|
1. கேள்வி: தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ், வைகோ,
சீமான், திருமாவளவன், விஜய் ஆகிய ஐவரின் கட்சிகள் கவனம் பெறுகின்றன. இந்த ஐவரைப் பற்றி?
பதில்: இந்த ஐவரும் தேச
நலனைப் பிரதானமாக வைத்து அரசியல் செய்யவில்லை. இவர்களின் அரசியல் சிந்தனையில் -
வேறு வேறு அம்சங்களில், வேறு வேறு அளவில் -
நேர்மை கணிசமாகக் குறைகிறது. இவர்கள் மாநிலத்தை ஆள்பவர்களாக வந்தாலும், செயலில் நேர்மை குறைந்தவர்களைத்தான் அமைச்சர்களாக ஈர்க்க முடியும் - இது
இந்தத் தலைவர்களுக்கும் தெரியும். (இன்றைய தேதியில் நேர்மைக் குறைவுடன் ஆட்சி
செய்து சுகிப்பதில் திமுக தான் கிங் என்பது வேறு விஷயம்)
|
|
|
2. கேள்வி: அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, "மு. க. ஸ்டாலின், ராஜராஜ சோழன் மாதிரி. உதயநிதி, ராஜ்ஜியத்தை விரிவு
படுத்தும் ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன் மாதிரி" என்று முதல்வரையும்
துணை முதல்வரையும் புகழ் பாடி இருக்கிறாரே?
பதில்: துரைமுருகன் இப்படி
நினைத்திருப்பார்: 'கருணாநிதி என்றால், மற்றவர் தனக்கு
ஐஸ் வைக்கும்போது கொஞ்சம் சூசகமாக வைத்தால் ரசிப்பார். ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும்
இதில் சூசகம் புரியாது. வெட்கமில்லாமல் இவர்கள் தலையில் நேரடியாகவே ஐஸ்
வைக்கிறேன். உதயநிதிக்குக் கொஞ்சம் அதிகம் வைத்தால், அது
ஸ்டாலினுக்கு டபுள் ஐஸ் வைத்த மாதிரி இருக்கும். இதன் பலன் என் பையன் வரை
கிடைக்கட்டும்!'
|
|
|
3. கேள்வி: முதல்வர்
ஸ்டாலின் சொல்கிறார்: "வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை
நடைமுறைப் படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள்தானே. பின்னர் ஏன் திமுக
எதிர்க்கவேண்டும் என்று கேட்கிறார்கள். ஒரு பணியாளரைத் தேர்தல் கமிஷன் தன்
பணிக்காக எடுத்த விநாடியில் இருந்தே அவர் தேர்தல் கமிஷனுக்குக் கட்டுப்பட்டு
செயல்படுவார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்." ஸ்டாலின்
சொல்வது சரிதானே?
பதில்: என்ன சொல்கிறார்
ஸ்டாலின்? வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது,
பாஜக பயன்பெறும் வகையில் மோசடி செய்யுமாறு தேர்தல் கமிஷன் அலுவலர்
உத்தரவிட்டால், தேர்தல் கமிஷன் வேலைக்காகச் சென்ற தமிழக
அரசுப் பணியாளர்கள் அந்த உத்தரவை அப்படியே செயல்படுத்தி விடுவார்களா? அதே பணியாளர்களைத் திமுக பயன்பெறும் வகையில் மோசடி செய்யுமாறு
முன்கூட்டியே யாராவது அறிவுறுத்தி இருந்தால் மட்டும் அந்தப் பணியாளர்கள் அதைச்
செய்ய மாட்டார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
|
|
|
4. கேள்வி: சமீபத்தில்
நடிகர் கமல் ஹாசன் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின், அவர் மனைவி, துணை
முதல்வர் உதயநிதி, அவர் மனைவி, ஆகியோர்
கமல் வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்த, கமலும்
வந்தவர்களுக்கு விசேஷ விருந்தளித்திருக்கிறார். இவர்களின் நெருக்கம் பற்றி?
பதில்: கமல் ஹாசன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்கட்டும்.
எந்த ஜாதி மனிதருக்கும், தான் பிறந்த
ஜாதியின் மீது பற்று வைத்து, தன் ஜாதி மக்களிடம் இயல்பாகப்
பரஸ்பர அபிமானம் கொள்ள முடிகிறது. இந்த அளவிற்கு இது நல்லது. இதன் மறுபக்கமாக,
ஒரு மனிதரின் ஜாதியை இகழ்கிறவர்களிடம் அவர் நல்லுறவு கொள்ள
முடியாது. ஆனால் இதில் கமல் வழி தனி வழி.
கமல் ஹாசன் செய்கிற மாதிரி, வேறு ஜாதியைச்
சார்ந்த எந்தப் பிரபலமும் ஒரு காரியத்தைச் செய்வாரா? அதாவது,
தனது ஜாதியை இளக்காரம் மற்றும் இகழ்வு செய்கிறவர்களுடன், அப்படிச் செய்த அமைப்பினருடன், அவர் கூடிக்
குலாவுவாரா? மாட்டார். கமல் ஹாசனுக்கும் திமுகவுக்கும்
இதில் ஒரு பொருத்தம் இருக்கிறது.
தான் வாழ்ந்த தமிழ்நாட்டின் தாய் மொழியை இகழ்ந்தவர் ஈ.வெ.ரா. அந்த
ஈ.வெ.ரா-வைத் திமுக கொண்டாடுகிறது. தான் பிறந்த ஜாதியை இளக்காரம் செய்த, இகழ்ந்த, அமைப்பின் அங்கமான திமுக-வை, அதன் தலைவர்களை, கமல் ஹாசன் அணைத்து மகிழ்கிறார்.
திமுகவுக்கும் விவஸ்தை இல்லை, கமல் ஹாசனுக்கும் விவஸ்தை
இல்லை!
|
|
No comments:
Post a Comment