Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (10.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: பாஜக தலைவர் வேலூர் இப்ராஹிம் ஒரு ஹிந்துக் கோவில் சுவாமி முன் நின்று "முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கிடைத்து, அவர் ஹிந்து மக்களுக்கு விரோதமாகச் செயல்படாமல், எல்லா மக்களையும் சமமாகப் பார்க்க வேண்டும்" என்று வேண்டிக் கொள்ளும் வீடியோ பரவுகிறது. அவர் வேண்டுதல் நிறைவேறுமா?

பதில்:
நிறைவேறாது.

 

ஒரு அரசியல் தலைவர் ஹிந்துக்களுக்கு எதிராக மிகுந்த பாரபட்சம் காண்பித்தால், ஹிந்துக்கள் அவர் கட்சிக்கு, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, எதிராக ஒன்றுபட்டு அந்தக் கட்சிகள் தேர்தலில் மண்ணைக் கவ்வுமாறு ஓட்டளிப்பார்களா என்று ஹிந்துக் கடவுள் பரீட்சை வைப்பார். இந்த எளிய பரீட்சையில் பாஸ் ஆகும் அளவுகூட ஹிந்துக்கள் தங்கள் கடமையை உணரவில்லை என்றால், பரீட்சை வைக்கும் ஆசிரியர் சோப்ளாங்கி மாணாக்கர்களுக்கு எப்படி உதவுவார்?

 

 

 

2. கேள்வி: பஞ்சாபில் 500 கோடி ரூபாய் கொடுப்பவர்களே முதல்வர் ஆகின்றனர் என, அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் கூறி இருக்கிறார். தவிர, "இது எல்லாக் கட்சிகளிலும் நடக்கிறது. ஆனால் எந்தக் கட்சிக்கும் கொடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை" என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமா?


பதில்:
இவர் என்ன சொல்ல வருகிறார்? 'பஞ்சாபில் ஒருவர் முதல்வர் ஆவதற்கு 500 கோடிகள் கொடுக்கவேண்டி இருப்பது மகா கேவலம். அவ்வாறு முதல்வராக வருபவரின் அரசில் ஊழல் பெருகி மக்களை வதைக்கும்' என்று உயர்ந்த பொதுநலத்தில் இவர் பேசுகிறாரா? அல்லது, '500 கோடி இல்லாததால் என் கணவர் முதல்வராகி நாங்கள் பெரிய செல்வந்தராக முடியவில்லை' என்று வருத்தப்பட்டு அழுகிறாரா? காங்கிரஸ்காரரான இவர் எண்ணத்தை நாம் ஒரு நொடியில் சரியாக ஊகிக்கலாம்.

 

 

 

3. கேள்வி: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டவர், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன். அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான பாராளுமன்றத் தீர்மானத்தின் அறிவிப்பை இண்டி கூட்டணி எம்.பி-க்கள் பலர் திமுக எம்.பி-க்கள் தலைமையில் மக்களவை சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறார்கள். என்ன ஆகலாம்?


பதில்:
ஒரு சுப்ரீம் கோர்ட் அல்லது ஹை கோர்ட் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை இது. தகுந்த காரணம் எதுவும் இல்லாமல் வந்த இந்தத் தீர்மான அறிவிப்பை சபாநாயகர் நிராகரித்து இதன் பின்னணியில் உள்ள மிரட்டலுக்கு இந்த நிலையிலேயே அவர் முடிவு கட்டலாம். இது போக, இப்படியான தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்குப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இண்டி கூட்டணிக்கு எம்.பி-க்கள் எண்ணிக்கை இல்லை.

 

இன்னொன்று: அந்த நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால், தீர்ப்பளிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதும் பதவி நீக்க நடவடிக்கையைத் திமுக உந்துதலில் இண்டி கூட்டணி முட்டாள்தனமாக முன்னெடுக்குமா?

 

சின்னக் குழந்தையை மகிழ்விக்கச் சில பெரியவர்கள் நாய் மாதிரி குலைத்துக் காட்டுவார்கள். பார்ப்பவர்களுக்கும் சிரிப்பு வரும். சிறுபான்மையினரை மகிழ்விக்கும் எண்ணத்தில் இண்டி கூட்டணியினர் காட்டும் வேடிக்கை இது. நாம் சிரிக்கலாம்.

 

 

 

4. கேள்வி: "CBI, அமலாக்கத் துறை, பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து அரசின் அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது" என்று லோக் சாபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். உங்கள் கருத்து என்ன?

பதில்:
மத்தியில் நேரு ஆட்சி தொடங்கி மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி வரை, நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் வளர்ச்சியைக் காங்கிரஸ் கவனமாகக் கட்டுக்குள் வைத்திருந்ததா? பாஜக கூட்டணி ஆளும் கடந்த 11 வருடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் அசுர வளர்ச்சி பெற்று நாட்டின் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றி விட்டதா? பின்னர் தமிழகத்தில் மட்டும் ஸ்டாலின் எப்படித் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறார்?

 

கூச்சமில்லாமல் பொய்யும் பிதற்றலும் பேசியபடி அடுத்த பிரதமராக ஆசைப்படுகிறார் ராகுல் காந்தி. அவர் கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்க வாக்காளர்கள் மத்தியில் யார் பிரசார சேவை செய்திருந்தாலும் அவர்களுக்கு ஜே!

 

 

 

5. கேள்வி: ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதியிடம் கற்ற பாடம் எது? தமிழா, உழைப்பா, கட்சி நிர்வாகமா?


பதில்:
எல்லையற்ற குடும்பப் பற்று.

 

 

பகுதி 24 // 10.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment