Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (31.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: பசும்பொன்னில் வைகோ சீமானுடன் சேர்ந்து பேட்டியளித்தபோது, அவரைச் "செந்தமிழர் சீமான்" என்று வாழ்த்தி முழக்கம் செய்திருக்கிறாரே?


பதில்:
"பாரதத் தாயின் புதல்வர்" என்று சீமானைப் புகழ்வது சிக்கலானது, அதை சீமானும் விரும்ப மாட்டார், என்பது வைகோ முழக்கத்தின் உள்ளர்த்தம். "செந்தமிழர் வைகோ" என்று சீமானும் முழக்கம் செய்யலாம்.

 

 

 

2. கேள்வி: தமிழகத்தின் சாலைகள் மழையில் மிகவும் சேதமடைந்துள்ளன. மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி கவுன்சிலர், பகுதி இன்ஜினியர் என்று யாருமே ரோடு காண்டிராக்டர்களைக் கூப்பிட்டு "என்னய்யா ரோடு போட்டிருக்கீங்க?" என்று கேட்க முடியாதா?


பதில்: சம்பந்தம் இல்லாமல் ஒன்று சொல்கிறேன்.


உங்கள் பக்கத்து வீட்டு மனிதரிடம் நீங்கள் அடிக்கடி ஏணி, சுத்தியல், உப்பு, காப்பிப் பொடி, பால், எலுமிச்சம் பழம் என்று வாங்குகிறீர்கள். அவருடைய பையன் கன்னா பின்னாவென்று ராக்கெட் பட்டாசைக் கொளுத்தியதால், உங்கள்வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைகின்றன.

 
கண்ணாடி உடைந்ததைப் பற்றி நீங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் அதிருப்தி காட்ட மாட்டீர்கள். ஏன்? அவரிடம் நீங்கள் வாங்கு வாங்கென்று வாங்கியபடி இருந்தால், இதைப்பற்றி அவரிடம் கேட்க உங்களுக்கே கூச்சமாக இருக்கும்.

 

 

 

3. கேள்வி: "தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி என்மீது காட்டுகின்ற அன்பை நான் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் நெகிழ்ந்து பேசுகிறாரே?


பதில்:
சாதாரண அன்பா அது? தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் 1967 தேர்தலில் திமுக-விடம் தோற்ற பின் இன்றுவரை மாநிலத்தில் ஆட்சிக்கு வரவில்லை. பல காலம் திமுக-வைச் சார்ந்தும் தாங்கியும் வருகிறது தமிழக காங்கிரஸ்.

தன்னிடம் ஆட்சி இல்லாத வலியில் தமிழக காங்கிரஸ் எப்போதாவது கொஞ்சம் முனகுகிறது. அப்போது "என்ன சத்தம்?" என்று திமுக கேட்டால், "ஒண்ணும் இல்லை, கொசு கடிக்குது" என்று காங்கிரஸ் பதில் சொல்கிறது.

அத்தகைய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி. அந்த ராகுல் காந்தி, தங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது தன்னலமற்ற அன்பைப் பொழிகிறார். அதை ஏற்கும் ஸ்டாலின், தனது நெகிழ்ச்சியை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்? மனித மனம் உள்ளவர்தானே ஸ்டாலின்!

 

 

 

4. கேள்வி: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார்: "2014 லோக்சபா தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி உண்மை. ஆனால் 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் பாஜக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது." என்ன அர்த்தம்?

 
பதில்:
இந்தியத் தேர்தல் ஆணையத்தைப் பழிக்கிறார் ஜோதிமணி.

 
என்ன சொல்கிறார் அவர்? 'மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இருந்தபோது பெரிய ஊழல்கள் நடந்திருக்கலாம், ஆனால் தேர்தல் ஆணையம் அப்போது நேர்மையாகச் செயல்பட்டது. பாஜக தலைமையிலான மத்திய சர்க்காரில் ஊழல் இல்லை, ஆனால் தேர்தல் ஆணையம் முறைகேட்டை அனுமதிக்கிறது' என்கிறாரா ஜோதிமணி?

 
'ஊழல் ஆட்சியாளர்களுக்கு அஞ்சாமல் நேர்மையாகச் செயல்பட்ட தேர்தல் ஆணையம், நேர்மையான ஆட்சி நடக்கும் போது தனது நடு நிலைமையை இழந்து முறைகேடுகள் நடக்க வழி செய்தது' என்கிறாரா ஜோதிமணி? ராகுல் காந்தி மாதிரி இவரும் வெளி நாடுகளுக்குச் சென்று உயர் ரக உளறல் பேச்சுகள் பேசலாம்!

 

 

 

5. கேள்வி: குறைந்த சொற்களில் பதில் சொல்லவும். பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் எதில் அதிகம் வேறுபட்டவர்கள்?


பதில்:
தேசத்தை வணங்குவது, போற்றுவது, உயர்த்துவது. இருவரில் ஒருவர் மட்டும் இதைச் செய்கிறார்.

 

 

பகுதி 9 // 31.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment