|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்று நான்
பேசியதற்காகத் தான் என்னைக் கைது செய்தார்கள்" என்று உதயநிதி ஸ்டாலின்
மேடையில் நின்று விளக்கம் சொல்லி இருக்கிறாரே?" பதில்: பரவாயில்லை.
உதயநிதி தஞ்சாவூரில் பேசியதை அப்படியே பொதுவெளியில் சொல்ல அவருக்கும் வெட்கமாக
இருக்கிறது என்று தெரிகிறது. 'நீங்கள் ஆபாசமாகப் பேசினால், அதற்காகக் கைதானால், பின்னர்
நீங்களும் என்னைப் போல் பொதுவெளியில் ஜகா வாங்கவேண்டும், பூசி மெழுகவேண்டும், கேவலப்பட
வேண்டும்' என்ற படிப்பினையை அனைத்து ஆபாசப்
பேச்சாளர்களுக்கும் உதயநிதி நாசுக்காகச் சொல்லி இருக்கிறார். |
|
2. கேள்வி: "தவெக-வில் இருக்கும் யாரும் ஊழல் செய்ய
மாட்டார்கள்" என்று அமைச்சர் ஆனந்த் பேசி இருக்கிறாரே? பதில்: முன்பு ஆட்சியில் இருந்த திமுக மற்றும்
அதிமுக-விலிருந்து பலர் தவெக-வில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர்
அங்கிருக்கும்போது அமைச்சர்களாக மற்றும் கட்சி நிர்வாகிகளாகப் பதவி
வகித்தவர்கள். அந்த இரண்டு கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துப் பயனடைந்த மற்ற
சில கட்சிகள், இப்போது தவெக-வுடன் கைகோர்த்திருக்கின்றன. தவெக-வுக்குக் கட்சி மாறியிருக்கும் பலர், அணி மாறித் தவெக பக்கம் சேர்ந்திருக்கும்
சில கட்சிகள், அரசு வேலைகளிலோ மற்ற வேலைகளிலோ தாங்கள் பயனடையத் தவெக-வை ஒரு புதிய
வாய்ப்பாகப் பார்ப்பார்கள். ஆகையால் தவெக அரசும் அக்கட்சியின் நிர்வாகிகளும்
விமர்சகர்களின் கண்காணிப்பில் இருந்தாக வேண்டும். அடுத்தது: ஊழல் செய்வது என்பது ஒருவகை
முறைகேடு. ஹிந்து மதம் மற்றும் ஹிந்து கலாசாரம் பிரதானமாகப் பின்பற்றப்படும்
இந்தியாவில், அதிகாரத்தில் அமர்ந்து ஹிந்து மதத்தையும் ஹிந்து கலாசாரத்தையும் நைஸாகப்
புறந்தள்ளி, வேறு மத நம்பிக்கைகளை உயர்த்திப் பிரதானப்படுத்துவதும் ஒருவகை முறைகேடு -
தவெக அரசும், தவெக ஆதரிக்கும் முக்கியஸ்தர்களும், இதைச் செய்ய ஆரம்பித்திருப்பது தெரிகிறது. |
|
3. கேள்வி: அண்மையில் சுதந்திர தின விழாவின் போது ஶ்ரீநகரில்
பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, "கடந்த 2019-ல்
ஜம்மு-காஷ்மீரின் மாநில மற்றும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படாமல் இருந்திருந்தால், பாக்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் மீண்டும் இணையக் குரல்
கொடுத்திருப்பார்கள்" என்று கூறி இருக்கிறாரே? பதில்: சில
ஆடுகளைத் திருடி வைத்திருந்தவனிடம் இருந்து அவை போலீசாரால் மீட்கப்பட்ட பின்
அவன் சொன்னான்: "நான் சில காலமாக வைத்திருந்த ஆடுகள் என் வசமிருந்து
பறிக்கப்படாமல் இருந்தால், முன்னர் அவற்றுடன் ஒன்றாக வளர்ந்து
தற்போது இன்னொருவனின் அபகரிப்பில் இருக்கும் வேறு சில ஆடுகள், நான் வைத்திருந்த ஆடுகளுடன் வந்து இணைவதற்காக 'ம்ம்ம்மே' என்று
குரல் கொடுத்திருக்கும்" |
|
4. கேள்வி: டெல்லியில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின
விழாக் கொண்டாட்டத்தில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடப்பட்டபோது, அக்கட்சியின்
பார்லிமென்ட் குழுத்தலைவர் சோனியா காந்தி சைகை செய்தது, அப்பாடல் பாடப்படாமல் அதை
நிறுத்துவதற்கா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் பொதுச்
செயலர் ஜெய்ராம் ரமேஷ், "வந்தே மாதரம் பாடலுக்கு சோனியா காந்தி எதிர்ப்புத்
தெரிவிக்கவில்லை. கட்சித் தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அவருக்கு ஒரு
நாற்காலி வழங்கும்படி சைகை மூலம் சோனியா கேட்டார்" என்றார். அவரது விளக்கம்
ஏற்கத் தக்கதா? பதில்: ஜெய்ராம் ரமேஷின் விளக்கம் இருக்கட்டும்.
காங்கிரஸ் இதில் எப்படிச் சிந்திக்கிறது என்று தெரிய ஒரு வருடம் ஆகும். அடுத்த வருடம் காங்கிரஸ் தலைமை
அலுவலகத்தில் நடக்கப்போகும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் வந்தே மாதரம்
பாடல் இடம் பெறாவிட்டால், இந்த வருடம் சோனியா காந்தி காண்பித்த சைகையைக் காங்கிரஸ் சரியாகப்
புரிந்துகொண்டு அதை அடுத்த வருடம் செயல்படுத்துகிறது என்று அர்த்தம். ஒருவேளை
அடுத்த வருடம் காங்கிரஸ் மேடையில் அந்தப் பாடல் பாடப்பட்டால், 'வந்தே மாதரம் விஷயத்தில் பாஜக காண்பித்த
வழியைக் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்றானாலும் பரவாயில்லை, காங்கிரஸ் கட்சிக்குச் சொற்ப ஆதரவே
அளிக்கும் மேற்கு வங்க மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களின் வாக்குகளை
அக்கட்சி மேலும் இழக்கக் கூடாது என்ற முன்யோசனை ஜெய்ராம் ரமேஷ்க்கு டக்கென்று
இந்த வருடமே வந்தது என்று அர்த்தம். |
|
5. கேள்வி: சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும்போது, "காட்டுப்
பகுதிகளில் இருந்து ஆயுதம் தாங்கிய நக்சல்களை நாம் அப்புறப்படுத்தி விட்டோம், நமது தேசத்தை
அவர்களிடமிருந்து மீட்டு விட்டோம். ஆனாலும் அதிகாரப் பாதைகளில் 'நக்சல்
எண்ணத்தவர்கள்' இருந்தார்கள்.
அவர்கள் அரசுக் கமிட்டிகளில் ஆலோசகர்களாகவும் இருந்தார்கள். அவர்களை
அடையாளப்படுத்த வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும். நக்சல் எண்ணத்தவர்கள்
வன்முறைக்கான வழிகளை நோட்டமிட்டு, நம் தேசத்தைக் கீழ்நோக்கித் தவறான பாதையில் இழுத்துச்
செல்ல விரும்புகிறார்கள்" என்று சொன்னார். பிரதமர் யார் பெயரையும்
குறிப்பிடவில்லை. இருந்தாலும் உடனே ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், "நக்சல்
எண்ணத்தவராக இருப்பது எனக்குப் பெருமை!" என்று கருத்துச் சொல்லி
இருக்கிறாரே? பதில்: சிதம்பரம்
ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க வேண்டும். "நான் குதிருக்குள் இல்லை"
என்றா ஒருவர் குரல் எழுப்புவார்? |
|
பகுதி 124 // 16.08.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment