Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (28.11.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: த.வெ.க-வின் "கொள்கை எதிரி, பாஜக. அரசியல் எதிரி, திமுக" என்று விஜய் அடிக்கடி சொல்கிறார். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?


பதில்:
மு. க. ஸ்டாலின் மாதிரி ஆட்சியில் அமர்ந்து கோலோச்ச, த.வெ.க தலைவருக்கு ஆசை. அது நடந்தேற, அவர் முதலில் திமுக-வை ஓரம் கட்ட வேண்டும். ஆகையால் திமுக, அரசியல் எதிரி.

 

பதினோரு ஆண்டுகளாக பாஜக நேர் வழியில் மத்திய அரசைச் சிறப்பாக வழி நடத்துகிறது. தமிழகத்திலும் படிப்படியாக வளர்கிறது. அத்தகைய பாஜக-வை எதிர்ப்பதென்றால், மக்கள் நம்புகிற வகையில் என்ன சொல்லி எதிர்ப்பது என்று விஜய்க்குப் புரியவில்லை. ஆகையால் 'கொள்கை எதிரி' என்று யாருக்கும் புரியாத ஒரு பெயரை பாஜக-வுக்கு அளித்து அவர் திருப்தி அடைகிறார்.

 

 

 

2. கேள்வி: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக-விலிருந்து நீக்கப் பட்ட செங்கோட்டையன், த.வெ.க-வில் சேர்ந்திருக்கிறார். இதன் விளைவு என்னவாக இருக்கும்?


பதில்:
பல தரப்பு மக்களைத் தானாக ஈர்க்கும் ஒரு அரசியல் தலைவருக்குப் போட்டியாக, அவருடைய கட்சிக்குள் எவரும் உருவாக மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி அப்படியான தலைவர் அல்ல. அவருக்குப் போட்டியாக, அவர் ஏற்காத சில அரசியல் பார்வைகளோடு, செங்கோட்டையன் அதிமுக-வுக்குள் வளர்ந்தார். செங்கோட்டையனைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதால் பழனிசாமி தனிப்பட்ட முறையில் தற்சமயம் பாதுகாப்பாக உணரலாம். ஆனால் அதிமுக பலவீனம் அடைகிறது.

 

த.வெ.க-வில் சேர்ந்த செங்கோட்டையன், அரசியல் ரீதியாக விஜய் என்ன பேசினாலும், என்ன முடிவெடுத்தாலும், அதை ஏற்று அமைதியாக இருக்கவேண்டும். அதில் அவருக்குப் பிரச்சனை இருக்காது. இப்போதைக்கு விஜய் கட்சியில் செங்கோட்டையனும் பாதுகாப்பாக உணரலாம்.

 

 

 

3. கேள்வி: த.வெ.க-வில் இணைந்த பிறகு பேட்டியளித்த செங்கோட்டையன், "திமுக, அதிமுக என்பது வேறு வேறு அல்ல. இரண்டு கட்சியினரும் ஒன்றாக இணைந்து பயணம் செய்கின்றனர்" என்று சொல்லி இருக்கிறாரே?


பதில்:
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் சக்திக்கு ஏற்ப நேர்மையற்ற ஆட்சியைக் கொடுப்பார்கள். அந்த அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால், அவை இரண்டும் வேறானவை அல்ல என்று செங்கோட்டையன் சொல்வது சரி. செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்தபோதும் அப்படித்தான் இருந்தது. மற்றபடி, செங்கோட்டையன் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஒரு இரண்டாம் கட்டத் தலைவராக, அதிகம் பொதுவில் அரசியல் பேசி மாட்டிக் கொள்ளாத தலைவராக இருக்க வேண்டும்.

 

 

 

4. கேள்வி: உதயநிதியின் 48-வயது பிறந்த நாளன்று அவரை வாழ்த்திய ஸ்டாலின் "நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!" என்று சொல்லி இருக்கிறார். ஸ்டாலினையும் உதயநிதியையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


பதில்:
உதயநிதியின் மீது, ஒரு தந்தையாக ஸ்டாலின் பொழியும் பாசம் கட்டுக்கடங்காதது. தந்தை ஸ்டாலினின் மனதறிந்து, தலைவர் ஸ்டாலினும் உதயநிதியைப் பற்றிப் பெருமை கொள்கிறார். அது புரிந்த திமுக-வினர், தந்தையை விட மகனை அதிகம் போற்றுகிறார்கள். அதுவும் தந்தையை மகிழ்விக்கிறது.

 

 

 

5. கேள்வி: சமஸ்கிருதத்தைச் 'செத்த மொழி' என்று குறிப்பிட்டுப் பேசி இருக்கிறாரே துணை முதல்வர் உதயநிதி?


பதில்:
ஒரு மனிதர் இன்னொருவர் மீது தாங்கமுடியாத வெறுப்பு கொண்டால், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த நபரிடம் "செத்துப் போ" என்று கூடச் சொல்வதுண்டு. சமஸ்கிருதத்தின் மீது அத்தகைய வெறுப்பை வைத்திருக்கும் உதயநிதி, அந்த மொழி மரித்ததாகவே பேசித் தன் வெறுப்பைத் தணிக்கிறார்.

 

 

பகுதி 19 // 28.11.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment