Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (06.11.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: பகுத்தறிவு, பட்டறிவு - சிறு குறிப்பு தரவும்.


பதில்:
திராவிட மாடல் தலைவர்களிடம் பொய்யாக நிறைந்திருப்பது பகுத்தறிவு. தமிழக மக்களிடம் உண்மையில் குறைவாக இருப்பது, பட்டறிவு.

 

 

 

2. கேள்வி: திமுக-வின் தலைவர்கள், தமிழகத்தில் வேலை செய்யும் எண்ணற்ற பீஹார் மக்களை இழித்துப் பேசி இருக்கிறார்கள். பீஹாரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அந்த ஊர் மக்களிடம் திமுக-வின் அநாகரிகப் பேச்சை அம்பலப் படுத்தினார். உடனே தமிழக முதல்வர் ஸ்டாலின், "பீஹாரில் பேசியதைத் தமிழ்நாட்டுக்கு வந்து பேச மோடிக்குத் தைரியம் இருக்கிறதா?" என்று சவால் விடுகிறாரே?


பதில்: சுரத்தில்லாத சவால். 'தமிழகத்தின் திமுக தலைவர்கள் பீஹார் மக்களை இழிவு செய்கிறார்கள், அதை இண்டி கூட்டணியின் மற்ற உறுப்பினர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள்' என்பதைப் பிரதமர் எங்கு சொல்லவேண்டும்? பீஹாரில் உள்ள மக்கள் முன் சொல்வது சரி, அதையும் தேர்தல் சமயத்தில் சொல்வது பயனுள்ளது. அதைத் தமிழகம் வந்து அவர் பேசுவதில் பயனில்லை.


பீஹார் மக்கள் குறித்துத் தமிழகத்தில் அநாகரிகமாகப் பேசிய திமுக தலைவர்கள், அதையே பீஹாருக்குச் சென்று பேசுவார்களா? அதற்கான தைரியம் இருக்கிறதா?

 

 

 

3. கேள்வி: ஹரியானாவில் நடந்த சென்ற சட்டசபைத் தேர்தலில் 28 லட்சம் போலி வாக்காளர்களின் உதவியுடன் பாஜக வெற்றி பெற்றது என்றெல்லாம் ராகுல் அதிரடியான குற்றச்சாட்டுகள் சொல்கிறாரே?


பதில்:
ராகுல் காந்தி, நேரு குடும்பத்து வாரிசு என்பதால் அவர் மத்தியில் ஆளும் பாஜக மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் பொதுவெளியில் என்ன குற்றம் சொன்னாலும் அதற்கு மீடியாவில் உடனடி வெளிச்சம் கிடைக்கும். அதாவது, டிரைவர் உள்ள ஏசி காரில் ஒரு பத்து கிலோமீட்டர் ஹாயாகப் பயணம் செய்வது மாதிரி இது ராகுலுக்கு சுகமானது.


மாறாக, ராகுல் காந்தி கோர்ட்டுக்குச் சென்று தனது குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு ஆதாரம், நிரூபணம் என்று கேட்டுப் பிழிந்தெடுப்பார்கள். அங்கு ராகுலுக்குக் கிடைக்கும் அனுபவம், அவர் பத்து கிலோமீட்டர் வேகு வேகென்று வெறுங்காலில் வெயிலில் நடப்பது மாதிரி - அப்போது அவரது பயணம் நிறைவு பெறுமா என்பதே நிச்சயமில்லை. ராகுலுக்கு எப்போதும் டிரைவர் ஓட்டும் ஏசி காரில் ஹாயாகச் செல்வது பிடிக்கும்.

 

 

 

4. கேள்வி: விஜய்தான் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று த.வெ.க அறிவித்துவிட்டது. அடுத்தது என்ன?

 
பதில்:
பாஜக, திமுக, இரண்டு கட்சிகளையும் விஜய் எதிர்க்கிறார். பலம் குறையும் அதிமுக-வை உதாசீனம் செய்கிறார்.


பாஜக-வின் சிந்தனைத் தெளிவு மற்றும் தேசநலப் பார்வை விஜய்யிடம் இல்லை. வரவும் வராது. திமுக-வின் நிர்வாக அமைப்பு, பெரிய பைகள், சுழலும் கைகள், அவரிடம் இல்லை - இவை அனைத்தும் கிடைக்கத் தனி டெக்னிக்குகள் தேவை, தலைமுறைகளும் ஆகும்.


'இழுத்துப் பார்ப்போம். வந்தால் மலை, இல்லாவிட்டால் சினிமா' என்று விஜய் நினைக்கிறார். ரஜினியும் கமலும் அப்படிச் சில அடிகள் எடுத்து வைத்தார்கள். ரஜினி பின்வாங்கி விட்டார். 'திமுக தயவில் கிடைத்த வரை திருப்தி' என்று கமல் அதே இடத்தில் நிற்கிறார். விஜய் அதிக தூரம் வந்திருக்கிறார்.எதுவானாலும் விஜய்க்கு சினிமா இருக்கிறது. அதற்கான வயதும் இருக்கிறது. அரசியல் தமாஷ் பார்க்க மக்களுக்கும் ஆர்வம் இருக்கிறது. பார்க்கலாம்.

 

 

 

5. கேள்வி: ஒரு வரிக் கதை ஒன்று சொல்லமுடியுமா?


பதில்:
மூன்று வரிக் கதை ஒன்று உண்டு. அதை ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

"ராமர் பாலம் எழுவதற்கு உதவிய அணிலின் முதுகில், ராமர் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்ததால் அனைத்து அணில்கள் முதுகிலும் தெரிந்தன மூன்று வரிகள்!"

 

 

பகுதி 11 // 06.11.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

No comments:

Post a Comment