Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (08.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: ரஜினி, கமல், விஜய் ஆகியோரின் அரசியல் முயற்சிகளை ஒப்பிடவும்.


பதில்:
அரசியல் ஆற்றின் ஆழம், ஆபத்துகள் தெரியாமல் கிட்ட வந்தவுடன் அவற்றை உணர்ந்து திரும்பியவர் ரஜினி.

 

ஆற்றங்கரையில் மட்டும் நின்று, உடம்பில் எண்ணை தேய்த்து பஸ்கி எடுப்பவர் கமல்.

 

ஆறே தனது வீட்டுக் கொல்லைபுரத்துக்கு வரட்டும் என்று பார்க்கிறவர் விஜய்.

 

 

2. கேள்வி: திராவிட அரசியலில் ஒருவர் கற்க வேண்டிய முதல் பாடம் என்ன?


பதில்: பெரியாரைத் துணைக் கொள்.

 

 

3. கேள்வி: லாட்டரியில் அதிர்ஷ்டம் என்பது குதிரைக் கொம்பு. ஆனாலும் ஏன் பல மக்கள் அங்கு போய் ஏமாறுகிறார்கள்?


பதில்:
லாட்டரியில் அதிர்ஷ்டம் எந்தப் பக்கம் இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியவில்லை. அது இருப்பது, டிக்கெட் அடித்து லாட்டரி பிசினஸ் செய்யும் பக்கம்.

 

 

4. கேள்வி: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும்  இல்லை என்கிறார்கள். அரசியலில் எதுதான் நிரந்தரம்?

 
பதில்:
சம்பாத்தியம்.

 

 

5. கேள்வி: "எந்தக் கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி" என்று திமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் மதிப்பிடுகிறாரே?


பதில்:
திமுக ஆட்சியைக் குறை சொல்லாதவர்களுக்கு ஸ்டாலின் வாஞ்சையுடன் தரும் பெயர், கொம்பன்.

 

 

6. கேள்வி: நாம் நிம்மதியின் உறைவிடமாக மாற வழி உண்டா?

 

பதில்: நமது வீட்டின் பெயரை நிம்மதி என்று மாற்றி, திருப்தி அடையலாம்.

 

 

7. கேள்வி: ஸ்டாலின் தன் அப்பாவிடம் அடங்கி இருந்து கடைசியில் கட்சிக்குள் அப்பாவின் இடத்தைப் பிடித்த மாதிரி அன்புமணி ராமதாஸ் ஏன் பொறுமை காக்கவில்லை?

 

பதில்: ஸ்டாலினுக்கு அப்பா ஓய்ந்தால் போதும். அதன் பிறகு, திமுக ஆட்சியில் அமர்ந்த கட்சி என்பதால்,  ஆட்சியே பிற்பாடு தன்னிடம் வரும் என்று ஸ்டாலினுக்குத் தெரியும்.  சமர்த்தாகப் பொறுத்தார். அன்புமணிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

 

இன்னொன்று. அப்பா திடமாக இருக்கும்போது அவரை மீறிய உள்கட்சி செல்வாக்கு ஸ்டாலினுக்கு இல்லை.  அத்தகைய செல்வாக்கு, அன்புமணிக்கு பாமக-வில் இருக்கிறது. அவரால் அப்பா இருக்கும்போதே துள்ள முடிகிறது, முயன்று பார்க்கிறார் - அகிலேஷ் யாதவ் மாதிரி.

 

 

8. கேள்வி: கொலம்பியா சென்று கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் எடைகளின் வித்தியாசம் பற்றிப் பேசிய ராகுல் காந்தி, அதுபோல் இந்திய மக்களிடம் என்ன பேசுவார்?

 

பதில்: "மூணு சக்கர சைக்கிளுக்கு ஏன் மூணு சக்கரம் இருக்கு, ரெண்டு சக்கர சைக்கிளுக்கு ஏன் ரெண்டு சக்கரம் இருக்கு தெரியுமா? நானே சொல்றேன். ரெண்டு சக்கர சைக்கிள்ள இருக்க வேண்டிய மூணாவது சக்கரத்தை சைக்கிள் கம்பெனிகளே திருடி, அதையும் வெச்சு புதுசா சைக்கிள் தயாரிச்சு, ஆக மொத்தம் எல்லா சைக்கிளையும் வெறும் ரெண்டு சக்கரத்தோட விக்கறாங்க. அதை மோடி அரசாங்கமும் கண்டுக்காம இருக்கு!"

 

பகுதி 1 // 08.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

No comments:

Post a Comment