Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (28.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "எங்களிடம் இருக்கும் கோவணம், சுயமரியாதை மட்டும்தான். அதையும் விட்டுவிட வேண்டுமா?" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பி இருக்கிறாரே?


பதில்:
இந்தக் கடைநிலை வரை காங்கிரஸ்க்கு ஆடை குறைக்கப் பட்டது அந்தக் கட்சிக்கு மகிழ்ச்சியா? இதற்குமேல் மட்டும் தங்களுக்குத் ஆடைக் குறைப்பு செய்விக்க வேண்டாம் என்று திமுக-விடம் சொல்கிறாரா செல்வப் பெருந்தகை? காங்கிரஸ் கட்சியினரின் சுயமரியாதை மெய்சிலிர்க்க வைக்கிறது!

 

 

 

2. கேள்வி: "இன்னும் ஆறு மாதத்தில் மத்திய அரசு கவிழும்" என்று காங்கிரஸ் தலைவர் கார்கே சமீபத்தில் கருத்து சொல்லி இருக்கிறார். எந்த நம்பிக்கையில் அதைச் சொன்னார்?


பதில்: தான் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப் பட்டதற்கான தினசரி நன்றியை, ஆறு மாதத்திற்கு அட்வான்சாக ராகுல் காந்தியிடம் இப்படிச் செலுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் தான்!

 

 

 

3. கேள்வி: எந்தத் கூட்டணியிலும் சேராமல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே தேர்தல்களில் போட்டியிட என்ன காரணம்?


பதில்:
கூட்டணி வைக்காமல் தங்கள் தலைமையில் ஆட்சி அமைக்க முடியாது என்று பெரிய கட்சிகள் திமுக மற்றும் அதிமுக அறிகின்றன. கூட்டணியில் இருந்தால்தான் தங்களுக்குச் சில எம்.எல்.ஏ, எம்.பி-க் கள் தேறுவார்கள் என்று பிற கட்சிகளுக்குத் தெரியும். இருந்தும் சீமான் தனித்தே போட்டியிட விரும்பினால், அர்த்தம் இதுதான். சீமான் பிராண்ட் அரசியலின் தனிப் பயன்கள் அவருக்குத் தெரியும். அவர் சினிமா டைரக்டராக இருந்ததால், அப்படியான பயன்களை மறைக்கும்படி நடிக்கவும் தெரிந்தவர் அவர்.

 

 

 

4. கேள்வி: தமிழகத்தில் வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்துத் தன் கட்சியினருக்குக் கடிதம் எழுதி இருக்கும் ஸ்டாலின், "உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோரின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டால், பாஜக-வும் அதன் கூட்டாளியான அதிமுக-வும் வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றன" என்று சொல்லி இருக்கிறாரே?

 
பதில்:
வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜக அப்படி நீக்கப் போகும் பெயர்களில், பெண்களோடு சேர்த்து ஆண்கள் பிரிவையும் ஏன் ஸ்டாலின் குறிப்பிடவில்லை? பாதிக்கப்பட இருக்கிறவர்கள் என்று ஆண்களையும் அவர் மொத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னால், 'திமுக குரல் கொடுப்பதால் தமிழகத்தில் எந்த வாக்காளரும் ஓட்டளிக்க முடிகிறது. ஆகையால் எல்லா மக்களும் நன்றி உணர்வுடன் திமுக-வுக்கு ஓட்டுப் போடவேண்டும்' என்று ஸ்டாலின் சொல்ல நினைப்பதை முழுதாகவே சொல்லி இருக்கலாம்!

 

 

 

5. கேள்வி: வரப்போகும் பீஹார் மாநிலத் தேர்தலுக்காக இண்டி கூட்டணி சார்பில் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சட்டம் இயற்றப் படும்" என்ற வாக்குறுதியும் இருக்கிறதே?


பதில்:
இன்னொரு வாக்குறுதியையும் அவர் சேர்த்துச் சொல்லி இருந்தால் இந்தி கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். "கடந்த பத்து வருடங்களில் வேலை இல்லாமல் இருந்த பீஹார் இளைஞர்கள், அந்த வருடங்களில் 18 வயதைத் தாண்டி இருந்தால் அப்போதிலிருந்து அவர்கள் அரசு வேலையில் இருந்ததாகக் கணக்கிட்டு, அவர்களுக்கு அரசு சம்பள அரியர்ஸ் வழங்கும்" என்ற வாக்குறுதியை அவர் ஏனோ அளிக்கவில்லை. பீஹார் மாநிலத்தைப் போண்டி செய்ய நினைக்கும் இண்டி கூட்டணி, அதை எப்படிச் செய்தால் என்ன?

 

 

பகுதி 8 // 28.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment