Friday, 11 September 2026

கேள்வி-பதில் (11.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தவெக, காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர். ஒரு மதத்தைக் குறிக்கும் சொல்லைத் தன் பெயரில் வைத்திருக்கும் கட்சி, மதச்சார்பற்ற கட்சியா? அக்கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணியா?

 

பதில்: கூட்டணியின் ஒரு கட்சியின் பெயரில் உள்ள ஒரு சொல்லை வைத்து எழுப்பப்படும் கேள்வி இது.

 

அந்தக் கூட்டணியின் பெயரில் நைஸாகத் தவிர்க்கப்பட ஒரு சொல்லைச் சேர்த்துப் படித்தால், வேண்டாத குழப்பம் யாருக்கும் வராது.

 

'மதச்சார்பற்ற' எனத் தொடங்கும் கூட்டணியின் பெயருக்கு முன் 'ஹிந்து' என்ற சொல்லைச் சேர்த்து, 'ஹிந்துமதச் சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று படித்துப் பார்த்தால் ஆல் கிளியர், அனைத்தும் ஓகே.

 

 

2. கேள்வி: சட்டசபையில் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் பேசியதைத் தொடர்ந்து தனது வீடியோ பதிவை வெளியிட்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், "யாரைப் பற்றிப் பேசும்போதும் கண்ணியமாகப் பேசுங்கள்" என்று விஜய் முதல்வர் பதவியேற்றவுடன் அவரிடம் ஸ்டாலின் சொன்னதை நினைவு கூர்கிறார். ஸ்டாலின் அன்று விஜய்யிடம் சொன்னது சரியான வார்த்தைதானே?

 

பதில்: வார்த்தையை மட்டும் பார்த்தால் சரிதான்.

 

முன்னர் காமராஜரைப் பற்றித் திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது, இந்த நல்வார்த்தையை அவர் நினைவில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி போன்ற தற்போதைய திமுக தலைவர்களிடம் - "டெங்கு, மலேரியா போல் சனாதனத்தை ஒழிக்கவேண்டும்" என்று பேசிய உதயநிதியிடமும் - ஸ்டாலின் இதே அறிவுரையைச் சொல்லியிருக்க வேண்டும். சொன்னாரா?

 

"அரசு வேலைகள் தொடர்பாக யாரும் வசூல் வேட்டை நடத்துவதை அனுமதிக்காதீர்கள். புதிய முதலமைச்சராக, இந்த விஷயத்தில் உங்கள் கண்காணிப்பு முக்கியம்" என்று விஜய்யிடம் ஸ்டாலின் நடுக்கமில்லாத குரலில் சொல்லி இருந்தால் நல்லது. சொன்னாரா?

 

சரியான வார்த்தையைச் சரியான நபர் சொன்னால் அதற்கு முழு மதிப்பு. சரியான நபர் சொல்லாவிட்டால் அதன் மதிப்பு கால் பங்கு.

 

விஜய்யைப் பொறுத்தவரை, அவர் ஆட்சிக்குப் புதியவர், அரசியலுக்கும் புதியவர். அவரும் கண்காணிக்கப் படவேண்டியவர்.

 

 

3. கேள்வி: "நமது முதலமைச்சர் அதிகம் பேசமாட்டார். ஆனால் அனைத்தையும் கூர்ந்து கவனிப்பார்" என்று விஜய்யைப் பாராட்டி சபாநாயகர் ஜி.சி.டி. பிரபாகர் ஒரு விழா மேடையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: பிரபாகர் பேசாதது: 'நமது முதலமைச்சர் அதிகம் பேசாவிட்டாலும், நானும் சில அமைச்சர்களும் அடிக்கடி முதலமைச்சரைப் போற்றிப் புகழ்ந்து பேசி அவரது மௌனத்தை ஈடு கட்டிவிடுவோம்.'

 

 

4. கேள்வி: மு. க. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானாரா இல்லையா?

 

பதில்:  ஒரு சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தலைவர் கைதாவதோ, தண்டிக்கப்படுவதோ, அல்லது அப்படி ஒன்றும் நடக்காமல் இருப்பதோ, பெரிதாக ஒன்றையும் குறிக்காது. வீராப்பாக அந்தத் தலைவர் ஏதாவது சொல்லலாம், அவருடைய எதிரிகள் அதை மறுக்கலாம். இதில் நமக்கு ஒன்றுமில்லை.

 

எப்படியான இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஒரு கட்சியின் தலைவருக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை வைத்தே நீங்கள் அந்த முதன்மைத் தலைவரை மதிப்பிடலாம் - அந்தத் தலைவர் தூய்மையானவர் போல் காட்டிக் கொண்டாலும். உதாரணமாக: மலிவாகக் கிடைத்ததால் இரண்டு கப்பல்களை வாங்கிப் போட்ட டி.ஆர். பாலு, டாஸ்மாக் கடைகளில் புரட்சிகள் செய்த செந்தில் பாலாஜி, அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முறையில் புதுமைகள் செய்த கே.என். நேரு, திமுக-வுக்கு எதிராக ஓட்டுப் போட்ட வாக்காளர்களை "உங்களுக்கு நல்ல சாவே வராது" என்று வாழ்த்திய ஆர்.எஸ். பாரதி, சாதாரணப் பெண் வாக்காளர்களைப் பார்த்து, "நீங்க ஓசி பஸ்ல தான போறீங்க?" என்று அன்பாக விசாரித்த பொன்முடி, "டெங்கு, மலேரியா போல் சனாதனத்தை ஒழிக்கவேண்டும்" என்று முழங்கிய உதயநிதி, ஆகியோர் மு. க. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருப்போரில் சிலர். அவரது சுற்றத்தை வைத்தே நீங்கள் ஸ்டாலினைச் சரியாக எடை போடலாம்.

 


5. கேள்வி: அமெரிக்காவில் இந்த ஆண்டு நடக்கப் போகும் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கான பார்லிமென்ட் தேர்தலில் தனது குடியரசுக் கட்சி வென்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 5,000 டாலர், அதாவது 5 லட்சம் ரூபாய், வழங்கப் படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: இதோடு அவர் நிறுத்தக் கூடாது. தனது கட்சியின் பெயரை 'குடியரசு வெற்றிக் கழகம்' என்று மாற்றி, அந்த 5,000 டாலருக்கு 'அத்தைப் பாட்டி ஐயாயிரம்' என்றும் அவர் பெயர் சூட்டினால், அமெரிக்காவில் மாற்றம் வந்துவிட்டது என்று பொருள்.


பகுதி 133 // 11.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment