Monday, 10 August 2026

கேள்வி-பதில் (10.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகத்தில் விஜய் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் நபர்கள் இருப்பதை வரவேற்றுப் பாராட்டிவிட்டு, "காங்கிரஸ் கட்சி ஒரு அமைச்சரவையில் இடம் பெறுகிறது என்றால் அதற்கு மறுபெயர் நேர்மை, எளிமை, தூய்மை" என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: நேர்மை, எளிமை, தூய்மை எனும் பண்புகளைக் காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியப்படுத்தி வாசன் சொல்லும்போது, அவரிடமிருந்து ஒரு பண்பு தலைதெறிக்க ஓடுகிறது: நேர்மை.

 

 

2. கேள்வி: லாட்டரி நிறுவனத்திடமிருந்து திமுக 900 கோடி ரூபாய் நன்கொடை பெற்றது ஏன் என்று தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டிருக்கிறார். இது நியாயமான கேள்வியா?

 

பதில்: இது நியாயமான கேள்வி என்றால், டாடா, பிர்லா, அம்பானி, அதானி நிறுவனங்கள் திமுக-வுக்கு அளிக்காத இவ்வளவு பெரிய நன்கொடையை ஒரு லாட்டரி நிறுவனம் ஏன் கொடுத்தது என்றும் ஒரு நியாயமான கேள்வி எழும். இரு பக்கத்தவரின் ரகசிய ஆதாயங்கள் உள்ள விவகாரம் இது - அவை வெளிவராது.

 

 

3. கேள்வி: "மத்திய பாஜக அரசு கொண்டுவரும் லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகத் திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. திமுக அப்படிச் செய்தால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே அக்கட்சி செய்யும் துரோகம்" என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஏற்ப லோக் சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும், அந்த சமயத்தில் பாராளுமன்றம் அது தொடர்பான சட்டத்தை இயற்றவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் விதிக்கிறது. இதன்படி மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் மசோதாவில் தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற ரீதியில் என்ன ஷரத்துகள் உள்ளன, அவற்றுக்கு மாற்றாக வேறு என்ன அம்சங்கள் அந்த மசோதாவில் இடம் பெறவேண்டும், என்பது பற்றி நிர்மல்குமார் மூச்சு விடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள ஒரு விதி நாட்டிற்கே துரோகம் இழைக்கிறது என்கிறாரா அவர்?

 

 

4. கேள்வி: ஜார்கண்ட் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு முறைகேடுகளை எதிர்த்து, ராஞ்சியில் மாணவர்களும் வேலை வேண்டுவோரும் இரண்டு வாரமாக ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் நேரில் பங்கேற்று, தடையை மீறி பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்று, தரையில் புரண்டு ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் போராட்டத்திற்கு போன் மூலமாக மட்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் போராட்டம் குறித்து ராகுல் காந்திக்குக் கவலை இல்லையா? இந்தப் போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியியின் பங்கு என்ன?

 

பதில்: ஜார்கண்ட் போராட்டம் குறித்து, யாரை விடவும் ராகுல் காந்தி அதிகம் கவலை கொண்டிருப்பார் - அதாவது, அந்த மாநிலத்தில் பாஜக ஆளும்போது இப்படியான போராட்டம் எழுவதற்குக் காரணம் இல்லாமலோ, அல்லது போராட்டம் வராமலோ போய், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டணி ஆட்சி நடக்கும்போது இந்தப் போராட்டம் வந்து தொலைக்கிறதே என்று. அதே சோகத்தில் கரப்பான்பூச்சித் தலைவர்கள் தாமாகக் கவுந்து கிடக்கிறார்கள்.

 


5. கேள்வி: பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார் முன்பு நடித்த பிரபல திரைப்படம், நாட்டாமை. சமீபத்தில் தன் பிறந்த நாள் விழாவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், "உங்கள் கைகளில் 'நாட்டாமை குடும்பம்' என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். என்னை நேரடியாக நீங்கள் சந்திப்பதற்கு அது கிரீன் கார்டு போல இருக்கும்" என்று அறிவுரை வழங்கி இருக்கிறாரே?

 

பதில்:  தொடர்ந்து அந்த விழாவில் பேசிய அவர், "இளைஞர்கள் உட்பட யாரும் தீய பழக்கங்களில் ஈடுபடக் கூடாது" என்றும் சொல்லி இருக்கிறார். இந்த நல்ல அறிவுரையை மட்டும் சரத்குமாரின் ஆதரவாளர்கள் பின்பற்றி, தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


பகுதி 121 // 10.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment