|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: ஒரு பொதுமேடையில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி, வெளியுறவுக்
கொள்கையை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என்று காண்பிக்கிறேன்" என்று
சொல்லிவிட்டு, அருகில் இருந்த
ஒரு காங்கிரஸ் நிர்வாகியைக் கவுண்டமணி பாணியில் இறுகத் தழுவிப் பின் விலகி வந்து, "இதுதான்
வெளியுறவுக் கொள்கை என்று மோடி நினைக்கிறார்" என்று பிரதமரைக் கேலி
செய்திருக்கிறாரே? பதில்: இரு
நபர்கள் சந்திக்கும்போது, தமக்குள் அன்பு கலந்த மரியாதையை
வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒருவரை ஒருவர் மெலிதாக அணைக்கும் வழக்கம் மேல்
நாடுகளில் இருக்கிறது. இது இந்தியாவிலும், குறிப்பாக
மேல்தட்டு மக்களிடம், பரவி வருகிறது. உலக அரங்கில் பிரதமர் மோடியின் நிதானமான, தீர்க்கமான, நல்லெண்ணம் மிக்க சிந்தனையும் பேச்சும் அணுகுமுறையும்
பல மேல்நாட்டுத் தலைவர்களை ஈர்த்து, மோடியின்
மீது அவை ஒரு அசாதாரண மதிப்பை அத் தலைவர்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளன. ஆகையால்
அவர்கள் மோடியை நேரில் சந்திக்கும்போது அவர் தங்கள் கைகளைப் பற்றுவதோ அல்லது
தங்களை மெலிதாக அணைப்பதோ தங்களுக்கு ஒரு கௌரவம் என்று அந்த மேல்நாட்டுத்
தலைவர்கள் நினைப்பார்கள். மேல்நாடுகளில், இன்னொருவரைப் பற்றி ஒன்றும்
தெரியாவிட்டால், அல்லது இன்னொருவரின் மீது குறைவான
மதிப்பு வைத்திருந்தால், அந்த மனிதரைச் சந்திக்கும்போது அவரை
மெலிதாக அணைக்க விரும்பமாட்டார்கள் - வேண்டுமானால் அவருடன் வெறுமனே கைகுலுக்கி
விலகி இருப்பார்கள். சாதாரணமாகவே ராகுல் காந்தி ஒன்றும் தெரியாத பித்துக்குளி. வெறுப்புடன்
மோடி பற்றிப் பேசும்போது, சுத்தப் பைத்தியம். |
|
2. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலின் போது சைதாப்பேட்டைத் தொகுதியில்
திமுக சார்பாக மா.சுப்பிரமணியன் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இதுகுறித்து
கருத்துத் தெரிவித்த திமுக-வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, "சைதாப்பேட்டை
வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது" என்று பொதுமேடையிலிருந்து அத்தொகுதி
வாக்காளர்களைத் திட்டி இருக்கிறாரே? பதில்: ஆர்.எஸ். பாரதி யாரைப் பழித்தாலும்
திட்டினாலும் அவர்கள் ஏதோ நல்லது செய்திருக்கிறார்கள் என்று பொருள். அவரது வசவு
வார்த்தைகள் மோசமாக இருந்தால், அதைப் பெறுகிறவர்கள் மிக நல்ல காரியம் செய்திருப்பதாக அர்த்தம். |
|
3. கேள்வி: மத்திய அரசு உத்தேசித்திருக்கும் லோக் சபா தொகுதி
மறுவரையறைக்கு ஆதரவாகத் தமிழக சட்டசபையில் பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா, "தற்போது 10 லட்சம்
பேருக்கு ஒரு எம்.பி. மட்டுமே இருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறை செய்வதன்
மூலம் 7 லட்சம் முதல் 8 லட்சம்
பேருக்கு ஒரு எம்.பி. என எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம்
தமிழகத்துக்கு 59
எம்.பி-க்களுக்கு மேல் கிடைப்பார்கள்" என்ற விளக்கத்தை முன்வைத்தார். இது
தேமுதிக-வுக்கு ஏற்புடையதாக இருக்கிறது, ஆனால் காங்கிரஸ் மற்றும் தவெக-வுக்கு அப்படி அல்ல.
ஏன் இந்த வேறுபாடு? பதில்: பாஜக
எதைச் செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பது காங்கிரஸின் கொள்கை. ஆகையால்
தொகுதி மறுவரையறை மசோதாவைக் காங்கிரஸ் எதிர்க்கும். தவெக-வைப் பொறுத்தவரை, விஜய் எப்படி
இருந்தாலும் அந்தப் புதிய கட்சியில் சரியான எம்.பி. வேட்பாளர்கள் அதிக
எண்ணிக்கையில் கிடைப்பது தற்போது சிரமம். கண்டவர்களும் அதிக அளவில் எம்.பி-யாகத்
தேர்வாகி அவர்கள் அசட்டுத்தனமாகப் பேசி அல்லது நடந்துகொண்டு கட்சியின் பெயரை
மேலும் மேலும் கெடுக்கவேண்டாம், ஆகவே இருக்கிற
எம்.பி. எண்ணிக்கையே தமிழகத்திற்குப் போதுமானது, அதில்
இருக்கப் போகும் தவெக எம்.பி-க்களை நாம் சமாளித்தாலே போதும், என்று விஜய் நினைக்கலாம். அத்துடன், பாஜக-வைத் தனது 'கொள்கை
எதிரி' என்று முன்பே அறிவித்துவிட்ட தவெக, அதை நிரூபிக்க பாஜக-வின் முக்கிய நடவடிக்கைகளை
எதிர்க்க நினைக்கலாம். லாஜிகலாக வேறு ஒன்றும் தெரியவில்லை பிரேமலதாவைப் பொறுத்தவரை, தமிழகத்திற்கு
அதிக எம்.பி-க்கள் கிடைத்தால் தேமுதிக
அங்கம் வகிக்கும் கூட்டணியில் அக்கட்சிக்கு ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுகள்
அதிகமாகக் கேட்டுப் பயனடைய அவர் நினைக்கலாம். |
|
4. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் பிரசாரம் செய்ய விஜய்
கரூர் சென்றபோது, அங்கு கூட்ட
நெரிசலில் சிக்கி 41 நபர்கள்
இறந்தனர். அந்தத் தேர்தலில் விஜய் வென்று முதலமைச்சரான பின், கரூர் நெரிசலில்
இறந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு அரசு வேலை வழங்கினார். அதை எதிர்த்து
வழக்குத் தாக்கல் செய்த மனுதாரரிடம், "நடந்தது துயர சம்பவம். அதில் அரசியல் செய்யக்
கூடாது" என்று உச்ச நீதிமன்றம் வாய்மொழியாகக் கூறி இருக்கிறதே? பதில்: உச்ச நீதிமன்றத்தின் கருத்து நியாயமானது.
இருந்தாலும் தவிர்க்கமுடியாத ஒரு கேள்வி எழுகிறது: வாகன விபத்து, மின்னல் தாக்குதல், மாடு முட்டுதல், நாய்க்கடி, என்று பலவாறாகத் துயர மரணங்கள்
வாழ்க்கையில் நிகழ்கின்றன. ஆனால் பாதிக்கபட்ட அந்தக் குடும்பங்களைத் தவிர்த்து, விஜய் கூட்டம் தொடர்பான உயிரிழப்புகளைச்
சந்தித்த குடும்பங்களுக்கு மட்டும் விஜய் அரசு வேலை வழங்கினால், அது துயர சம்பவத்தில் அரசியல் செய்வதாகாதா? |
|
5. கேள்வி: "எனக்கு மூன்றாம் முறை அமெரிக்க அதிபராவதற்கு
விருப்பம். ஆனால் சட்டம் வலுவானது. அது என் விருப்பத்தைக் தடுக்கிறது"
என்று அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறாரே? பதில்: டிரம்ப்
மூன்றாம் முறை அதிபராவதைத் தடுக்கும் சட்டத்தினால் ஒரு பாதகமும் இல்லை. இரண்டு முறைக்கு மேல் டிரம்ப் அமெரிக்க
அதிபராகப் பதவிப் வகிக்காத நிலையில், தன்னையறியாமல்
அவர் உலகிற்கு ஆற்றப்போகும் சேவை முன்னைவிட அதிகமாக இருக்கும். |
|
பகுதி 123 // 14.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment