Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (19.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக சமத்துவ நடைப் பயணத்தைத் தொடங்கப் போகிறார் வைகோ. அதன் துவக்க நிகழ்ச்சிக்கு வருமாறு அவர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்திருக்கிறாரே?


பதில்:
போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டிய போலீஸ் துறை முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கிறது. வைகோ எதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போகிறார், தன்னை எதற்காகப் பார்க்க வருகிறார் என்று அறிந்து ஸ்டாலின் அவரைச் சந்திக்கிறார். ஒருவர் வெயிலை எதிர்த்துப் போராடுகிறேன் என்று அதன் துவக்க விழாவிற்குச் சூரியனை அழைத்தால், சூரியனும் அந்த அழைப்பைப் பெற்றுக்கொள்ள முன்வந்தால், யார் அரைப் பைத்தியம், யார் முழுப் பைத்தியம்?

 

 

 

2. கேள்வி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், "திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி" என்று பேசி இருக்கிறார். சரியா?


பதில்:
திமுக-வை அவர் விவரித்தது சரி. ஆனால் தவெக-வும் ஒரு மட்டையாகத் தான் தெரிகிறது. திமுக ஊறிய குட்டையில் தவெக புதிதாகத் தாவி விழுந்து ஊற ஆரம்பித்திருக்கிறது.

 

 

 

3. கேள்வி: ஓட்டுத் திருட்டை எதிர்ப்பதாக டில்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்திய போது பேசிய ராகுல் காந்தி, "உண்மை மற்றும் சத்தியத்தின் பக்கம் நின்று மத்தியில் ஆளும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் அரசை அகற்றுவோம்" என்று பேசியிருக்கிறார். எப்படி அதைச் செய்வார்?


பதில்:
'ஓட்டுத் திருட்டு' குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மை இல்லை. அதைச் சொல்லும் ராகுல் காந்தி இம்மியளவும் சத்தியவான் அல்ல. அவர் பேச்சின் மதிப்பு மட்டும் பெரிய அளவிலானது - பெரிய சைஸ் பூஜ்ஜியம்.

 

 

 

4. கேள்வி: "கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம். மதச் சார்பின்மை கொள்கையே எங்களுக்கு நிலையானது" என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?


பதில்:
அதிமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி, வெளியே சொல்லாவிட்டாலும் இப்படி நினைக்கலாம்: "எங்கள் கட்சிக்கும் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ஒப்பந்தம். சிறிது, பெரிது என்று எந்த வகை ஊழல் ஆனாலும், ஊழல் ஒழிப்புக் கொள்கை எங்களுக்கு நிலையானது."

 

 

 

5. கேள்வி: குரங்கிலிருந்து மனிதனை உருவாக்கிய இயற்கை, ஏன் பல குரங்குகளை இன்னும் அப்படியே வைத்திருக்கிறது?


பதில்:
உங்களிடம் உள்ள பணத்தில் ஒரு பகுதியை ஏதோ வழியில் முதலீடு செய்கிறீர்கள். அது தேறவில்லை, தப்பாகிவிட்டது என்றால் மீதிப் பணத்தை அப்படியே வைத்திருப்பீர்கள். இயற்கையும் அப்படியே.

 

 

பகுதி 27 // 19.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment