|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "எதிர்காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குச்
சிக்கன் பிரியாணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளாரே? பதில்: 'தமிழகத்தில் படித்து முடித்தவர்கள், காசு கொடுத்துச் சிக்கன் வாங்கி அவர்கள் வீட்டிலேயே
சிக்கன் பிரியாணி சமைக்கப்பட்டு உண்ணும் அளவுக்கு அவர்களுக்கு மாநிலத்தில் நல்ல
வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்கச் செய்வோம்' என்று
அமைச்சர் பேச முடிந்தால் நல்லது. ஆனால் அதைச் செயல்படுத்த மாநில அரசு ஆழ்ந்து
திட்டமிட்டுப் பல திசைகளில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும், அதற்கான திறனும் முனைப்பும் மன உறுதியும்
முதலமைச்சரிடம் இருக்கவேண்டும். அதெல்லாம் விஜய்யிடம் இல்லை. அதற்குப் பதிலாக, அரசு கஜானாவில் இன்னொரு ஓட்டை போட்டு, சாதாரண மக்களை ஆசையிலும், சார்பு நிலையிலும் வைத்து அவர்களிடம் குயுக்தியாகப் 'பெரிய மனசு' பட்டம்
வாங்கினால் அடுத்த தேர்தலில் தவெக-வுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கலாம் என்பது
அக்கட்சியின் எண்ணமாக இருக்கும். அதற்குச் சாதாரண மக்கள் ஒருவகையில், கோழிகள் இன்னொரு வகையில், பலியாக வேண்டும். |
|
2. கேள்வி: 'கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது ' என்று திமுக
தலைவர் கே.என். நேரு தன்னிடம் கூறியதாக மதிமுக-வின் துரை வைகோ
சொல்லியிருக்கிறார். நேரு அப்படிச் சொல்லி இருப்பாரா? பதில்: கலைஞர் காலத்து திமுக இப்போது இல்லை.
இப்போது இருப்பது ஸ்டாலின் காலத்து திராவிட மாடல் திமுக - அது உதயநிதியின் ரெட்
ஜெயன்ட் திமுக-வைப் பாதி உள்ளடக்கியது. இது அனைவருக்கும் தெரியும், துரை வைகோவுக்கே தெரியும். நேரு இதை
நினைத்துத் தான் துரை வைகோவிடம் எதையும்
சொல்லி இருக்கலாம். இதைப்போல், ஜவஹர்லால் நேரு காலத்து காங்கிரஸ், இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ், சோனியா காந்தி காலத்து காங்கிரஸ் வேறு
வேறானவை. |
|
3. கேள்வி: ஈ.வெ.ரா பெரியார் பிறந்த தினத்தை ஒட்டிப் பதிவிட்ட 'வீ த லீடர்ஸ்' அமைப்பின்
தலைவர் அண்ணாமலை, "சமூகத்தில்
நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது
வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட பெரியாரின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து
வணங்குகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறாரே? பதில்: "நான்
ஒரு ஹிந்து. திருநீறு வைக்கிறேன்.
பொட்டு வைக்கிறேன். வீட்டிலிருந்து வெளியே வரும்போது என் மதத்தையும்
சாதியையும் வீட்டில் வைத்துப் பூட்டி விட்டு வருவேன்"என்று 'வீ த லீடர்ஸ்' தலைவராக
அண்ணாமலை முன்னர் பொதுமேடையிலிருந்து பேசியிருக்கிறார். ஆனால் வீட்டிலிருந்த
போதும் வெளியே வந்தபோதும் ஹிந்துமத எதிர்ப்பை, ஹிந்துக்
கடவுள் எதிர்ப்பை, வெள்ளமாய்க் கொட்டிக் கொண்டிருந்த
ஈ.வெ.ரா, பெரும் தவறு செய்ததாக அண்ணாமலைக்குத்
தோன்றவில்லை. மதத்தையும் கடவுளையும் நம்பாதவன், தனது
நம்பிக்கையின்மையை வீட்டில் வைத்துப் பூட்டாமல் வெளியில் கொண்டுவந்து
அனைவரிடமும் அதை ஆட்டி அசைத்துக் காட்டலாமா? அண்ணாமலை சார்ந்த ஹிந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை அபரிதமாக உண்டு.
பெரும்பாலும் கடவுள்களின் பெயர்கள்தான் அண்மைக்காலம் வரை குழந்தைகளுக்கு வைக்கப்
பட்டன. ராமசாமி என்ற ஈ.வெ.ரா-வின் பெயரும் அண்ணாமலையின் பெயரும் அதற்கு
உதாரணங்கள். அண்ணாமலை நம்பும் கடவுளை, அவர்
அனுசரிக்கும் மதத்தை, இழித்தும் பழித்தும் ஈ.வெ.ரா அவர்
காலத்தில் பேசியது 'சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள்
மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக' அவர்
மேற்கொண்ட நடவடிக்கை என்று அண்ணாமலை பார்க்கிறாரா? அல்லது, சமூக
ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக ஒருவர் பேசினால், செயல்பட்டால், அவர்
ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக் கடவுள்களை இழித்தும் பழித்தும் பேசலாம், நம்பிக்கையாளர்களை முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி
என்று ஏசலாம், அதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்கிறாரா
அண்ணாமலை? அண்ணாமலை நம்பிக்கையுடன் திருநீறு வைத்துக்கொள்வது, பொட்டு வைத்துக் கொள்வது, ஆகிய செயல்களே ஈ.வெ.ரா-வின் பார்வையில் மூட
நம்பிக்கையாக இருக்கும். அது மூட நம்பிக்கை என்றால், அதைச் செய்தவாறு ஈ.வெ.ரா-வைப் பாராட்டிப் போற்றுவது
எந்த வகை நம்பிக்கை? ஈ.வெ.ரா-வின் கடவுள் எதிர்ப்பு கருத்துகளைச் சாதாரண மக்கள் யாரும்
பொருட்படுத்துவது கிடையாது. சாதாரண மக்களிடையே அவருடைய தாக்கம் பூஜ்ஜியம்.
ஆகையால் அவருடைய கடவுள் எதிர்ப்பு கருத்துகளை அண்ணாமலை இப்போது விமர்சிக்க
அவசியமில்லை, அவரைப் போற்றவும் அவசியமில்லை. ஆனால், நம்பிக்கையாளர்களை இழிவு செய்யும் வாசகங்கள் உடைய
ஈ.வெ.ரா சிலைகள் ஹிந்துக் கோவில்கள் முன்பாக நீடித்திருக்காமல் அகற்றப்பட
வேண்டியது வேறு விஷயம். |
|
4. கேள்வி: "தமிழகத்தில் அடுத்த ஐந்து அல்லது பத்து
ஆண்டுகளில், பாஜக-வைச்
சேர்ந்தவர் முதல்வராகப் பதவி ஏற்பார்" என்று பாஜக தேசிய அமைப்பு பொதுச்
செயலர் பி. எல். சந்தோஷ் சென்னையில் பேசியிருக்கிறாரே? பதில்: இத்தகைய ஆசையைப் பாஜக தனக்குள்
வைத்திருந்து உத்வேகம் கொள்ளலாம். ஆனால்
தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தில், அந்த விஷயம் குறித்து பாஜக வெளியில்
பேசும்போது அடக்கி வாசிக்கவேண்டும் - ஆசையை வாசிக்கக் கூடாது. |
|
5. கேள்வி: "தமிழகத்தில் இனி நூறு ஆண்டுகள் தவெக ஆட்சிதான்.
ஆட்சி சிறப்பாக உள்ளது" என்று மதுரை ஆதீனம் ஒரு பேட்டியில் சொல்லி
இருக்கிறாரே? பதில்: அவர்
பேச்சு சிறப்பாக இல்லை. |
|
பகுதி 136 // 19.09.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment