Saturday, 5 September 2026

கேள்வி-பதில் (04.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முதல்வர் விஜய் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "அவர் அமெரிக்க ஜனாதிபதியாகக் கூட ஆகலாம்" என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: பழனிசாமி ஜாக்கிரதையாகப் பேசுவது நல்லது. பிற்காலத்தில் அவர் அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்நாடு குறித்து அவர் கேவலமாக நினைத்தார் என்பதற்காக அவருக்கு அமெரிக்க விசா மறுக்கப் படலாம். அமெரிக்காவைக் கேவலப்படுத்தும் உரிமை டிரம்புக்கு மட்டும் உண்டு.

 

 

2. கேள்வி: "கொள்கையற்ற, கட்டமைப்பு இல்லாத கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். கட்சியை மறுசீரமைப்போம்; மீண்டும் வெல்வோம்" என்று திமுக-வினரிடம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறாரே?

 

பதில்: மின்மினிப் பூச்சிகளோடு போட்டியிட்டு அவற்றால் ஒதுக்கப்பட்ட சூரியனா திமுக? பிறகு, தன்னை வென்ற மின்மினிப் பூச்சிகளில் சிலவற்றையாவது தன்பக்கம் இழுத்துத் தான் சோபிக்க நினைத்த சூரியனா திமுக?

 

தமிழக அரசியலில், அதுவும் தேர்தல் அரசியலில், பிரகாசிக்க ஒரு கட்சிக்குப் பணம் என்ற ஒளி முக்கியம். அவ்வாறு ஒளிமிகுந்த கட்சியாகத் திமுக இருக்கிறது, அக்கட்சி எப்போது எங்கிருந்து எவ்வளவு ஒளி பெற்றுத் தனக்குள் வைத்திருக்கிறது என்று பிறர் அறியமுடியாது என்கிற அர்த்தத்தில், திமுக-வை ஒரு சூரியன் என்று ஸ்டாலின் வர்ணிக்கிறாரா?

 

 

3. கேள்வி: "இண்டி கூட்டணிக்குக் காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்கிறது. 2029 தேர்தலின் போது, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் நிறுத்தப் படுவார். முதல்வர் விஜய்க்குக் கற்பனையில் கூட தன்னைப் பற்றி அப்படியான எண்ணம் இருக்காது; இல்லை என்பதுதான் என் கருத்து" என்று மதிமுக தலைவர் வைகோ கூறி இருக்கிறார். வைகோ எப்படி இந்தக் கருத்தைத் தைரியமாக வெளிப்படுத்துகிறார்?

 

பதில்: திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெக கூட்டணிக்குத்  தாவியவர் வைகோ. இருந்தாலும், அவர் தற்போது அங்கம் வகிப்பது ஜெயித்தவர்கள் கூட்டணி, தோற்றவர்கள் கூட்டணி அல்ல என்ற திருப்தி தவிர, அணி மாறியதில் வைகோவுக்கு வேறு பயன் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பார்த்தார் வைகோ. இரண்டு கைகளாலும் தவெக-வைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது ரிஸ்க்கானது, அதனால் ஒரு கையின் பிடியை காங்கிரஸ் மீது வைக்கலாம் என்று நினைக்கிறார். அதன்படி பேசியிருக்கிறார்.

 

 

4. கேள்வி: "நான் கேட்ட கேள்விகளுக்கு, விதண்டாவாதமாகப் பேசாமல், முதல்வர் விஜய் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும்" என்று எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி சட்டசபையில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: தண்டவாத சவால்கள், விதண்டாவாத மறுமொழி, சண்டைவாத மேல்பேச்சு. இதுதான் பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகளின் பிரதான சம்பாஷணை. பார்வையாளர்களுக்கு எப்போதும் டிஷ்ஷும் டிஷ்ஷும் படம் பார்த்த களைப்பு.

 


5. கேள்வி: தமிழக முதல்வர் விஜய்யைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எப்படியானவர்?

 

பதில்: விஜய் இப்படியானவர்.

 

கால் பங்கு, எம்.ஜி.ஆர் (புன்சிரிப்பு உதிர்ப்பது, மூதாட்டிகளை அன்புடன் அணைப்பது);

 

கால் பங்கு, மு.க. ஸ்டாலின் (தேசியத்துடன் ஒவ்வாமை, ஹிந்தி எதிர்ப்பு, 'நீட்' தேர்வு எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, போலித் தமிழ்ப் பற்று);

 

கால் பங்கு, சரத் பவார் (எந்தக்  குயுக்தி நினைப்பையும் ரகசியமாக வைத்திருப்பது);

 

அரைக்கால் பங்கு, ராகுல் காந்தி (தன்னை அடுத்த பிரதமர் என்று தன் கட்சியினர் சொல்லக்கேட்டு மகிழ்வது);

 

அரைக்கால் பங்கு, விஜய் (ஆள் எப்படி என்று யாருக்கும் தெரியாது)


பகுதி 130 // 04.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment