-- ஆர். வி. ஆர்
பிரபல
கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருடைய கம்பெனியின்
பெயரைச் சேர்த்து 'ஜெம்' வீரமணி’ என்று
அறியப்பட்டவர். 84-85 வயதுக்காரர். பெயர், செல்வம், செல்வாக்கு மிக்கவர்.
ஜெம்
வீரமணி மாபாதகம் செய்ததாகத் தற்போது ஆதாரங்கள்
வெளிவந்திருக்கின்றன – வீடியோ ஆதாரம் உட்பட. பல வருடங்களாக,
எழைச் சிறுமிகளைஅவர்
கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இருப்பிடத்துக்கு
அழைத்துவரச் செய்து – அவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என்று சொல்லத்தக்க, பாதுகாப்பற்ற 12, 13, 14 வயதுச் சிறுமிகள் என்பது செய்தி
– அக்குழந்தைகளிடம் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தியுள்ளார் வீரமணி என்பதற்கான
வலுவான ஆதாரங்கள் அவை. நடந்தது மகா கொடூரம்.
தற்போது
வீரமணியும், அவருடைய பாதகச் செயலுக்கு உதவிய
இருவரும் கைதாகிச் சிறையில் இருக்கின்றனர். வழக்கு நடக்கவேண்டும், குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்.
சாதாரணமாக,
ஒருவர் மீது கிரிமினல் வழக்கு நடக்க இருக்கையில் அவர் ஒரு அக்யூஸ்டு
– குற்றம் சாட்டப்பட்டவர் – மட்டுமே. அந்த
வழக்கை அவர் எதிர்கொண்டு, இறுதியில் கோர்ட் அவரைக் குற்றவாளி
என்று தீர்ப்பளித்தால் தான் அவரைக் குற்றவாளி என்று சட்டம் சொல்லும். மற்றவர்களும்
இந்த விதியை மதிக்க வேண்டும். ஆனால் சமூகத்தை உலுக்கும் ஒருவரின் மாபாதகச்
செயல்கள் பல ஆதாரங்களுடன் வெளிவரும்போது, சமூகம் இந்த
விதியைப் பின்பற்றாது. மக்கள் அவர் மீதும், சம்பந்தப்பட்ட
பலர் மீதும், தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இதுபோக,
தன்மீதான குற்றச்சாட்டுகள் பற்றி வீரமணி காத்துவரும் மௌனம் அந்தக் குற்றச்சாட்டுகளை
வலுப்படுத்துகிறது.
'என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவற்றைச் சட்டப்படி எதிர்கொண்டு நான் நிரபராதியாக வெளிவருவேன்' என்று வீரமணியிடமிருந்தோ, அவர் சார்பாக மற்ற எவரிடமிருந்தோ, ஒரு அறிக்கையும் வரவில்லை. அவருடைய நிலையில், தான் நிரபராதி என்று நம்பும் எந்த மனிதரும் இந்நேரம் ஒரு மறுப்பு அறிக்கை அளித்திருப்பார், அவர் சார்பாக இரண்டு மூன்று வக்கீல்களும் அந்த மறுப்பைப் பொதுவெளியில் கூறி இருப்பார்கள்.
'நான்
நிரபராதி என்று கோர்ட்டில்தான் சொல்வேன், அங்குதான் எனக்காக
வாதாடுவேன். அதுவரை என் பேர் படு ரிப்பேர்
ஆனாலும் கப்சிப் என்று இருப்பேன்'
என்று குற்றமற்ற ஒரு தொழிலதிபர் நினைக்க மாட்டார். ஆகையால்,
'நான் குற்றவாளிதான்' என்று கிட்டத்தட்ட
வீரமணியே பொதுமக்களிடம் ஒப்புக்கொண்ட மாதிரி இருக்கிறது.
வீரமணி
ஏன் தனது பாதகச் செயல்களை ஒப்புக் கொள்கிற மாதிரித் தோற்றம் தருகிறார்?
‘நாம் செய்த தவறை இனி மறைக்க
வேண்டாம்’ என்ற புதிய தூய எண்ணமா? இருக்காது. தன்மீதான
குற்றச்சாட்டை அவர் இப்போதே பொதுவெளியில் மறுத்தால், முன்பு அவர் சீரழித்த சிறுமிகள் – தற்போது வளர்ந்தவர்களாக,
பெரியவர்களாக இருக்கிறவர்கள் – இன்னும் அதிகமானோர் அவருக்கெதிராக
சாட்சியம் சொல்வார்கள்; அவர் மேலும் மேலும் கேவலப் படலாம்; ஆகையால் வாயை
மூடிக்கொண்டு வந்ததை ஏற்போம் என்று வேறு வழியில்லாத நிலையில் அவர் இருப்பதாகத்
தெரிகிறது.
வீரமணி
மீதான குற்றச்சாட்டை முதலில் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் எந்த லட்சணத்தில்
வேலை செய்தார்கள்? அவர்களுக்குக் கிடைத்த
குற்றச் சம்பவ வீடியோவில்,
அதிலுள்ள பெரியவர் வீரமணி மாதிரித் தோன்றினாலும் அது அவர்தான் என்று
அவர்களால் உறுதிசெய்ய முடியவில்லையாம். அதிலுள்ள சிறுமியையும் அடையாளம் காண
முடியவில்லையாம். காரணம், வீடியோ மங்கலாக இருந்ததாம்.
ஆகையால் ‘மேல் நடவடிக்கையைக் கைவிடுகிறோம்’
என்று, போஸ்கோ நீதிமன்றத்தில் அறிக்கை செய்தது காவல்துறை. அந்த அறிக்கையை நீதிமன்றம்
ஏற்றிருந்தால் வழக்கின் கதை அதோடு முடிந்திருக்கும்.
போஸ்கோ நீதிமன்றத்தின் நீதிபதி, காவல்துறையின் கைகழுவும் அறிக்கையை ஏற்க மறுத்து மறுவிசாரணைக்கு உத்தரவிட, பிறகு திமுக ஆட்சி போய் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியும் வந்துவிட்டது. இந்த நிலையில் காவல்துறை தீவிரமாக வழக்கை மறுவிசாரணை செய்கிறது. அதில் புதிய அதிகாரிகள் இணைகிறார்கள், மேற்பார்வை செய்கிறார்கள். அதன் விளைவாக, அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளிவருகின்றன. முன்பு கொடுமை இழைக்கப்பட்ட பல சிறுமிகள் இப்போது முன்வந்து தங்களுக்கு நேர்ந்த அவலத்தைக் காவல்துறையிடம் சொல்கிறார்கள் என்பது செய்தி. மேலும் கைது நடந்திருக்கிது. சிலர் தேடப்படுகின்றனர். முன்பு இவ்வழக்கில் கடமை தவறிய சில உயர் போலீஸ் அதிகாரிகள் தூக்கியடிக்கப் படுகிறார்கள்.
வீரமணி
மீதான குற்றச்சாட்டு, அண்ணன் தம்பி தகராறில்
நடந்த வெட்டுக் குத்து, அல்லது ஒரு ஆணவக் கொலை, என்பது மாதிரி அல்ல. அத்தகைய குற்றங்கள் செய்வோர் திரும்பத் திரும்ப அதே
குற்றங்களைத் தொடர்ந்து செய்யும் சூழ்நிலை இருக்காது. ஆனால் ஒரு ஆண் ஒரு
சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்கிறான், அதுவும் ஒரு
வீட்டில் வைத்துச் செய்கிறான், அதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்திருக்கிறது என்றால் அவன்
அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் அந்தக் குற்றத்தைச் செய்திருக்க, இனி செய்ய,
வாய்ப்பிருக்கிறது என்பது உறுதி. அவனால் சில சிறுமிகள் ஏற்கனவே பாதிக்கப்
பட்டிருக்கலாம், இனிமேலும் சிலர் பாதிக்கப் படலாம். இவற்றையெல்லாம்
தொடக்கத்திலேயே ஊகிக்க ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் தேவையா, அல்லது
காக்கி உடை அணிந்த ஒரு சாதாரணக் காவலருக்கே இது தெரியுமா?
‘வீரமணி
மீதான விசாரணை ஒரு கொடுங்குற்றம் தொடர்பானது; ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிறுமிகளின் எதிர்காலத்தை நாசம் செய்கிற குற்றம்
அது என்று தெரிந்தும், அந்தக் குற்றம் நிரூபணம்
ஆகாமல் போய் அவர் தண்டனையிலிருந்து தப்பிவிட காவல்துறை அதிகாரிகள் ஆரம்பத்தில்
அவருக்கு உதவி இருப்பார்கள்; அதற்காக அந்த அதிகாரிகள்
பிரதிபலன் அடைந்திருப்பார்கள்’ – இவ்வாறு பொதுமக்கள் நினைக்கலாம்
அல்லவா?
வீரமணி
விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே மெத்தனமாக,
அலட்சியமாக நடந்துகொண்டார்கள் என்றால், ஆளும்
அரசியல்வாதிகள் அந்த அதிகாரிகளை அப்படிச் செயல்பட அனுமதித்திருந்தால் ஒழிய,
அந்த அதிகாரிகள் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. தங்களுக்கு ஆதாயமில்லாமல்
ஆளும் அரசியல்வாதிகளும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
ஆக
மொத்தம்: ஆளும் – அதாவது, ஆண்ட – அரசியல்வாதிகள் சிலரின் கேவலமான கீழ்த்தரமான
எண்ணமும் நடவடிக்கையும் தான் ஒரு மனிதன் பல வருடங்களாகப் பல அப்பாவிச்
சிறுமிகளுக்குப் பாதகம் நிகழ்த்த ஏதுவாக
இருந்திருக்கும். தமது சுயநலப் பலன்களுக்காக, தேசத்திற்கும் மக்களுக்கும் எதிரான
எந்த அட்டூழியத்தையும் இத்தகைய அரசியல் தலைவர்கள் செய்யத் துணிவார்கள்.
இருந்தாலும்
நமது தேசத்திற்கு நன்மைகள் நிகழும், நாம்
நம்பிக்கையோடு காத்திருக்கலாம், என்பதற்கும் இந்த விஷயத்தில்
ஒரு அறிகுறி இருக்கிறது. அந்த அறிகுறி, ஒரு பெண். அவர்தான், வீரமணி வழக்கை
விசாரிக்கும் போஸ்கோ நீதிமன்றத்தின் நீதிபதி. அநியாயத்திற்குத் துணை போகாத, அக்கிரமத்திற்கு
வளைந்து கொடுக்காத, ஒரு நேர்மையான
நீதிபதியாக அவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் நமக்குப் பெரிய ஆறுதல். அவரது
உத்தரவால்தான், காவல்துறை முயன்ற மாதிரி இந்த வழக்கு இழுத்து
மூடப்படாமல் மறுவிசாரணை நடந்து, வேறு வழியே இல்லாமல் பல
ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன.
நல்லவர்கள்
பொறுமை காக்கவேண்டிய நேரமிது. இப்போதைக்கு இதை மட்டும் சொல்லலாம்.
* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
No comments:
Post a Comment