|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத்
திப்கே, பிரதமர்
மோடியின் ஒரு வீடியோ அறிவிப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கிறார். அதில், "நம் தேசத்தின்
எதிர்காலத்தை விட உங்கள் தோல் நிறம் பளபளப்பாக இருக்கிறது" என்று அபிஜீத்
கூறுகிறாரே? பதில்: அபிஜீத்தின்
சிந்தனை தேசத்தின் எதிர்காலம் பற்றி இல்லை. அதை மனதில் வைத்து அவர் பேசவில்லை. இந்தியாவின் எதிர்காலம் வளமாக மேலோங்கி இருக்கும். அபிஜீத்தின் சிந்தனை
போல் கீழ்நிலைக்குப் போகாது. |
|
2. கேள்வி: "தாய் மொழியைக் கற்ற பிறகு, மற்ற மொழிகளைக்
கற்க வேண்டும். இந்தியையும் கற்க வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளுங்கள்.
காலத்தின் தேவை கருதி இந்தி மொழியையும் கற்கலாம்" என்று பள்ளி
மாணவர்களுக்கு அறிவுரையாக மதுரையில் கவிஞர் வைரமுத்து பேசி இருக்கிறாரே? பதில்: "தமிழைக் கற்காமல் ஹிந்தியைக் கற்றுக்
கொள்ளுங்கள்" என்று யாரும் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னதில்லை.
தமிழக மாணவர்களின் எதிர்கால நலனுக்காக அவர்கள் ஹிந்தியையும் கற்பது நல்லது என்று
நடுநிலையாளர்கள் எப்போதும் சொல்லிவருவதை இப்போது வைரமுத்து எதிரொலிக்கிறார். எது சரி என்பதைக் காலம் ஒருவருக்குச்
சொல்லிக் கொடுக்க முனையும். முதலில் மெதுவாகச் சொல்லும், பின்னர் இடித்துச் சொல்லும். காலம்
வைரமுத்துவுக்கும் சொல்லிக் கொடுக்கிறது. |
|
3. கேள்வி: "ஜாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெற விரும்புவோர்க்கு
அரசு உடனே சான்றிதழ் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்" என்று
நடிகர் பார்த்திபன் கோரிக்கை வைத்திருக்கிறாரே? பதில்: விரும்புவோர்க்கு
அந்தச் சான்றிதழ் கிடைக்கப் பார்த்திபனின் முயற்சி வெற்றி பெற்றால், அப்படி முன்னூறு பேர் சான்றிதழ் பெற்றால், பார்த்திபனை நிறுவனராகக் கொண்டு 'ஜாதி வேண்டார்' என்ற
புதிய ஜாதி உருவாகலாம். |
|
4. கேள்வி: தமிழகத்திற்கு வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தி, "தமிழர்கள்
யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. அதை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்”
என்று பேசி இருக்கிறாரே? பதில்: முன்பு திமுக-வுடன் பல வருடங்கள்
நெருக்கமாக இருந்ததால், திராவிட மொழியில் பேச ஆரம்பித்துவிட்டார் ராகுல் காந்தி. அது மட்டுமல்ல.
"அகில இந்தியக் கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் பேசத் தெரியவில்லை"
என்று அண்ணாமலை சொன்ன குற்றச்சாட்டைச் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் ராகுல்
காந்தி. இனி ராகுல் காந்தி "கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே ... " என்று
ஆரம்பித்து, "முப்பாட்டன் முருகன்" என்றும் பேசி, தமிழ் மக்களைக் கவர முனையலாம். |
|
5. கேள்வி: மு. க. அழகிரியின் மகளும் கலைஞர் கருணாநிதியின்
பேத்தியுமானவர், சென்னையிலுள்ள
ஒரு எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளர் அறைக்குச் சென்று அவருடன்
பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எழுந்து கைநீட்டி அந்த மேலாளரின்
கன்னத்தில் பளாரென்று அறைந்திருக்கிறார். எப்படி இவ்வாறு நடந்துகொள்கிறார்
அந்தப் பெண்? பதில்: பள்ளிக்
காலத்தில் ஒரு பாப்பா பாட்டின் முதல் வரியை மட்டும் படித்து, அதன் அர்த்தத்தையும் அவர் தவறாகப் புரிந்து
வைத்திருப்பார். 'கைவீசம்மா கைவீசு.' |
|
பகுதி 118 // 02.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment