Friday, 11 September 2026

கேள்வி-பதில் (09.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சட்டசபையில் மானியக் கோரிக்கை பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஆக்ரோஷமாகத் திமுக-வின் மீது அடுக்கிய குற்றச்சாட்டுகளால் அக்கட்சி சபையில் நிலைகுலைந்ததா, அல்லது விஜய்க்குப் பதிலளிக்க அங்கு திமுக-வுக்குப் போதிய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதால் சபையில் கட்டிப் போடப்பட்டதா திமுக?

 

பதில்: இரண்டுமில்லை. சபை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பானதால், செயல்படமுடியாமல் கட்டுண்டு போனது திமுக.

 

 

2. கேள்வி: தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு சபாநாயகருக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ-க்களை சபைக் காவலர்கள் மூலம் வெளியேற்றச் செய்துவிட்டுப் பேசிய சபாநாயகர், "நடப்பதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியைப் பாராட்டுகிறேன்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: சட்டசபை என்று மட்டுமல்ல. தனது கட்சிக்குள்ளேயே, தலைவரான தனக்கு எதிராக அடுத்த கட்டத் தலைவர் யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிறகு அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும், அதனால் அதிமுக பலவீனமடைந்தாலும், நடப்பதை அமைதியாகக் கவனித்தவாறு தனது நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்து அமர்ந்திருப்பவர் பழனிசாமி.

 

 

3. கேள்வி: தமிழக சட்டசபையில், போதை ஒழிப்பின் அவசியம் பற்றித் தமிழில் எழுதிவைத்த காகிதத்தைக் கையில் வைத்துப் படிக்கும்போது திக்கித் தடுமாறித் திணறுகிறாரே தவெக எம்.எல்.ஏ, பல்லவி?

 

பதில்: அந்த இளம் தவெக எம்.எல்.ஏ, 12-ம் வகுப்பு பாஸ் செய்தவர். அவர் படித்த பள்ளியில் அவருக்குச் சரியாகத் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள். சரியான தமிழ் ஆசிரியர்களைப் பல வருடங்களாகத் திராவிடக் கட்சிகள் வேலைக்கு அமர்த்தவில்லை. பிறகு தமிழ் எங்கே வாழும்? நமது நகராட்சிக் கட்டிடங்களின் உச்சியிலும் சுவரொட்டிகளிலும் தமிழ் வாழும் - அதிகமான தமிழர்களின் நாவில் அல்ல.

 

 

4. கேள்வி: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை வெளியேற்றித் திமுக ஆட்சி அமைத்ததைச் சொல்லி, பின்னர் திமுக-வை விரட்டிவிட்டுத் தவெக ஒரு கூட்டணி ஆட்சி நிறுவியதைச் சுட்டிக்காட்டி, அடுத்ததாக இரண்டையும் விட மிகச் சிறப்பான ஆட்சி வரவேண்டியது பற்றிப் பேசிய அண்ணாமலை, "1960-களில் உணர்ச்சிநிலை மாற்றம் வந்தது, 2026-ல் மயக்கநிலை மாற்றம் வந்தது, அடுத்ததாக அறிவுநிலை மாற்றம் நிச்சயம் ஏற்படும்" என்று பேசியிருக்கிறாரே?

 

பதில்: உணர்ச்சிநிலை மாற்றம், மயக்கநிலை மாற்றம், இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 1967-லும் 2026-லும் அதை ஏற்படுத்திய தலைவர்கள்தான் வேறு.

 

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக மக்களிடம் அறிவுநிலை மாற்றம் ஏற்படும் நாள் கண்ணுக்குத் தெரியவில்லை.

 

ஒரு தலைவன் நமக்கு நல்லதை நினைக்கிறான், நல்லது செய்வான், என்ற நம்பிக்கையை மக்கள் பெற்றால் அவன் பின்னால் நின்று அவனுக்குப் பெருமளவில் வாக்களிக்க அவர்கள் தயாராவார்கள் - அவன் புதியவனாக இருந்தாலும். அத்தகைய தலைவன் அறிவார்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவனது அறிவுக்காக மட்டும் பெரும்பாலான சாதாரண மக்கள் அவனுக்கு வாக்களிக்க விரும்ப மாட்டார்கள். அதாவது, ஒரு தலைவனின் அறிவு மட்டும் மக்களைத் துளியும் ஈர்க்காது.

 

ஒரு தலைவன் 'நல்லவன், நமக்கு நல்லது செய்வான்' என்ற  உணர்வைச் சாதாரண மக்களிடம் ஏற்படுத்த, மக்களை ஈர்க்கும் ஒரு தனிப்பண்பு அவனிடம் இருக்கவேண்டும் - மோடியிடம் உள்ளது மாதிரி, அண்ணாமலையிடம் இருப்பது மாதிரி. அதோடு, தேர்தல் யுக்திகள், கூட்டணி சாமர்த்தியம், ஓரளவு அதிர்ஷ்டத்தின் பங்கு, ஆகியவை சேர்ந்துதான் அத்தகைய தலைவனுக்கும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பைத் தரும்.

 

 

5. கேள்வி: சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய் ஆக்ரோஷமாகப் பேசியவாறு தன் வலது உள்ளங்கையைத் தனது தாடை வரை கொண்டுசென்று, தாடையை அசைப்பது மாதிரிச் சைகை காட்டித் திமுக-வை அவர் ஏளனம் செய்வது போல் தொலைக்காட்சியில் தெரிந்ததே, அந்தக் காட்சி எப்படியிருந்தது?

 

பதில்: அப்போது நமது வலதுகை நான்கு விரல்களை நம் உச்சந்தலை மீது வைத்துத் தட்டிக் கொள்வது மாதிரி நாம் சைகை செய்திருக்கலாம். 

 

சினிமா டிராமா பாணி அரசியல் பேச்சுகள், சவால்கள், அங்க அசைவுகள் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம் சட்டசபை அல்ல. அவற்றுக்கான இடம் வெளியே இருக்கிறது.

 

பகுதி 132 // 09.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment