|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "தமிழகத்துக்கு ராகுல் காந்தி வரும்போது, மேகதாதுவில்
கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்று சொல்வதற்கு அவருக்குத் தைரியம் இருக்கிறதா?" என்று பாமக
தலைவர் அன்புமணி கேட்கிறாரே? பதில்: மேகதாதுவில்
கர்நாடக அரசு அணை கட்டவேண்டும் அல்லது கட்டக் கூடாது என்று ராகுல் காந்தி
பேசுவதற்குத் தேவை தைரியம் அல்ல - வாய் திறக்கக் கூடாத விஷயத்தில் வாய்
திறக்கும் அசட்டுத்தனம். அன்புமணி தூண்டிவிடும் அசட்டுத்தனத்தை ராகுல் காந்தி
அநேகமாக வெளிப்படுத்த மாட்டார். தேசநலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி அசடாக இருந்தாலும், தனது சுயநலம் சம்பந்தமான விஷயத்தில் அநேகமாக உஷாராக
இருப்பார். |
|
2. கேள்வி: "பிரதமர் மோடி மற்றும்.அமித் ஷா - நீங்கள் ஜென்
சீ தலைமுறையினரை அச்சுறுத்தி அமைதியாக வைக்க முடியாது" என்று ராகுல் காந்தி
கருத்து தெரிவித்திருக்கிறாரே? பதில்: ஜென் சீ இளைஞர்களை - அதுவும் படித்த, ஓரளவு வசதி படைத்த, இளைஞர்களை - ராகுல் காந்தி உட்பட யாரும்
அச்சுறுத்தி அமைதியாக வைக்க முடியாது. அதை யாரும் முயலவும் மாட்டார்கள். ராகுல் காந்தியிடம் நிதானமாக, அறிவுபூர்வமாக, தேசநலனில் அக்கறை கொண்டு யார் பேசினாலும்
அவரை அமைதியாக வைக்க முடியாது. தேசநலன் என்ற களத்தில் கண்மண் தெரியாமல்
தாறுமாறாக ஓடும் கன்றுக்குட்டி, ராகுல் காந்தி. ஒரு விலங்கான கன்றுக்குட்டிக்கு, இலக்கில்லாமல் துள்ளித் திரிவது மகிழ்ச்சி.
ஆனால் விலங்கு வளர்ந்து முதிர்ச்சி பெற்று நிதானம் கொள்கிறது. |
|
3. கேள்வி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் வினாத்தாள்
கசிவு தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி 36 நாட்கள்
போராட்டம் நடத்தி அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மக்கள்
விரும்பும் ஒரு அரசியல் கட்சியாக மாற முடியுமா? பதில்: டெல்லியில்
கரப்பான் பூச்சி கட்சி நிகழ்த்தியது ஒரு சர்க்கஸ். அதில் நன்றாக வித்தை
காட்டினார்கள். கோஷம் போடும் வித்தை, கண்டதையும்
பேசும் வித்தை, பதாகை காண்பிக்கும் வித்தை, ஆபாசச் செய்கை வித்தை, தடுப்புகள்
தாண்டும் வித்தை, கல்லெறி வித்தை, வாகனங்களைப் புரட்டும் வித்தை என்று பலவாறான வித்தைகள்
தெரிந்தவர்கள் அங்கு கூடித் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
மீடியாக்காரர்கள் எல்லா வித்தைகளையும் படம் பிடித்துக் காட்டினார்கள். வித்தை காட்டிக் கூட்டம் சேர்க்கிறவர்கள், மக்கள்
பிரச்சனை தொடர்பாக மக்களின் மனதை ஈர்த்திருந்தால் தவிர - மக்களைத் திசை
திருப்பியாவது அவர்கள் மனதை ஈர்த்திருந்தால் தவிர - அரசியல்வாதிகளாக
எடுபடமாட்டார்கள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் அரசியல் தலைவர்களாக
எடுபடுவதற்கான அறிகுறி இதுவரை இல்லை. ஆனால் பின்னர் தந்திரங்கள் கற்று அவர்களும்
அரசியல்வாதிகள் ஆகலாம். இது இந்தியா. |
|
4. கேள்வி: ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது பிரதமரை இழிவாகப்
பேசி, மற்ற வகையிலும் தரம் தாழ்ந்து பேசிய இளைஞர்கள் பலர்
மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிடுகிறார்கள். அவர்களை மன்னிக்கலாமா? பதில்: அவர்கள் வளர்ந்த இளைஞர்கள். இருந்தாலும்
சில பொறுப்புகளை உணர வேண்டியவர்கள். அவர்களுக்கு ஜென் சீ என்ற மகுடத்தை அணிவித்த
பின் - அதுவும் அவர்கள் ஒரு பெருங்கூட்டமாக இணையும் போது - மனதிற்குள்
அவர்களுக்குத் தானாக ஒரு ஆட்டம் வருகிறது. கரப்பான்பூச்சித் தலைவர்கள், மற்ற தலைவர்கள், சில பிரபலங்கள் ஆகியோர் ஜந்தர் மந்தரில்
அந்த ஆட்டத்தைக் கொட்டடித்து ஆக்ரோஷப் படுத்தினர். ஜந்தர் மந்தரில் வன்முறையில் ஈடுபடாமல், கேமரா முன் கன்னாபின்னா பேச்சுப் பேசிய
இளைஞர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிப்பது நல்லது. பிரதமர் மோடியே அவ்வாறு
கருத்துத் தெரிவித்திருக்கிறார். |
|
5. கேள்வி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய
இருவரையும் நோக்கி, "நீங்கள்
இந்தியாவின் கடந்த காலம்" என்று ராகுல் காந்தி சொல்கிறார். ராகுல் காந்தி
இந்தியாவின் எந்த காலம்? பதில்: கெட்ட
காலம். |
|
பகுதி 117 // 01.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment