Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (24.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? அவர் நல்ல அரசியல் தலைவராக வருவாரா?


பதில்:
விஜய்யைப் பார்க்க வரும் கூட்டம் அனைத்தும் அவருக்கான ஓட்டாக மாறுமா என்பதை இப்போது கணிக்க முடியாது. எம்.ஜி. ஆருக்கும் என்.டி. ஆருக்கும் மாறியது. நடிகர் சிரஞ்சீவிக்கு மாறவில்லை. விஜய்க்கு எப்படி நடக்கிறது என்று பார்க்க வேண்டும். விஜய் நல்ல அரசியல் தலைவராக - நாட்டு நலனைப் பிரதானமாக நினைப்பவராக - வருவதற்கு அறிகுறிகள் இல்லை.

 

இருக்கின்ற தலைவர்களில் இருந்துதான் மக்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய முடியும். இருக்கிற மக்களின் ஒட்டுகளைப் பெற்றுத் தான் ஒரு அரசியல் கட்சி தேர்தலில் ஜெயிக்க முடியும். ஒரு தரப்பு மற்ற தரப்பைக் குற்றம் சொல்வது மட்டும் பயன் தராது. ஒரு தரப்பின் குறைகளை இன்னொரு தரப்பு ஓட்டுகள் மூலமாகவும், தலைமைப் பண்புகள் மூலமாகவும், சரி செய்ய வேண்டும். அப்படித்தான் ஜனநாயகம் பிழைக்கலாம், தழைக்கலாம்.

 

 

2. கேள்வி: திமுக கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை எப்படிச் செயல்படுத்துகிறது?


பதில்: கடமைக்காக பகுத்தறிவுப் பேச்சு; கண்ணியத்திற்காக 'தமிழ் வாழ்க' கோஷம்; கட்டுப்பாடுடன் அதிகம் வெளிப்படுத்தாமல் இருப்பது, அரசியல் நாகரிகம்.

 

 

3. கேள்வி: ப. சிதம்பரம் புத்திசாலி வக்கீலா, புத்திசாலி அரசியல்வாதியா?


பதில்:
சிதம்பரம் வக்கீல் தொழிலில் உச்சம் தொட்டவர். காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு இடத்தை கெட்டியாகப் பிடித்து வைத்திருப்பவர். இரண்டிற்கும் தேவையான வேறு வேறு புத்திசாலித்தனம் அவரிடம் உண்டு.

 

 

4. கேள்வி: முன்பு சந்திரபாபு நாயுடு மோடியைத் தீவிரமாக எதிர்த்தவர். இன்று அவர் கட்சி பாஜகவுடன் சேர்ந்து ஆந்திராவில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. அதைப் போல் திமுக-வும் பாஜக-வும் நெருங்கி வந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி செய்ய முடியுமா?

 
பதில்:
வாய்ப்பே இல்லை. காரணம்: திமுக, தேசியத்திலிருந்து தமிழகத்தை விலக்கித் தனிமைப் படுத்துகிறது. ஓட்டுக்காக சிறுபான்மையினரிடம் பல்லிளித்து ஹிந்து உணர்வுகளைக் காயப் படுத்துகிறது. காலத்துக்கு ஒவ்வாத ஹிந்தி எதிர்ப்பைக் காண்பிக்கிறது. இதுபோக, அமலாக்கத் துறைக்கு நிறைய வேலைகள் தரும் போலிருக்கிறது.

 

 

5. கேள்வி: "கல்லைக் கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக நினைக்க மறந்து விட்டான்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லி இருக்கிறாரே?


பதில்:
கற்களால் ஆன கருணாநிதி சமாதியின் மேல் ஶ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தை வரைய வைத்து அமைச்சர் சேகர் பாபு வணங்கியது, அந்தச் சமாதியின் முன்னால் எ. வ. வேலு சப்ளாக் கட்டை தட்டிப் பஜனை பாடியது, சமாதியில் கட்சியினர் தயிர் வடைகளைப் படைத்தது, ஆகிய செயல்களை அன்பில் மகேஷ் ஏன்தான் கிண்டல் செய்கிறாரோ!

 

 

பகுதி 6 // 24.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment