Monday, 31 August 2026

கேள்வி-பதில் (31.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "விஜய் பிரதமராக வருவதற்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆசைப்படுகின்றனர்" என்று தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஒரு பேட்டியில் கூறுகிறாரே?

 

பதில்: ராகுல் காந்தியின் காங்கிரஸ், திருமாவளவனின் விசிக, முஸ்லிம் லீக் கட்சி, அவற்றுடன் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆகியவை தமிழகத்தில் விஜய் அரசைத் தாங்குகிற மாதிரி, மத்தியிலும் அக்கட்சிகள் முட்டுக் கொடுத்து விஜய் பிரதமராக இந்தியாவே ஆசைப்படுகிறதா? 

 

விஜய் பிரதமரான பிறகு எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சிலர் விஜய் மீது பொங்கும் திடீர்ப் பாசத்தால் தங்கள் எம்.பி பதவியை ராஜினாமா செய்து விஜய் கட்சியில் சேர்ந்து, அவர் கட்சி எம்.பி-க்கள் ஆகித்தான் மக்களுக்குச் சேவை புரியத் துடிக்கவேண்டும் என்று இந்தியா ஆசைப்படுகிறதா?

 

ஒரு பிரதமராக, லோக் சபாவில் விஜய் குட்டிக்கதைகள் சொல்ல, அவரது கட்சி எம்.பி-க்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் பாட, மத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு முக்கிய எதிர்க்கட்சியை நோக்கி எப்போதும் நாவிலேயே வாள் சுழற்றி வேல் எறிந்து அம்பு எய்ய, அச்சமயங்களில் சபாநாயகர் மௌனம் காக்க, லோக் சபா ஒரு நவரச நாடக மேடையாக ஜொலிக்கட்டும் என்று இந்தியா ஆசைப்படுகிறதா?

 

விஜய் மகிழ்வார் என்று தெரிந்துதான் நிர்மல் குமார் அப்படிப் பேசி இருக்கிறார். அவர் பேசும் முன், விஜய் தமிழக முதலமைச்சர் ஆனதைப் போல் இந்தியப் பிரதமராவதும் அவருக்கு எளிது என்று விஜய்யே லேசாக நப்பாசைப் படுவதை நிர்மல் குமார் ஊகித்திருப்பார்.

 

விஜய்யும் நிர்மல் குமாரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று நமக்குத் தெரியாது. சில ரிஸ்க்கான காட்சிகளில் விஜய் டூப் வைத்து நடிப்பார் என்பது நமக்குத் தெரியும்.

 

 

2. கேள்வி: "கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் சில இடங்களில் கட்டாயப்படுத்திதான் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். சிலர் இதற்கு ஆதாரம் கேட்கிறார்கள். நானே ஒரு சாட்சிதான். நான் சொல்லக்கூடாது என்றுதான் நினைத்தேன். வேறு வழியில்லாமல் சொல்கிறேன்" என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு கல்வி நிறுவன நிர்வாகத்தில் நெருங்கிய தொடர்புடையவர் மரிய வில்சன். அந்த வகையில், சென்ற ஆட்சியின்போது தான் சாட்சியாக இருந்து கவனித்த சில பண விநியோக அனுபவங்களை வெளிப்படுத்துவது போல் அவர் பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால் மரிய வில்சன் மனம் திறந்து மேலும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். 

 

அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய சேவைகள் (உதாரணம்: ரேஷன் அட்டை அல்லது வாரிசுச் சான்றிதழ்) தனக்கு வந்து சேர, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டிய சாதாரணக் குடிமகனின் அவதி ஒன்று.

 

அரசிடமிருந்து ஒரு அனுமதியோ உத்தரவோ கிடைப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அந்தப் பணத்தையும் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து, அல்லது தன்னிடம் சேவை பெறும் பயனர்களிடமிருந்து, ஒன்றுக்கு இரண்டாக வசூலிக்கும் சில நிறுவனங்களின் வணிகத் தந்திரம் (உதாரணம், சில கல்வி நிறுவனங்களின் நடைமுறை) இன்னொன்று.

 

இதில் எந்தவகை அனுபவத்திற்கு மரிய வில்சன் சாட்சியாக இருந்தார் என்பதை அவர் தைரியமாகச் சொல்வாரா?

 

 

3. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள், அப்போதைய கூட்டணிக் கட்சியான விசிக-வின் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி சொல்லவில்லை என்று தற்போதைய விசிக அமைச்சர் வன்னி அரசு சொல்ல, அதற்குப் பதிலளித்த திமுக தலைவர் உதயநிதி, "திருமாவளவனை என் அரசியல் ஆசானாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றும் பேசி இருக்கிறாரே?

 

பதில்: உதயநிதியின் பேச்சைக் கேட்டு, திருமாவளவன் உட்பட யாராவது சிரிக்காமல் இருந்தால் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் இனாம்!

 

 

4. கேள்வி: "எதிர்காலத்தில் சில மாநிலங்களில் கரப்பான் பூச்சி கட்சி ஆட்சியைப் பிடிக்கும்" என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் 'யூ டியூப்' சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் சில மாநிலங்களில் அந்த நினைப்பு நிறைவேறாது. அங்கெல்லாம் கரப்பான் பூச்சி கட்சியிடம் காங்கிரஸ் கட்சி தோற்கும். அதாவது, எப்போதும் பாஜக-விடம்தான் காங்கிரஸ் கட்சி தோற்கும் என்பதில்லை, ஒரு புதிய கட்சியிடமும் தோற்கும்' என்று காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலை பற்றிச் சிதம்பரம் அவர் பாணியில் தெரிவிக்கிறார்.

 

பாஜக-வை இடது கையால் இடிப்பதாக நினைத்து, காங்கிரஸை வலது காலால் ஒரு எத்து எத்துகிறார் சிதம்பரம். காங்கிரஸ் கட்சிக்கு உறைத்தால் சரி.

 


5. கேள்வி: "இன்று ஊழலே முதல்வர் அறையில் இருந்துதான் தொடங்குகிறது" என்று விஜய் தலைமையிலான அரசை, திமுக-வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டுகிறாரே?

 

பதில்: விஜய் ஆட்சியின் கதை ஒருபுறம் இருக்கட்டும். சென்ற திமுக ஆட்சியின் கீழ் உயர் மட்டத்தில் மாபெரும் ஊழல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் வருகின்ற நிலையில், ஆர்.எஸ். பாரதி ஏதோ அர்த்தம் தொனிக்கும் வகையில் எதையோ உளறி வைக்காமல் இருப்பது நல்லது.


பகுதி 129 // 31.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment