|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "திமுக-வினர் இப்போது பெயில் வாங்குவது போல், தவெக-வினரையும்
பெயில் வாங்கவைக்க வேண்டும்" என, திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் திமுக தலைவர்
உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறாரே? பதில்: திமுக-வினர்
மாதிரி தவெக-வினர் பெயில் மட்டும்தான் வாங்கவேண்டுமா? அல்லது, அவர்கள்
மாதிரி இவர்களும் சாராய ஆலைகள் நடத்திக் கொழிக்கலாமா, கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்
நடத்திக் கல்லா கட்டலாமா, சினிமாத் தொழிலில் கொடிகட்டிப்
பறக்கலாமா, தமது குடும்பத்தைச் சார்ந்தவர்களை
எம்.எல்.ஏ., மந்திரி, எம்.பி.
என்று ஆக்கலாமா, ஆடிட்டருடன் துபாய்க்கு மர்மச் சுற்றுலா
போய் வரலாமா? |
|
2. கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளுந்தூர்பேட்டை
மாநாட்டில் பேசிய அதன் தலைவர் திருமாவளவன், "இத்தனைக் காலம்
ஆளும் கட்சியோடு நாம் கூட்டணி வைத்தோம். வரும் காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள்
தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளரவேண்டும். ஆளும் கட்சியாகப் பரிணமிப்போம்"
என்று அழுத்திச் சொன்னார். பிறகு என்ன நினைத்தாரோ, "தற்போது விஜய்
அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இருக்கிறோம். விடுதலைச்
சிறுத்தைகளும் தமிழக வெற்றிக் கழகமும் இனி தமிழ்த் தேசியக் களத்தில் இணைந்தே
பயணிக்கும்" என்று விஜய்யை சாந்தப்படுத்துவது மாதிரியும் பேசி இருக்கிறாரே? பதில்: ஒரு ஜாதியின் பிரதிநிதியாக அல்லது
பாதுகாவலனாகத் தோன்றும் ஒரு அரசியல் கட்சி, பிரதான ஆளும் கட்சியாக வருவது கடினம்.
காரணம், பெருவாரியான பிற ஜாதி மக்கள் அக்கட்சியிடமிருந்து மனதளவில்
அன்னியப்படுவார்கள், அவர்களின் ஓட்டு அக்கட்சிக்குக் கிடைக்காது, அதைப் பணத்தாலும் வாங்க முடியாது. ஒரு ஜாதி சார்புக் கட்சி, அந்த ஜாதி மக்களின் எண்ணிக்கை, அவர்களிடம் அக்கட்சிக்கு உள்ள பிடிப்பு, ஆகியவற்றைப் பொறுத்து பலமாக அல்லது
மிதமாகக் கூட்டணி பேரம் நடத்தலாம், அவ்வளவுதான். 'ஆளும் கட்சியாக வளர்வோம்' என்று திருமாவளவன் பேசினாலும், அது 'ஜும்மா ஜும்மா'. "தவெக-வுடன் இணைந்து பயணிப்போம்" என்று அவர் கடைசியாகச் சொன்னது, தற்போதைய அரசியல் சூழலில் தவெக-வுக்கான ஒரு
எளிய மெசேஜ்: "நான் ஏதோ பேசினேன். எங்களைக் கழட்டி விட்றாதீங்க". |
|
3. கேள்வி: விஜய் அரசு நூறு நாட்களைக் கடந்த நிலையில்
சட்டசபையில் பேசிய சபாநாயகர் பிரபாகர், "வளமான தமிழகம், வலிமையான தமிழகம், ஊழலற்ற தமிழகம்
என்பதற்கு, நூறு நாட்களில்
வலுவான அடித்தளத்தை முதல்வர் அமைத்துள்ளார். முதல்வர் திரையுலகிலும் மக்கள்
மன்றத்திலும் தொட்டதெல்லாம் துலங்கச் செய்தார். நூறு நாள் சாதனையைக் கடந்து, நூற்றாண்டுகள்
போற்றும் பல சாதனைகளை முதல்வர் விஜய் படைக்கப் போகிறார்" என்றெல்லாம்
பேசியிருக்கிறாரே? பதில்: லோக்
சபாவில், பிரதமரைச் சபாநாயகர் மெய்மறந்து
போற்றுவதில்லை. மாநில சட்டசபைகள் குறித்துப் பொதுவாக ஒன்று சொல்லலாம். அவையை
நடத்தும்போது, முதலமைச்சருக்காக ஜால்ரா தட்டாத
சபாநாயகர், மதச்சார்பை வெளிப்படுத்தாத சபாநாயகர், ஒருதலைப்பட்சமற்ற சபாநாயகர் என்பதற்கு வலுவான
அடித்தளத்தை அமைக்கும் நபர் யாரோ? |
|
4. கேள்வி: "நான் எம்.எல்.ஏ ஆனபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா
பிறந்திருக்க மாட்டார், அல்லது பாலகனாக இருந்திருப்பார்" என்று அந்த
வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை உயர்த்தி, அமித் ஷாவைத்
தாழ்த்திப் பேசி இருக்கிறாரே? பதில்: மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த அடிப்படைத்
தகவல் உண்மை என்றாலும், தனது கட்சிக்கும் ஒரு மத்திய அமைச்சராகவும் அமித் ஷா ஆற்றிய பணிகள், செய்த சாதனைகள் என்ன, கார்கே இதுவரை சாதித்தது என்ன? மன்மோகன் சிங் நன்கு படித்தவர், பொருளாதாரம் அறிந்தவர். அவரைப்
பத்தாண்டுகள் ஒரு பொம்மைப் பிரதமராக அமர்த்தி சோனியா காந்தியும் அவர்
குடும்பத்தினரும் தங்களுக்கு ஆகவேண்டியதைப் பார்த்துக் கொண்டார்கள். மல்லிகார்ஜுன கார்கே என்ற மனிதருக்கு ஒரு
சட்ட அங்கீகாரமும் சட்டப் பாதுகாப்பும் இருக்கிறது. அதன் நோக்கத்தை அவரே
புரிந்துகொள்ளாமல், காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு ஒரு வெற்று
முகமூடியாக இருப்பதில் பெருமை கொள்கிறார். ஒரு மனிதனின் மதிப்பு, தரம் என்பது கல்வியால் மட்டும் வராது, சட்டம் அளிக்கும் விசேஷ உரிமையால் மட்டும்
வராது, என்பதற்கு மன்மோகன் சிங்கும் மல்லிகார்ஜுன
கார்கேயும் உதாரணம். நேரு குடும்பப் பின்னணி இருந்தால் மட்டும் வராது என்பதற்கு
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியா
காந்தி உதாரணம். |
|
5. கேள்வி: பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள்
தங்களுக்குள் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்த மூன்று
நாடுகளில் ஏதேனும் ஒன்று ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால், அது மற்ற இரண்டு
நாடுகளையும் தாக்கியதற்கு ஒப்பானதாகும். இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க
அதிபர் டிரம்ப், "அந்த நாடுகள்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இது முக்கியமான, பெரிய, தைரியம் மிக்க
முதல் நடவடிக்கை" என்று சொல்லி வரவேற்றிருக்கிறாரே? பதில்: துருக்கி
ஏற்கனவே பலம் வாய்ந்த நேடோ ஒப்பந்தத்தால் பாதுகாக்கப் படுகிறது. சவுதி அரேபியா
மற்றும் பாகிஸ்தானின் ராணுவ உதவி துருக்கிக்குத் தேவை இல்லை. சவுதி அரேபியா
தாக்குதலுக்கு உள்ளானால், ஒப்பந்தம் இல்லாமலே அமெரிக்கா சவுதியின்
உதவிக்கு வரும் - துருக்கியும் திருவோடு பாகிஸ்தானும் சவுதி அரேபியாவுக்காக
வெட்டியாகத் தோள்தட்டத் தேவையில்லை. பாகிஸ்தான் இந்தியாவால் தாக்கப்பட்டால் - அத்தகைய இந்தியத் தாக்குதல், நம் நாட்டுக்கு எதிராகப் பாகிஸ்தான் வளர்த்து அனுப்பிய
கூலி பயங்கரவாதிகள் நமது நாட்டில் ஏற்படுத்தும் பயங்கரவாதச் செயல்களைக்
கட்டுப்படுத்த இந்தியா எடுக்கும் ராணுவ நடவடிக்கையாக இருக்கும் - பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் சவுதி
அரேபியா, துருக்கி எனும் இஸ்லாமிய நாடுகள் அந்த
நேரத்தில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி வழங்க ஏதுவாக அந்த மூன்று நாடுகளும்
தங்களுக்குள் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றன. இந்தியா
இதையும் சமாளிக்கும் - பாஜக ஆட்சியில் இருக்கும் வரை கவலை இல்லை. டிரம்பைப் பொறுத்தவரை, அவர்
இந்தியாவுக்குச் சொல்வது இது: "இன்னிக்கு ஒட்டிப்பேன். நாளைக்கு
வெட்டிப்பேன். மூணாம் நாள் ஒட்டிப்பேன். நாலாம் நாள் எப்பிடி இருப்பேன்னு உனக்கே
தெரியும்." அமெரிக்காவையும் இந்தியா சமாளிக்கும் - பாஜக ஆட்சியில்
இருக்கும் வரை கவலை இல்லை. |
|
பகுதி 125 // 19.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment