Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (06.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "மதுரைக்கு எந்த அரசியல் தேவை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி அவரே பதிலும் சொல்லி இருக்கிறாரே?

பதில்:
கோர்ட் உத்தரவு இருந்தாலும், கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. இதற்காகத் திமுக அரசு குயுக்தியாகச் செயல்பட்டு, கோர்ட்டுடன் கண்ணாமூச்சி விளையாடியது. பிறகு, தீபத்தூண் என்பது தீபம் ஏற்றுவதற்காக நிறுவப் பட்டதல்ல, அது வெறும் சர்வே கல் என்று கனிமொழி மூலம் ஒரு கதையும் சொல்கிறது. மதுரைக்கு இதெல்லாம் எந்த அரசியல்? கயமை, கண்ணாமூச்சி, கட்டுக் கதை.

 

 

 

2. கேள்வி: "திமுக அரசு பக்தர்களை மதிக்கிறது" என்று அமைச்சர் சேகர் பாபு பேசி இருக்கிறாரே?


பதில்:
திமுக தலைமையிடம் பக்தி செலுத்துபவர்களை திமுக அரசு மதிக்கும். சேகர் பாபுவை விட வேறு யார் இதை நிச்சயமாகச் சொல்ல முடியும்?

 

 

 

3. கேள்வி: "வேளாண் வணிகத் துறையில் முறைகேடு நடந்தால், சம்பந்தப் பட்ட அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறையில் பிடித்துக் கொடுத்து விடுவேன்" என்று தமிழகத்தின் அந்தத் துறைக் கமிஷனர் எச்சரித்திருக்கிறார். இது பத்திரிகைச் செய்தியாகவும் வருகிறதே?

பதில்:
அந்தக் கமிஷனருக்குத் தனது துறையில் என்ன நடக்கிறது என்பது தெரியும். தன்னைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அப்படி எச்சரிக்கிறார்.

 

தமிழகத்தின் அமைச்சர்களுக்குத் தமது துறைகளில் என்ன நடக்கிறது என்பது தெரியும். தங்களைப் பற்றியும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த அமைச்சர்கள் இது போன்ற எச்சரிக்கையை ரகசியமாகவாவது தங்கள் துறை அதிகாரிகளிடம் சொல்ல விரும்புவார்களா? நமக்குத் தெரியாது.

 

 

 

4. கேள்வி: இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக நாடுகள். ரஷ்யா கம்யூனிச நாடு. இருந்தாலும் நமக்கு அமெரிக்க அதிபர் டிரம்புடன் உறவு நேராக, சுமுகமாக, இல்லை. ஆனால் ரஷ்ய அதிபர் புதினுடனான உறவில் இரு பக்கத்திலும் அதிக நம்பிக்கை, கூடுதலான நட்புணர்வு, தெரிகிறதே, ஏன்?


பதில்:
சில உறவுக்காரர்கள் நமது உறவைத் துஷ்பிரயோகம் செய்ய நினைக்கலாம், தமது ஆதாயத்திற்காக நம் தலை மீது உட்கார நினைக்கலாம். ஆனால் சில நண்பர்கள் நம்முடன் நேர்மையான உறவில் பரஸ்பர மதிப்புடன் இருக்கலாம். அதைப் போல்தான் இது - அந்த அந்த ஆளைப் பொறுத்தது.

 

 

 

5. கேள்வி: பிரதமர் நேரு, பிரதமர் மோடி, இருவரையும் ஒப்பிட்டு இன்னும் ஏதாவது சொல்ல முடியுமா?


பதில்:
இருவரும் அவரவர் காலத்து மணிகள். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவருக்கு நாட்டமில்லாத விஷயம் - அம்மணி.

 

 

பகுதி 22 // 06.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment