|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "சபாநாயகராக நான் சிறப்பாகச் செயல்படுகிறேன்
என்றால், அந்தப்
பொறுப்பில் என்னை அமர வைத்த முதல்வருக்குத் தான் அந்தப் பெருமை சேரும்"
என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே? பதில்: முதல்வருக்கு
அவ்வப்போது வார்த்தைகளால் பிரபாகர் சல்யூட் வைக்கிறார். அது முதல்வரைக்
குஷிப்படுத்தும், தனது இருக்கைக்கும் பாதுகாப்பானது, என்று அவர் சூட்டிக்காக உணர்ந்திருக்கிறார். தனக்குக் பெருமை சேர்க்கும் வகையில்தான் முதல்வர் விஜய் நியமனங்கள்
செய்வார், பொறுப்புகள் வழங்குவார், என்றால்: சட்டசபையில் தடுமாறித் தத்தளித்துத் தமிழ்
பேசினாரே தமிழரான ஒரு அமைச்சர், அந்தக்
காட்சிக்கான பெருமையும் முதல்வரைத்தான் சேருமா? எந்தப் பெரிய தலைவரும், தன்னுடன்
பயணித்துத் தனக்கு உறுதுணையாக இருக்கும் நபர்களிடம் நன்றி பாராட்டுவார், அவர்களும் அந்தத் தலைவருடன் பணியாற்றுவதை ஒரு
பாக்கியமாகக் கருதுவார்கள். அப்படியான உறவில், அத்தகைய
நபர்கள் அவ்வப்போது தலைவர் புகழ் பாட அவசியமில்லை. |
|
2. கேள்வி: "பிரதமர் வேட்பாளர் யார்?" என்று
சமீபத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒரு நிருபர் கேட்டதற்கு, "விஜய்தான்"
என்று முன்பு சொன்னதைக் கூறாமல் "தேர்தலுக்கு இன்னும் நாள்
இருக்கிறது" என்று அவர் சொல்கிறார் - அதாவது, அந்த நாற்காலிக்கு ஏற்றவராக
ராகுல் காந்தியை இன்னும் ஆதவ் அர்ஜுனா ஏற்கவில்லை. அதே சமயம் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம்
தாகூரோ, "பிரதமர்
வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பது உறுதி. யார் பிரதமர் வேட்பாளர் என்பது
முடிந்துபோன கதை" என்று சொல்கிறார். ஒரு கூட்டணியில் தலைமைக் கட்சிக்கும்
மற்ற உறுப்பினர் கட்சிக்கும் ஏன் இந்த முரண்பாடு? பதில்: எதிர்க் கட்சிகளிடையே ராகுல் காந்திதான்
அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று, அந்த இடத்துக்கு ராகுல் காந்திக்காக
காங்கிரஸ்காரர்கள் பல வருடங்களாகத் துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.
திடீரென்று அந்தத் துண்டின் மேல் தவெக-வினர் விஜய்க்காக வேறு ஒரு துண்டைப்
போட்டால், முதலில் துண்டு போட்டவர்களுக்கு சுர்ரென்று கோபம் வருவது இயற்கை. இது ஒரு
புறம். இன்னொரு புறம்: அடுத்த லோக் சபா தேர்தல்
நேரத்தில் 'மோடி துண்டு' ஒரு சுழட்டு சுழட்டினால், ராகுல் துண்டோடு விஜய் துண்டும் சேர்ந்து
தூக்கியடிக்கப் பட்டு, ஒன்று வயநாட்டில் விழும், இன்னொன்று தமிழகத்தோடு தங்கும், என்று அவர்கள் இருவருக்கும் எண்ணம் உண்டு.
இருந்தாலும் அந்த இருவரின் அரசியலில் அலம்பல் நிறைய இருக்கும் - அவர்களின்
கட்சிக்காரர்களின் மூலமாகவும் அது வெளிப்படும். மக்கள் ரசித்துப் பொழுது
போக்கலாம். |
|
3. கேள்வி: "முதல்வர் விஜய் பிரதமராக வருவார் என, அன்பின்
மிகுதியால் எங்கள் சகோதரர்கள் கூறுகின்றனர்; அதிகார பூர்வமாகச் சொல்வது
கிடையாது" என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி இருக்கிறாரே? பதில்: 'விஜய்க்குப்
பிரதமராகும் எண்ணம் கிடையாது. தமிழகத்தில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்குப்
பணியாற்றத்தான் அவருக்கு விருப்பம்' என்று தவெக-விலிருந்து யாராவது அதிகார
பூர்வமாகச் சொன்னதுண்டா? |
|
4. கேள்வி: முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேரு வீட்டில், விஜய் அரசின்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அது தொடர்பான தொலைக்காட்சி வீடியோவில் அவர்
வீடு மிகப் பெரிதாக, நன்றாக, நேர்த்தியாகக்
கட்டப்பட்டிருப்பது தெரிகிறதே? பதில்: சென்ற திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகள்
நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம், குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் நேரு. அவருடைய விசாலமான வீடு வடிவமைக்கப்பட, கட்டப்பட, பராமரிக்கப்பட, அவர் காண்பித்த ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்காவது ஒரு அமைச்சராகத் தனது
பொறுப்பில் இருந்த துறைப் பணிகளில் அவர் காட்டி இருக்கலாம். அவருடைய பங்கு
அவருக்குத் தெரியும். |
|
5. கேள்வி: "அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்குப்
பின் விஜய் தான். இறைவனும் இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான்
இருப்பார்கள்" என்று சட்டசபையில் முதல்வர் விஜய் பேசி இருக்கிறாரே? பதில்: முதலாவது:
அரசியலில், முதல்வர் பொறுப்பில், சாதித்தவர்களின் வரிசையில் விஜய் வந்தால், அதை அரசியல் நோக்கர்கள் மற்றும் மக்கள் பரவலாக
உணர்வார்கள், அதைத் தாமாக வெளிப்படுத்துவார்கள். அதை
விஜய்யாக மார்தட்டிச் சொல்வதில், அதைக்
கேட்டு அவர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பெஞ்சைத் தட்டுவதில், அர்த்தமில்லை. இரண்டாவது: விஜய் ஏன் ராஜாஜியை, காமராஜரை, விட்டுவிட்டார்? காந்தி, நேரு, படேல், நேதாஜியையும் மறந்துவிட்டாரே! மூன்றாவது: விஜய் பக்கத்தில் என்றுமே நிற்கும் தண்டனையை அடைய, இறைவனும் இயற்கையும் செய்த கொடுங்குற்றம் என்ன? |
|
பகுதி 131 // 07.09.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment