உயர்ந்த எண்ணங்கள் மற்றும் சிறந்த செயல்பாடுகளை விட, அவருடைய கீழான சிந்தனைகளும் மலிவான செயல்களும்
அதிகமானோரை ஈர்க்கும், விரைவாகவும் ஈர்க்கும். அதனால்தான்
திமுக-வில் மலிவாகவும் ஆபாசம் தொனிக்கும் வகையிலும் பேசும் எண்ணம் கொண்டவர்கள்
நிறைய இருக்கின்றனர். உதயநிதி இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர்
கொண்டுசெல்லப்பட்டு அங்கு விசாரணை முடிந்த நிலையில் விடுவிக்கப் பட்டார்.
தஞ்சாவூரிலிருந்து சென்னை திரும்புவதற்காகத் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த
உதயநிதி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் பேசாத ஒன்றைப் பேசியதாகச் சொல்லி, தான் பேசியதை வெட்டி ஒட்டிக் காண்பித்து, தன் மீது காவல்துறை வழக்குப் பதிந்திருப்பதாக உதயநிதி
சொன்னார். எந்த வார்த்தையைக் காவல்துறை வெட்டியது, ஒட்டியது, என்று
உதயநிதியால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அந்த வார்த்தையை
மறுபடியும் வெளியில் சொல்வது, அதுவும் அவர்
பேசியது சரி என்று நியாயப்படுத்தி அந்தச் சொற்களை மறுபடியும் சொல்வது, அவருக்கே கூச்சமாக இருந்திருக்கும். உதயநிதி பேசியது பற்றி விஜய் அரசு எடுத்திருக்கும் சட்ட நடவடிக்கை
கடைசிவரை கோர்ட்டில் நிற்குமா, வெற்றி பெறுமா
என்பது வேறு விஷயம். ஆனால் உதயநிதியின் கமென்ட் ஆபாசமானது, அருவருக்கத் தக்கது, பெண்களை
மலினப்படுத்திப் பேசும் தரம்கெட்ட செயல் என்பது நிச்சயம். உதயநிதியின் கைது மற்றும் போலீஸ் விசாரணையால், அதுபற்றிய விரிவான செய்திகளால், பொதுமக்கள் பலரும் அவர் என்ன பேசினார் என்பதை
அறிவார்கள். அதாவது, தஞ்சாவூர்க் கூட்டத்துடன் தனது முறையற்ற
பேச்சு முடிந்துவிடும் என்று அப்போது நினைத்த உதயநிதி, தரம் தாழ்ந்த தனது கமென்ட் இவ்வளவு விரிவாகத்
தமிழகத்தில் அம்பலமாவதை அதிர்ச்சியுடன் தான் பார்ப்பார் - வெளியில் அவர் என்ன
காட்டிக் கொண்டாலும். இதுபோக, மேடைகளில்
ஆபாசமாகப் பேசாத முதலமைச்சர் விஜய், உதயநிதியின்
மீது எடுத்த கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற வழக்கு, ஆபாசப் பேச்சுக்கு எதிரான ஒரு பலத்த நடவடிக்கையாக
அமைந்து பெண்களிடம் பரவலான வரவேற்பைப் பெறும். உதாநிதியின் மீதான ஆபாசப் பேச்சுக்கான வழக்கு எப்படி முடிந்தாலும் சரி.
பலம் வாய்ந்த திமுக-வின் இன்றையப் பெரும் தலைவர் அவர் என்பதால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தமிழக அரசியல்
மேடைகளில் ஒலிக்கும் ஆபாசப் பேச்சு ஐந்து சதவிகிதமாவது குறையும் என்று
எதிர்பார்க்கலாம். அந்த வகையில் உதயநிதியின் மீதான நடவடிக்கை நல்லது செய்ய
வல்லது. அந்தக் காலத்தில், அப்பாவிடம் அண்ணன் அடி வாங்குவதைப்
பார்த்துத் தம்பிகள் தானாக வழிக்கு வருவதை நம் வீடுகளில் முன்பு
பார்த்திருக்கிறோம் அல்லவா? |
|
பகுதி 119 // 04.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment