Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (13.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட ஜஸ்டிஸ் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு, பக்தர்கள் எந்த விதமாகத் தங்கள் நன்றியை வெளிப்படுத்தலாம்?


பதில்:
பொதுமக்கள் அவரை 'தீபம் சுவாமிநாதன்' என்று அபிமானத்துடன் குறிப்பிடலாம்.

 

 

 

2. கேள்வி: புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது முதல்வர் ஸ்டாலின், "உங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்" என்று சொல்கிறார். இந்தக் காலத்தில் அவர் வார்த்தை எடுபடுமா?


பதில்:
முதலில், ஸ்டாலினுக்குத் தமிழார்வம் பெரிதாக இல்லை. பேருக்காகப் புதுமணத் தம்பதிகளிடம் இப்படிச் சொல்கிறார்!

 

தனது அரசுக்கு ஸ்டாலின் வைத்திருக்கும் பெயர், 'திராவிட மாடல்' அரசு. இதில் 'திராவிட' என்பது சமஸ்கிருதச் சொல். 'மாடல்', ஆங்கில வார்த்தை. இந்தப் பெயரில் தமிழ் இல்லவே இல்லை. இருந்தாலும் திராவிட மாடல் என்றிருப்பது நல்லது - கேடுகள் செய்து ஒரு தமிழக அரசு அவப்பெயர் வாங்குமென்றால், அதைத் தமிழில் வாங்க வேண்டாம்!

 

 

 

3. கேள்வி: மதச் சார்பின்மை என்றால் இந்தியாவில் என்ன அர்த்தம்?

பதில்:
ஜனநாயகம் என்பதற்கு, நம் நாட்டின் முக்கிய எதிர்க் கட்சிகளின் தலைமைகள் இரண்டு அர்த்தங்கள் வைத்துள்ளன. தமது கட்சி என்று வரும்போது, அது தமது குடும்பத்தின் பிடியில் இருக்க வேண்டும். நாடு என்றால், ஆட்சிக்கு வரும் சமவாய்ப்பு எல்லாக் கட்சிகளுக்கும் இருக்க வேண்டும்.

 

இதைப் போல, மதச்சார்பின்மைக்கும் நமது எதிர்க் கட்சிகள் இரண்டு அர்த்தங்கள் வைத்துள்ளன.

 

சிறுபான்மை மதங்கள் என்றால், அவற்றின் மதச் சுதந்திரத்தை முழுமனதுடன் போற்றுவது, அதன் மக்களை இன்முகத்துடன் அரவணைப்பது மதச்சார்பின்மை. ஹிந்து மதம் என்றால், அதன் மதச் சுதந்திரத்தை அரைமனதுடன் ஏற்பது, அதன் மக்களிடம் பாராமுகமாக இருப்பது மதச்சார்பின்மை.

 

 

 

4. கேள்வி: 'ஓட்டுத் திருட்டை' எதிர்த்து காங்கிரஸ் கட்சி டில்லியில் டிசம்பர் 14ம் தேதி போராட்டம் நடத்தப் போகிறதாமே?


பதில்:
ராகுல் காந்தி, தனது குடும்ப ஆதிக்கத்தின் கீழ் காங்கிரஸ் இதுவரை அடைந்த தேர்தல் தோல்விகள், இனி பெறப் போகும் தேர்தல் தோல்விகள், இரண்டையும் எளிதாக ஒரே சமயத்தில் பூசி மெழுக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறார். காங்கிரஸ் கட்சியையே அவர் குடும்பம் மொத்தமாகத் திருடி அனுபவிக்கிறது. அதை எதிர்த்துக் கட்சிக்குள் ஒரு போராட்டமும் இல்லை.

 

 

 

5. கேள்வி: மற்ற மிருகங்களின் பெயரில் 'மிருகம்' என்ற சொல் சேர்க்கப் படவில்லை; ஆனால் காண்டாமிருகத்தின் பெயரில் மட்டும் அந்தச் சொல் இருக்கிறது. அது ஏன்?


பதில்:
கண்ட மிருகத்தின் பெயரிலும் 'மிருகம்' என்ற சொல்லைச் சேர்க்க வேண்டாம், காண்டாமிருகத்திற்கு மட்டும் இருக்கட்டும் என்று யோசித்தார்களோ என்னவோ!

 

 

பகுதி 25 // 13.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

No comments:

Post a Comment