Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (25.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: அரசு கொள்முதலின் பல நிலைகளில் தாமதம் ஆனதால் விவசாயிகள் வெட்டவெளியில் சேமித்து வைத்த நெல்லும், மூட்டைகளில் வெளியில் இருந்த நெல்லும், மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்து வீணாகிப் போனதே?


பதில்:
வயல்கள் தாண்டியும் விளைச்சல்! சாக்கு மூட்டையிலும் சாகுபடி! திராவிட மாடல் அரசின் சாதனை!

 

 

 

2. கேள்வி: "நாங்கள் ஈ.வெ.ரா, அம்பேத்கர், காரல் மார்க்ஸ் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொல்லி இருக்கிறாரே?


பதில்: திராவிடர் கழகத்தை ஈ.வெ.ரா தொடங்கினார். திருமாவளவன் ஏன் திராவிடர் கழகத்தில் சேர்ந்து பெரியாரின் கருத்துகளைப் பரப்பவில்லை? கார்ல் மார்க்ஸ் கொள்கையைப் பெரியார் பின்பற்றவில்லை என்பது காரணமா? நமது கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் திருமாவளவன் ஏன் சேரவில்லை? கம்யூனிஸ்டுகள் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றவில்லை என்பது காரணமா? அடுத்தது அம்பேத்கர். திருமாவளவன் அவரைப் பின்பற்றுவதாகச் சொல்வது பெரிதல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் அவ்வப்போது அப்படிப் பேசுகின்றன. இன்னொன்று. போகிற போக்கில் அண்ணாதுரை கொள்கையையும் திருமாவளவன் சேர்த்துச் சொல்லலாம். யார் கேட்கப் போகிறார்கள்!

 

 

 

3. கேள்வி: "வைகோ தன் மகனுக்காக உட்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்" என்று குற்றம் சாட்டுகிற மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, புதிய திராவிட இயக்கக் கட்சி ஆரம்பிக்கிறாராம். அவர் கட்சி எப்படி இயங்கும்?


பதில்:
மல்லை சத்யாவின் குடும்ப வாரிசு, இந்தப் புதிய கட்சியின் தலைவர் பதவிக்கு ரெடியாகும் வரை பொறுத்திருங்கள். அப்போது எல்லை ஏகாம்பரம் என்று ஒருவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவரும் ஒரு புதிய திராவிடக் கட்சியை அறிவிப்பார். இது திராவிட மாடல் பாலிடிக்ஸ்!

 

 

 

4. கேள்வி: தமிழகத்தில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து முதலில் ஜெயித்தது எம்.ஜி. ஆர். லேட்டஸ்டாக நடிகர் விஜய் வந்திருக்கிறார். இருவருக்கும் என்ன வித்தியாசம்?

 
பதில்:
எம்.ஜி.ஆர் நடித்த காலத்தில் அவரை இள வயதிலிருந்து எல்லா வயதினரும் - 70, 80 கூட - விரும்பினார்கள், நேசித்தார்கள். இதற்கான காரணங்கள் பல.

 
எம்.ஜி.ஆர் சினிமாவில் அம்மாவைப் போற்றுபவராக அடிக்கடி தோன்றினார். அதனால் அம்மாவாக இருக்கும் பெண்களை, அம்மாவை மதிக்கும் அனைவரையும், அவர் கவர்ந்தார். திரையில் அவர் புகை பிடிக்காமல் மது குடிக்காமல் இருந்தார். அதனால், அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் மட்டுமல்ல, அந்தப் பழக்கம் உள்ளவர்கள் கூட எம். ஜி. ஆரை மதித்தார்கள் - நாம் எங்கும் பார்க்கிற மாதிரி.

 
சினிமாக் கதைகளில் எம்.ஜி.ஆர் வில்லன்களுக்கு அடி பணியாமல், அவர்களின் மறைவிடம் வரை சென்று அவர்களை துவம்சம் செய்தார்.

 
இதனாலெல்லாம் எம். ஜி. ஆர் எல்லா வயதினருக்கும் ஹீரோ ஆனார். இதை ஒட்டி இருந்தது, நிஜ வாழ்க்கையில் அவரிடமிருந்த தயாள குணம். இவற்றோடு, அவருடைய மிருதுவான முகத் தோற்றமும், சிகப்பு நிறமும் அவருக்குப் பெருமை சேர்த்தன. அவர் திரையில் கோபம் காட்டும் போதும் - அது நம்பர் ஒன் நடிப்பு இல்லை என்றாலும் - அவருடைய வசீகரம் குறையவில்லை.

 
இத்தனை கவர்ச்சியும் நற்குணங்களும் உள்ள எம். ஜி. ஆர் தமிழகத்தை ஆட்சி செய்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது என்று பரவலாகப் பொதுமக்கள், அதுவும் அடித்தட்டு மக்கள், நினைத்தார்கள்.

விஜய் கதை வேறு. திரையில் ஆட்டம், பாட்டம், வீர வசனம் மற்றும் துப்பாக்கி சுடுதலால் இள வயதினரை மட்டும் ஈர்த்தவர் விஜய். தங்களின் வயது ஏற ஏற விஜய் ரசிகர்கள் அவரைப் போற்றியபடி இருப்பார்களா என்பது சந்தேகம். ஆனால் எம். ஜி. ஆரால் ஒருமுறை ஈர்க்கப் பட்ட மனிதர்கள் கடைசி வரை அப்படியே இருந்தார்கள். பொதுவாக, இளைஞர்களின் கண்களை ஈர்த்தவர் விஜய். அனைத்து மக்களின் மனதை ஈர்த்தவர் எம்.ஜி.ஆர்.

 

 

பகுதி 7 // 25.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment