Wednesday, 16 September 2026

கேள்வி-பதில் (16.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: நடிகர் அஜித், ரேஸ் கார் ஓட்டுபவர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இங்கிலாந்து சென்றிருக்கும் நிலையில், அங்கு நடக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்பதை அவர் நேரில் காணச் சென்று, அந்தப் பந்தயத்தைக் கொடி அசைத்துத் துவக்கியும் வைத்திருக்கிறாரே?

 

பதில்: அஜித் ஒரு நடிகராக இல்லையென்றால், விஜய் அந்தக் கார் பந்தயத்தை நேரில் சென்று பார்த்திருக்க மாட்டார். எங்கோ யார்மீதோ விழும் வெளிச்சம் தன்மீது நன்றாகப் படுவதற்கு மெனக்கெட்டிருக்கிறார் விஜய். தமிழக வெளிச்சக் கழகம்.

 

 

2. கேள்வி: மதிமுக-வின் முதன்மைச் செயலர் துரை வைகோ சொல்லியிருப்பது: "மதிமுக-விற்கு எம். பி. பதவி கிடைத்ததை, 'திமுக போட்ட பிச்சை' என்கின்றனர். இது யாரும் யாருக்கும் போடும் பிச்சை இல்லை; மக்கள் தான் எஜமானர்கள். எங்களுக்காவது மக்கள் பிச்சை போட்டனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அந்தப் பிச்சையைக் கூட கொளத்தூர் தொகுதி மக்கள் போடவில்லை". அவர் கருத்து சரியா?

 

பதில்: ஐந்தாண்டுகளில் ஒரு நாள் தங்களுக்கு வாக்குப் பிச்சை போடும் சாதாரண மக்களை, ஐந்தாண்டுகளும் வாழ்வுப் பிச்சை எடுக்கும் நிலையில் வைத்திருப்பவர்கள், நமது திராவிட அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகள் - அந்த ஒருநாள் பிச்சைக்காரர்கள் - அவர்களுக்குக் கிடைத்த பிச்சைப் பலன்களைக் கணக்கிட்டு ஐந்தாண்டுகளும் தங்களுக்குள் மோதிக் கொண்டிருப்பார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல், சாதாரண மக்கள் தங்களின் ஐந்தாண்டு வாழ்வுப் பிச்சையில் கவனம் செலுத்தினால் பயன் உண்டு.

 

 

3. கேள்வி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதினுக்கு, திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகத்தை பாரதப் பிரதமர் மோடி பரிசளித்தார். அது பற்றி ஒரு விழா மேடையிலிருந்து கருத்துச் சொன்ன கவிஞர் வைரமுத்து, "பிரதமர் ஏன் திருக்குறளைக் கொடுத்தார்? பைபிளைக் கொடுத்திருக்கலாம். அது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரித்தானது. குர்ஆன் கொடுத்திருக்கலாம். அது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரித்தானது. பகவத் கீதை கொடுத்திருக்கலாம். அது இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானது. ஆனால் திருக்குறள் தான் உலக மனிதனுக்கே உரித்தானது. அது நாடு, மதம், மொழி, இனம், ஜாதி கடந்தது. ஆகையால் பிரதமர் ரஷ்ய அதிபருக்கு திருக்குறளைக் கொடுத்தார்" என்று பேசி இருக்கிறார். திருக்குறளுக்கு வைரமுத்துவின் மனமுவந்த பாராட்டா இது?

 

பதில்: இங்கு வைரமுத்து திருக்குறளை உள்நோக்கத்துடன் ஒருபக்கத்தில் மட்டும் சிலாகிக்கிறார். காரணம் இது.

 

ஒரு ஹிந்துவாக வாழ்ந்து அந்த மதத்தைப் போற்றுகிற பலர், சிறந்த மனிதர்களாக இருக்கலாம், சிறந்த வாழ்வியல் அறிஞர்களாகவும் இருக்கலாம். அத்த இரண்டுமாக இருந்தவர் திருவள்ளுவர். அவர் குறித்து, திருக்குறள் குறித்து, ஹிந்துக்கள் விசேஷமாகப் பெருமை கொள்வது இயற்கை.

 

திருவள்ளுவர் ஒரு ஹிந்து என்பதன் அடையாளம் ஆங்காங்கே திருக்குறளில் இருக்கிறது, சில குறள்களில் ஹிந்து மத நம்பிக்கைகள் வெளிப்படுகின்றன; இருந்தாலும் ஒட்டுமொத்தத் திருக்குறள் மனித குலமே தன் மனதையும் செயலையும் அதனுடன் ஒன்றுபடுத்திப் பார்க்கும் வகையில் ஆழமாகவும் விசாலமாகவும் இருக்கிறது என்பதால், வைரமுத்துவுக்குத் திருவள்ளுவரை விடவும் முடியவில்லை, தள்ளவும் முடியவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம்: வைரமுத்து ஒரு ஹிந்து என்பதில் துளியும் பெருமை கொள்ளவில்லை; அப்படியானவர், திருக்குறள் குறித்து இயல்பாகக் குயுக்தியுடன் பேசியிருக்கிறார்.

 

திருவள்ளுவர் தன்னுடைய ஹிந்து மதத்தைப் போற்றிப் பின்பற்றிய ஒரு அறிஞர், ஹிந்து மத நம்பிக்கையைக் குறிக்கும் சில குறள்களை அவர் எழுதியிருக்கிறார், அவை மூலம் அந்த நம்பிக்கையை அவர் சிபாரிசும் செய்கிறார், என்ற உண்மையை வைரமுத்து பின்னுக்குத் தள்ளு தள்ளு என்று தள்ளி, திராவிட அரைகுறைப் பகுத்தறிவின் வழியில் திருவள்ளுவரைப் போற்றுகிற சாக்கில், 'திருக்குறள் ஹிந்து மதத்தைச் சிறிதும் சாராமல், முற்றிலும் ஹிந்து மதத்தைக் கடந்து இருக்கும் நூல்' என்று தூக்கலாகப் பொருள்படும்படி பேசி இருக்கிறார். அப்படிப் பேசும்போது, 'மதங்களுக்கு இடையே நடுநிலையானவன் நான்' என்று போலியாகக் காட்டிக் கொள்வதற்காக, சம்பந்தமில்லாமல் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் சேர்த்து அவர் குறிப்பிடுகிறார். அந்த மதத்தவர்கள் தங்களின் மத ரீதியாகத் திருக்குறளில் பெருமை காண்பதில்லை, அது அவர்களுக்கு அவசியமும் இல்லை. சம்பந்தம் இல்லாமல் அவர்களையும் வைரமுத்து குறிப்பிட்டதால் வைரமுத்துவின் உள்நோக்கம் மறையாது, அவர் பேச்சு யாரையும் ஏமாற்றாது.

 

தனக்குப் பிடித்த அர்த்தத்தில் வைரமுத்து ஏதோ சொல்கிறார்.  அதற்கு உரிய அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

 

4. கேள்வி: "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நாங்கள் ஒரு அமைச்சரைப் பெற்றிருக்க முடியுமா? பெற முடிந்ததா?" என்று மேடையிலிருந்து கேட்கிறாரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்? அதாவது, விஜய் தலைமையிலான ஆட்சியில்தான் ஒரு விசிக எம்.எல்.ஏ மந்திரியாக முடிந்தது, திமுக ஆட்சியில் அது நடக்கவில்லை என்று அவர் சொல்கிறாரே?

 

பதில்: ஸ்டாலின் தலைமையிலான சென்ற திமுக ஆட்சியில், அந்தக் கட்சிக்குச் சட்டசபையில் தனிப் பெரும்பான்மை இருந்தது.  இன்றைய ஆட்சிக்குத் தவெக தலைமை தாங்கினாலும்,  சட்டசபையில் அக்கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடையாது. சட்டசபையில் விசிக-வின் ஆதரவையும் பெற்றுத்தான் இந்தக் கூட்டணி அரசு விழாமல் நிற்கிறது. இந்த ஆட்சியில் விஜய் விசிக-வுக்கு அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால், ஆட்சியே கவிழலாமே?  அவ்வளவுதானே விஷயம்?

 

கால் உடைந்து, நடக்க முடியாத ஒருவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலி இப்படி நினைத்ததாம்: 'தேக ஆரோக்கியம் மிகுந்த ஒரு மனிதர் நேற்று என்னைச் சட்டை செய்யாமல் என்னைக் கடந்து வேக வேகமாக நடந்து போனாரே, அவர் என்றைக்காவது என்னருகில் வந்து என்னைக் கனிவாகப் பார்த்ததுண்டா? என்னைப் பிரியமாகப் பற்றியதுண்டா?'

 


5. கேள்வி: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி ருசியான சைவ உணவை இரவு விருந்தாக வழங்கினார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவின் 80 சதவிகித மக்கள் அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்கள். இந்திய அசைவ உணவு ருசி மிக்கது, என் சகோதரியின் சோலே பட்டூரேவைப் போல" என்று என்னவோ சொல்லவந்து எதையோ பேசி முடித்திருக்கிறாரே?

 

பதில்: குழம்பிய நிலையில் ஏதேதோ பேசுகிறவர்கள், எப்படியோ செயல்படுகிறவர்கள், 'எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்' என்று இருப்பதாகச் சொல்வதுண்டு. அவர்களில் ஒருவர், 'யாருக்கு எவர் என்ன உணவளித்தால், எம் சித்தம் தெளியும்' என்று இருப்பார்.

 

இன்னொன்று. அசைவ உணவு உட்கொள்பவர்கள், சைவ உணவையும் ருசிப்பது உண்டு. இலையில் சோலே பட்டூரேவை ஒரு வெட்டு வெட்டியிருக்கும் ராகுல் காந்திக்கு இது தெரியும்.


பகுதி 135 // 16.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment