Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (08.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "கார்த்திகை தீபமாக எறிய வேண்டியது காவி தீபமாக மாறிவிடக் கூடாது" என்று தமிழக அமைச்சர் கோவி. செழியன் கூறி இருக்கிறாரே?

பதில்:
தீபத்தில் காவி நிறத்தைப் பார்த்து அது பிடிக்காமல் பேசுகிறார் அமைச்சர். இனி காலையில் குடிக்கும் காப்பியிலும் காவி நிறத்தை சந்தேகித்துப் பதறுவார்கள் திமுக தலைவர்கள். தமிழகத்தில் பாஜக வளர்கிறது.

 

 

 

2. கேள்வி: உதயநிதியின் பிறந்த நாள் விழாவில் மேடையேறிய திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், "அறிவானவர்கள் எல்லாம் அழகாக இருப்பதில்லை. அழகானவர்கள் எல்லாம் அறிவாக இருப்பதில்லை. அழகும் அறிவும் சேர்ந்த ஒரு தலைவர் உதயநிதி. அவர் விண்மீன்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குபவர்" என்றெல்லாம் பேசி இருக்கிறாரே?


பதில்:
தமிழை வைத்து மலிவான அரசியல் செய்தவர் கருணாநிதி. அதோடு, தமிழ் கற்றவர்கள் பலர் அவரை, அவர் மகன் ஸ்டாலினை, பேரன் உதயநிதியை, வெட்கமில்லாமல் துதிபாடி அதனால் வளம் பெறுவதற்குப் பச்சைக் கொடி காட்டியவரும் அவர்.

 

எம்.பி ஜெகத்ரட்சகன் தமிழகத்தில் ஆர்ட்ஸ், இன்ஜினியரிங் மற்றும் மெடிகல் கல்லூரிகள் நடத்துகிறார். நமது மாநிலத்தில் கல்வியின் நோக்கமும் தரமும் எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்பதை அவர் பேச்சின் நோக்கமும் தரமும் சொல்லும்.

 

 

 

3. கேள்வி: "திருப்பரங்குன்ற மலை மீது வழக்கமாகக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வரும் இடத்தில் இந்த வருடமும் ஏற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் பிரச்சனை கிளப்பும் கூட்டத்தின் நோக்கமென்ன?" என்று முதல்வர் ஸ்டாலின் பொது மேடையிலிருந்து கேட்டிருக்கிறாரே?


பதில்:
மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப் படவேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற விடாமல் தமிழக போலீஸ் தடுத்த இரண்டு நாள் காட்சிகள் டிவி-யில் தெரிந்தன. போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரின் தற்போதைய பேச்சு, அவர் நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறது. நாடறிய ஹிந்துக்களின் ஒற்றுமைக்குத் தன்னாலானதை முதல்வர் செய்துவிட்டார். அதைப் புரிந்துகொண்டு ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.

 

 

 

4. கேள்வி: "மத்திய அரசு எப்படிப் பந்து வீசினாலும் சிக்சர் அடிப்போம்" என்று பேசி இருக்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?


பதில்:
மத்திய அரசு, பந்து வடிவில் இருக்கும் திருப்பதி லட்டுகளைத் தமிழக அரசிடம் தூக்கிக் கொடுக்கிறது. பார்வையில் கோளாறு, கையில் கட்டை சகிதம் இருக்கும் திமுக அரசு அதையும் அடித்துச் சிதற வைத்து, சிக்சர் அடித்ததாக அசட்டுப் பெருமை கொள்கிறது.

 

 

 

5. கேள்வி: "ஸ்டாலின் சிறந்த மனிதர்; ஆனால் அவர் ஆட்சி அப்படி இல்லை" என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு பேட்டியில் சொல்கிறார். என்ன அர்த்தம்?


பதில்:
நயினார் நாகேந்திரன் நல்லவர்; ஆனால் அவர் கருத்தின் முதல் பாதி சரியில்லை.

 

ஆட்சியில் இருக்கும் ஒரு முதல்வரைச் 'சிறந்த மனிதர்' என்று நாம் குறிப்பிட்டால், அந்த முதல்வர் ஆட்சியில் தப்புத் தண்டா செய்ய மாட்டார், தன் மந்திரி சபையில் அமைச்சர்களாக இருக்கும் தனது மகன் மற்றும் பிறரையும் தப்புத் தண்டா செய்ய அனுமதிக்க மாட்டார் என்று நாம் சொல்வதாக அர்த்தமாகும். முதல்வர் ஸ்டாலினை அப்படியாகக் கணிக்க மாட்டார் நயினார் நாகேந்திரன். ஆகையால் முதல்வர் ஸ்டாலினைச் சிறந்த மனிதர் என்று சொல்வது சரியான அர்த்தம் தராது. மற்றபடி, முதல்வர் ஸ்டாலினை ஒரு பாசம் பொங்கும் தந்தை, தாத்தா, சகோதரர் என்று சொல்வது முன்னூறு சதவிகிதம் சரியாக இருக்கும்.

 

 

பகுதி 23 // 08.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment