|
கேள்வி-பதில்
|
|
|
1. கேள்வி: திமுக-வின் இளைஞரணி 'அறிவுத் திருவிழா' என்று சமீபத்தில் ஒரு திருவிழா நடத்தியது. அது பற்றி உங்கள் கருத்து?
பதில்: அது இருக்கட்டும். அந்தக் கட்சியின் இளைஞரணி ஏதோ ஆர்வத்தில்
நடத்திய திருவிழா அது. வேறு ஒரு திருவிழாவை திமுக நடத்த முடியுமா என்பதுதான்
முக்கியக் கேள்வி. அதாவது, இன்றைய
தேதியில் திமுக 'கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு' திருவிழா நடத்தி, அந்த மூன்று பண்புகளுக்கும் அக் கட்சியின் தற்போதைய தலைவர்கள்
உதாரணமாகத் திகழ்கிறார்கள் என்று பெருமைப்பட முடியுமா?
|
|
|
2. கேள்வி: பீஹார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்
பற்றிக் கருத்து சொன்ன ப. சிதம்பரம்,
"துரதிர்ஷ்டமாக பீஹார் மக்கள் ஒரு வலுவான எதிரணி அமையும்
வகையில் வாக்களிக்கவில்லை" என்று சொல்லி இருக்கிறாரே?
பதில்: சிதம்பரத்தின்
கருத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கது.
சிதம்பரம் முதலில் சொல்ல வருவது இது. 'காங்கிரஸ்
உள்ளடக்கிய மஹாகத்பந்தன் கூட்டணி பீஹாரில் சற்றுப் பலமான எதிர்க் கட்சியாக
வந்திருந்தால் போதும், ஆளும் கூட்டணியாக வராமல் போனது ஓகே.
மற்றபடி ஓட்டுத் திருட்டு என்று பேச இடமில்லை.' இந்தக்
கருத்தை ராகுல் காந்தி கவனிக்கட்டும்.
இன்னொன்று. இந்திரா காந்தி மறைவை அடுத்து 1984-ல் லோக் சபா தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில், மொத்தமுள்ள
541 லோக் சபா எம்.பி-க்களில் ராஜீவ் காந்தி தலைமையிலான
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 414 எம்.பி-க்கள் கிடைத்தனர்.
அப்போது ப. சிதம்பரமும் ஒரு லோக் சபா எம்.பி ஆனார். காங்கிரஸ் கட்சிக்கு லோக்
சபாவில் அப்படி ஒரு ராட்சஸ பலம் அளித்து எதிரணியை வலுவிழக்க வைத்த மக்களைச்
சிதம்பரம் ஏன் அன்று நொந்து கொள்ளவில்லை?
|
|
|
3. கேள்வி: டெல்லி
செங்கோட்டை அருகே வெடித்த கார் வெடிகுண்டு 15 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. இந்த வழக்கில் சில முஸ்லிம்கள்
கைதாகி இருக்கிறார்கள், சிலர் விசாரிக்கப் படுகிறார்கள்.
இது பற்றிப் பேசிய பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, "காஷ்மீர் பிரச்சனைகள் செங்கோட்டையின் முன் வெளிப்படுத்தப்
பட்டிருக்கின்றன" என்றும் "தாக்குதல் செய்தவர்கள் தண்டனை பெறட்டும்.
ஆனால் அப்பாவிகளைத் துன்புறுத்த வேண்டாம்" என்றும் சொல்லி இருக்கிறாரே?
பதில்: பாவம். பிறந்ததிலிருந்து மெஹபூபா முப்தி அணிந்து மகிழ்ந்த 'அரசியல் சட்டத்தின் ஆர்டிகிள் 370' என்ற தங்க நகை
மாயமான பின், கிடைக்கிற சீப்பான கவரிங் நகைகளை மாட்டிக்
கொண்டு திருப்தி அடைகிறார்.
|
|
|
4. கேள்வி: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
என்றால் என்ன அர்த்தம்?
பதில்: சுற்றத்தில்
இல்லாததைப் பற்றி நமக்கென்ன பேச்சு? ஒரு காலத்தில் 'மைல்'
இருந்தது. இன்று அதற்கு மாற்றாக இருப்பது, 'கிலோமீட்டர்'.
இப்போது நாம் கிலோமீட்டர் கணக்கில்தான் பேசவேண்டும். அது மாதிரி,
இன்று நம்மை எதிர்நோக்கி இருப்பது கமிஷன், கையூட்டு,
கப்பம்.
|
|
|
5. கேள்வி: ரஜினி
நடிக்கும் புதிய சினிமாவைத் தயாரிக்கவிருக்கும் கமல் ஹாசனிடம் அது பற்றி ஒரு
நிருபர் கேட்டபோது, "எதிர்பாராததை
எதிர்பாருங்கள்" என்று கமல் குழப்பமாகப் பதில் அளித்திருக்கிறாரே?
பதில்: இது எதிர்பார்த்ததுதான்!
|
|
|
பகுதி 16 // 19.11.2025
|
|
- ஆர். வி.
ஆர் –
Author: R. Veera Raghavan, Advocate,
Chennai
blog address: rvr-india.blogspot.com
email: veera.rvr@gmail.com
Username in Arattai: @veera_rvr
|
No comments:
Post a Comment