Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (30.11.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "பள்ளி மாணவர்களின் அப்பாக்கள் டாஸ்மாக்கே கதி என்று கிடக்கிறார்கள். அந்த அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி முன்னேற்றுவார்கள்?" என்று துணை முதல்வர் உதயநிதியின் முன்பாக சிவகங்கை மாணவி யோகேஸ்வரி மேடையில் பேசி இருக்கிறாரே?


பதில்:
டாஸ்மாக் தமிழகத்தில், எவரும் கண்டுபிடிக்க முடியாத கஷ்ட நஷ்டங்கள் பட்டு உழைத்துத் தன் பிள்ளை இன்பநிதியை வாழ்க்கையில் முன்னேற்றிய துணை முதல்வர் உதயநிதி, தன் பிள்ளை உதயநிதியைத் தனது ஆட்சியில் முன்னேற்றிய முதல்வர் ஸ்டாலின், ஆகியோரின் முன்னுதாரணங்களை அறியாத சிறுமியை நாம் மன்னித்து விடலாம்.

 

 

 

2. கேள்வி: தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தேர்வு எழுதியவர்களில் 85,000 பேர் தாய்மொழியான தமிழில் - 10ம் வகுப்பு நிலைத் தமிழில் - நாற்பது சதவிகித மார்க் கூட வாங்க முடியாமல் பெயில் ஆகி உள்ளனரே?


பதில்:
அமெரிக்காவின் பள்ளிக் கல்விக்கு இணையாகத் தமிழகத்தின் பள்ளிக் கல்வி வளர்க்கப் பட்டிருக்கிறது. அந்த நாட்டில் பள்ளிப் படிப்பு முடித்த தமிழ்க் குடும்ப மாணவர்களும், நீங்கள் குறிப்பிட்ட தமிழ்ப் பாடத்தில் தேர்வு எழுதினால் பெயில் ஆவார்கள்.

 

 

 

3. கேள்வி: பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பொது மேடையிலிருந்து, "நான் வயிறு எறிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது" என்று அவர் மகன் அன்புமணிக்குச் சொல்லி இருக்கிறாரே?


பதில்:
இதைக் கேட்கவும் இது பற்றிப் பேசவும் வருத்தமாக இருக்கிறது. வயது ஆக ஆக, "என் சக்தி குறைகிறதா, என்னைச் சுற்றியுள்ள இளவயதினரின் சக்தி அதிகரிக்கிறதா, எனக்கும் அவர்களுக்குமான சிந்தனை-இடைவெளி நீள்கிறதா" என்று ஒருவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை ஆம் என்றால், அந்த மனிதர் கௌரவமாக ஒதுங்க வேண்டும். இல்லையென்றால் வருந்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் இதை உணரவில்லை. அன்புமணி அமைதி காத்து செயல்படுவது பாராட்டத் தக்கது.

 

 

 

4. கேள்வி: "தமிழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து ஒன்றிய பாஜக அரசு பொறாமைப் படுகிறது" என்று, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக எம்.பி-க்கள் கூட்டத் தீர்மானத்தில் சொல்லப் பட்டிருக்கிறதே?

பதில்:
அந்தத் தீர்மானத்தில், ஒன்றிய பாஜக அரசு என்றால் பிரதமர் மோடி என்று அர்த்தமாகும்.

 

உண்மையில், உலகத் தலைவர்களே தமிழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் படுகிறார்கள். மத்திய அரசை வழி நடத்தும் மோடியும் அவர்கள் மாதிரி தமிழக வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்வதால், உலகத் தலைவர்கள் பலரும் மோடியின் பொறாமையில் இயற்கையாக ஒன்றுபடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் அவ்வப்போது மோடியை வாயாறப் பாராட்டி, தமிழக வளர்ச்சியின் மீதான தங்கள் பொறாமையை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். நாம்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

 

 

5. கேள்வி: தமிழக கவர்னர் ரவியை, பயங்கரவாதி என்று வர்ணித்திருக்கிறாரே சபாநாயகர் அப்பாவு?


பதில்:
யார் யாரை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். ஆயுதம் தாங்கிய சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள், அவர்களை அடக்க வரும் துணை ராணுவத்தினரை பயங்கரவாதிகள் என்று சொல்லலாம்.

 

 

பகுதி 20 // 30.11.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment