Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (03.11.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: தமிழக அமைச்சர் கே. என். நேருவின் பொறுப்பில் உள்ள அரசுத் துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் மொத்தம் 888 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டிருக்கிறது என்று அமலாக்கத் துறை தெரிவிக்கிறதே?


பதில்:
முதல் அமைச்சரின் கீழ் மாநில அமைச்சர்கள் வேலை செய்கிறார்கள். மற்றபடி நமக்கென்ன தெரியும்?


எப்போதும் போல், மேலே உள்ளவன் அனைத்தையும் அறிவான், எல்லாம் அவன் செயல் என்ற சிந்தனை நமக்கு வேண்டும். அது அர்த்தமுள்ளது.

 

 

 

2. கேள்வி: பாஜக-வுக்கு எதிராக ராகுல் காந்தி பிரசாரம் செய்யும் 'ஓட்டுத் திருட்டு' என்றால் என்ன?


பதில்: ராகுல் காந்தி பேச்சின் அர்த்தம் இது: 'பாஜக கூட்டணி ஜெயிக்கும் தொகுதிகளில் நடப்பது ஓட்டுத் திருட்டு. காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும் தொகுதிகளில் நிகழ்வது மக்கள் தீர்ப்பு.'


பாஜக கூட்டணிக்கு ஒருவர் விரும்பி அளிக்கும் ஓட்டை ராகுல் காந்தி "ஓட்டுத் திருட்டு" என்று விவரித்தால், அந்த வாக்காளரின் நேர்மையை ராகுல் கேவலப்படுத்துவதாக ஆகும். பின் அந்த வாக்காளரின் ஓட்டை ராகுல் எப்படி ஈர்க்க முடியும்? சரி சரி - இந்த சிம்பிள் விஷயம் புரிந்தால் அவர் ராகுல் காந்தி அல்ல!

 

 

 

3. கேள்வி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிப் பேசிய கமல் ஹாசன், "தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை, வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது" என்று சொல்லி இருக்கிறாரே?


பதில்:
திமுக-வின் செவிகளுக்கு இனிதாகக் கமல் சொல்ல வருவது இது: "திமுக என் மீது நம்பிக்கை வைக்கிறது. நான் திமுக-வுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன்". கமல் பேச்சில் நமக்கு ஒன்றுமில்லை.

 

 

 

4. கேள்வி: "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை 2026 தேர்தலுக்குப் பின் நடத்த வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டிருக்கிறாரே?

 
பதில்:
ஸ்டாலின் அறிக்கையை நாம் இப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்: '2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்தால், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது கடினம். மாறாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது கூட்டணியை வெற்றி பெற வைத்தபின் தமிழக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்யப் பட்டால் அது ஓகே - ஏனென்றால் அப்போது திமுக-வின் ஐந்தாண்டு ஆட்சி நிச்சயம் ஆகியிருக்கும்.'

 
இன்னொன்று. தமிழக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் இப்போது நடந்து முடிகிறது, அதன் பின் 2026-ல் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது, அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது திமுக இப்படிப் பேசும்: "வாக்காளர் பட்டியலில் தவறான திருத்தங்கள் செய்து மக்களின் உண்மையான தீர்ப்பைப் பாஜக-வும் தேர்தல் ஆணையமும் ஒன்றுகூடி மறைத்து விட்டன." மாறாக, திமுக கூட்டணி அந்தத் தேர்தலில் ஜெயித்தால் திமுக இப்படிச் சொல்லும்: "பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் சதியை திமுக-வும் மக்களும் இணைந்து முறியடித்து விட்டோம்." எந்த நிலையிலும் ஏமாற்றுப் பேச்சு திமுக-விடம் உண்டு!

 

 

 

5. கேள்வி: பகுத்தறிவு என்றால் என்ன?


பதில்:
நான், எனது, எனக்கு என்ற எண்ணத்துடன் மனிதர்கள் முன்னேற உதவுவது, பகுத்தறிவு. மனித இனம் அழிவதற்குச் சாத்தியமான ஒரு பாதையும் இது. எந்த விலங்கிற்கும் தனது இனத்தை மொத்தமாக அழிக்கும் ஆற்றல் இல்லை. அது பகுத்தறிவுடன் கூடிய ஆற்றல்.

 

 

பகுதி 10 // 03.11.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment