Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (25.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "திமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாகப் பேசி இருக்கிறாரே?


பதில்:
கூட்டணியில் தன் கட்சிக்கு அதிக சட்டமன்றத் தொகுதிகள் கிடைக்க அதன் தலைவர் எதிர்பார்ப்பு, வேண்டுகோள், கோரிக்கை, மிரட்டல் என்று தலைமைக் கட்சியை நோக்கி நான்கு வழிகளில் நகரலாம் (சாம, தான, பேத, தண்டம் மாதிரி). அந்த வழிகளை அவர் அதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாகப் பின்பற்ற அவசியமில்லை. முதல் வழியான எதிர்பார்ப்பில் சிறிது தூரம் சென்றதில் திருமாவளவனுக்குப் பலன் தெரியவில்லை. திடீர் டர்ன் அடித்து நான்காவது வழியான மிரட்டலில் செல்கிறார். பின்னர் வேண்டுகோள் அல்லது கோரிக்கையைத் தனிமையில் முன்வைப்பது நல்ல யுக்தி என்று அவர் நினைக்கலாம்.

 

 

 

2. கேள்வி: ஒரு குடும்பத்தின் கையில் கட்சி, முறைகேடுகள் நிறைந்த ஆட்சி, அமோகச் செழிப்பில் அமைச்சர்கள், பல்லிளிக்கும் சட்டம் ஒழுங்கு. இவை திமுக-வை விட்டுப் பிரியவே பிரியாதா?


பதில்:
பிரியாது. இவை அனைத்திற்கும் ஒரே காரணம், திமுக தலைமையின் சிந்தனையில் ஒன்று மட்டும் துளியும் இல்லை - தேச நலன்.

 

 

 

3. கேள்வி: "இந்தியாவில் சிறுபான்மையினர் அச்ச உணர்வோடு வாழ்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் பேசி இருக்கிறாரே?


பதில்:
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கோர்ட் உத்தரவு இருந்தும் ஹிந்துக்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தமிழக போலீஸ் தடுத்தது. ஆனாலும் அங்கு ஹிந்துக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. அதே மலை மீது முஸ்லிம்கள் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காகப் போலீஸ் துணையுடன் கொடியேற்றம் செய்தபோதும் ஹிந்துக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை செய்யவில்லை. தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு அச்சமும் இல்லை.

 

சிறுபான்மை மக்கள் அச்சமில்லாமல் வாழ்ந்தால் ஸ்டாலினுக்கு அச்ச உணர்வு வருகிறது. பெரும்பான்மை ஹிந்துக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை நிலைநாட்ட ஒன்றுபட்டால் அப்போதும் ஸ்டாலினுக்கு அச்ச உணர்வு வருகிறது. அவரது சுயநல அச்சம் நாட்டுக்கு அச்சா, பஹுத் அச்சா!

 

 

 

4. கேள்வி: "கமல் ஹாசனை நடிகனாக மட்டும் சுருக்கிவிட முடியாது. கமல் உழைப்பை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறாரே?

பதில்: கமல் ஹாசன் புதுக் கட்சி ஆரம்பித்த பின் இரண்டு தேர்தல்களில் (2019 லோக் சபா தேர்தல், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்) திமுக-வை எதிர்த்தும் அவர் கட்சி போட்டியிட்டது. ஆனால் எங்கும் ஒரு சீட்கூட அவர் கட்சி ஜெயிக்கவில்லை. பிறகு திமுக-விடம் பவ்யமாக இருந்து வருகிறார்.

 

'இன்றைய கமல் நடிப்பில் மட்டும் பாடமல்ல; அரசியலில் திமுக-வை எதிர்த்து ஒரு நடிகர் எப்படி உழைத்தாலும் அவருக்கு என்ன நேரும் என்பதற்குக் கமலின் அத்தகைய உழைப்பும் அதன் முடிவும் ஒரு பாடம்' என்ற பொருளில் அன்பில் மகேஷ் இன்னொரு நடிகரை எச்சரித்து மகிழ்கிறார். மற்றவர்களுக்கு இதில் ஒன்றுமில்லை.

 

 

 

5. கேள்வி: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 அடி உயரம் வளர்ந்த கஞ்சா செடி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதே?

 

பதில்: காவல்துறைக்கு ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி வைத்தியம். குணமடையப் பிரார்த்திப்போம்.

 

 

பகுதி 30 // 25.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment