|
கேள்வி-பதில்
|
|
|
1. கேள்வி: சுங்குவார்சத்திரம் கூட்டத்தில் பேசிய
த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு
வந்தால் என்ன செய்யும் என்று சொல்ல வந்து, "எல்லாருக்கும்
நிரந்தரமான வீடு இருக்கணும், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு
மோட்டார்சைக்கிள் வாகனம் இருக்கணும், காரும்
லட்சியம்" என்று அறிவித்திருக்கிறாரே?
பதில்: இனி விஜய் நிகழ்ச்சிகளில் நெரிசலால் மக்கள் யாருக்காவது காயம், உயிரிழப்பு என்று ஏற்பட்டால் விஜய் மீது, அவர்
கட்சி நிர்வாகிகள் மீது, சட்ட நடவடிக்கை வரும். ஆகையால்
அந்த விஷயத்தில் அவர் தகுந்த முன்னேற்பாடுகள் செய்து எச்சரிக்கையாக
செயல்படுவார். ஆனால் அவர் மேடை ஏறி மைக் பிடித்தால், கவலை
இல்லாமல் ரீல் சுத்தலாம். சட்டம் ஒன்றும் செய்யாது.
|
|
|
2. கேள்வி: "வருங்காலத்தில் அதிமுக-வை பாஜக அழித்துவிடும். இதைப் புரிந்துகொள்வது
அதிமுக-வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நல்லது" என்று திருமாவளவன் பேசி
இருக்கிறாரே?
பதில்: தமிழகத்தில் பாஜக
வளர்கிறது. அது அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருப்பதால் திமுக பாதிக்கப்படும்
என்று ஸ்டாலின் நிச்சயம் நினைப்பார். திமுக-வை அண்டி இருக்கும் விசிக-வின்
தலைவர் திருமாவளவனும் அதை உணர்ந்து, தனது நலனுக்காக ஏதோ பேசி இருக்கிறார்.
திமுகவை எதிர்க்கும்
அதிமுக நசிவது பற்றித் திருமாவளவனா கவலைப் படுவார்?
|
|
|
3. கேள்வி: "நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு
வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி
பறிக்கப் படும். மக்களின் பிரச்சனைகள் கேட்கப்படாது, தீர்க்கப்படும்"
என்று சீமான் பேசி இருக்கிறாரே?
பதில்: சீமானிடம் நல்லெண்ணம் இல்லை. அசால்டாகப் புளுகுவார். அவரிடம்
நற்திறனும் இல்லை. நாவன்மை உண்டு. எப்போதும் சவடாலாகப் பேசும் அவர், செயல் என்று வரும்போது கையாலாகதவராக இருப்பார். அந்த நிலையிலும் அவர்
ஒன்று செய்வார். மேலும் பேசுவார்.
|
|
|
4. கேள்வி:
ராகுல் காந்தி என்ன செய்தால் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பிக்க முடியும்?
பதில்: அடுத்தடுத்து, சோனியா காந்தியும்
ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியைச் சுயநலம் மிகுந்த இரண்டாம் கட்டத்
தலைவர்கள் நிரம்பிய கட்சியாக்கி, அந்தச் சுயநலமிகள் சோனியா
காந்தி மற்றும் ராகுல் காந்தியை நோக்கி எப்போதும் கும்பிடு போட்டபடி இருக்குமாறு
செய்துவிட்டார்கள். அந்த இரண்டு சூப்பர் சுயநலமிகள் கட்சியில் இருக்கும் வரை
காங்கிரஸ் உயிர்த்தெழாது. இது மிக வருத்தமான உண்மை.
|
|
|
5. கேள்வி: "எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்." கல்வி பரவலாகக் கிடைத்தால் நம் ஜனநாயகம் தழைக்கும் அல்லவா?
பதில்: வள்ளுவர், ஔவையார்
காலத்தில் அதற்குக் கல்வி போதும். நாட்டு நிர்வாகத்தை அரசன் பார்த்துக்
கொண்டான். ஜனநாயகத்தில் நாம் படிப்பது தவிர, தேர்தலில்
சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடவும் வேண்டும். ஏட்டும் ஓட்டும் பொன்னெனத்
தகும்.
|
|
|
பகுதி 18 // 25.11.2025
|
|
- ஆர். வி.
ஆர் –
Author: R. Veera Raghavan, Advocate,
Chennai
blog address: rvr-india.blogspot.com
email: veera.rvr@gmail.com
Username in Arattai: @veera_rvr
|
No comments:
Post a Comment