|
கேள்வி-பதில்
|
|
|
1.
கேள்வி: பீஹார்
சட்டசபைத் தேர்தல் ரிசல்ட் குறித்துப் பேசும்போது,
"இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும்
கீழ்நிலைக்குச் சென்றுவிட்டது" என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லி
இருக்கிறாரே?
பதில்: 2021
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. 2024
லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகளையும் வென்றது. அப்போதெல்லாம் மத்தியில் ஆட்சி செய்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணி. திமுக-வின் அந்த வெற்றிகளாலும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கீழ்நிலைக்குச் சென்று கெட்டதா?
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்து,
மாநிலத்தில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்தால் மட்டுமே தேர்தல்
ஆணையத்தின் நம்பகத்தன்மை உயர்நிலைக்கு வரும் என்கிறாரா ஸ்டாலின்?
|
|
|
2. கேள்வி: நடந்து முடிந்த பீஹார் சட்டமன்றத்
தேர்தலில் தங்கள் கட்சி தோற்றதற்குக் காரணம் 'ஓட்டுத் திருட்டு' என்று காங்கிரஸ் பொதுச் செயலர்
கே. சி. வேணுகோபால் அறிவிக்கிறாரே?
பதில்: வாக்காளர்கள்
தங்களுக்கு ஓட்டளிக்காமல் போனால் அதைக் காங்கிரஸ் ஓட்டுத் திருட்டு என்கிறது.
காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் மாநிலங்களில் காங்கிரஸை விடப் பலமாக இருந்து, தேர்தல்களில்
காங்கிரஸ் கட்சிக்குச் சொற்பச் சீட்டுகள் மட்டும் தருகின்றன. மானம் போகும்
அந்தச் சீட்டுக் குறைப்பு பற்றிக் காங்கிரஸ் என்ன சொல்லும்? தங்கள் கட்சிக்கு அதிக சீட் ஒதுக்கப் படாததால், நடந்தது
'சீட்டுத் திருட்டு' என்று காங்கிரஸ்
சொல்லட்டும்!
|
|
|
3. கேள்வி: பீஹார்
தேர்தலில் காங்கிரஸ் பெரிய தோல்வி அடைந்த பின் ராகுல் காந்தி, "அரசியல் சட்டத்தையும்
ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம் எங்களுடையது" என்று சொல்லி
இருக்கிறாரே?
பதில்: சோனியா காந்தி குடும்பம் தலைமை தாங்கும் வரை காங்கிரஸ் தொடர்ந்து
தேர்தல் தோல்விகளைச் சந்தித்தால் போதும். அதுவே நம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்!
|
|
|
4. கேள்வி: பிரஷாந்த்
கிஷோர் கட்சி பீஹாரின் 238 சட்டமன்றத்
தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லையே?
பதில்: அவருடைய வியூகமும்
சற்று உதவ, 2014 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வென்றது, 2021 தமிழக
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி ஜெயித்தது. இந்த இரண்டு வெற்றிகளிலும்
அந்தக் கூட்டணிகள் நன்கு தயாரித்து வைக்கப் பட்ட பதார்த்தங்கள் மாதிரி இருந்தன.
அப்போது வந்த பிரஷாந்த் கிஷோர் அவற்றில் கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து ஒரு
கிண்டு கிண்டிப் பரிமாறுவது பற்றி ஆலோசனை சொல்லி இருப்பார். அதுவும் உதவியது.
ஆனால் கொத்தமல்லி கறிவேப்பிலை, கரண்டி மட்டும் பதார்த்தம்
ஆகாது. இந்த எதார்த்தம் அவருக்கு இப்போது புரிந்திருக்கும்.
|
|
|
5. கேள்வி: பீஹார்
தேர்தலில் வெறும் 6 சட்டமன்றத் தொகுதிகளில்
ஜெயித்த காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்தி சொல்லலாம்?
பதில்: ஆறு மனமே ஆறு! அந்த வாக்காளர் கட்டளை ஆறு!
|
|
|
பகுதி 15 // 16.11.2025
|
|
- ஆர். வி.
ஆர் –
Author: R. Veera Raghavan, Advocate,
Chennai
blog address: rvr-india.blogspot.com
email: veera.rvr@gmail.com
Username in Arattai: @veera_rvr
|
No comments:
Post a Comment